2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ரூ.60 மில்லியன் செலவில் சாவகச்சேரி சந்தை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

நகர அபிவிருத்தி அதிகார சபை வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பொது திறைசேரியின் நிதி உதவியுடன் 60 மில்லியன் ரூபாய் செலவில் சாவகச்சேரி சந்தை அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் வை.ஏ.ஜி.ஏ.குணதிலக (12) புதன்கிழமை தெரிவித்தார்.

சாவகச்சேரியில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த சந்தை கட்டிடம் சரியான முறையில் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை. சாவகச்சேரியை அண்மித்த கிராமங்களிலுள்ள மக்களுக்கு இந்த சந்தை முக்கியமாக உள்ளது. எனவே முறையான சந்தையாகவும் நகரத்தை அழகாக மாற்றும் நோக்கிலும் நகர அபிவிருத்தி சபையால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 3.5 ஏக்கர்; நிலப்பரப்பில், கிழக்கு, மேற்கு ஆகிய பக்கங்களில் இரண்டு பிரதான பிரிவுகளாக சந்தைக்கான கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன. எல்லா சந்தை வியாபாரிகளையும் உள்ளடக்குவதற்கு ஏற்ற வகையில் இது அமையவுள்ளது.

அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தைக்கு வரும் பொதுமக்களின் வாகன தரிப்பிடம், பொருட்களை ஏற்றி இறக்கும் தளம், மலசல கூடம் ஆகியன அமைக்கப்படுவதுடன் சந்தையை அழகுபடுத்துவதற்காக பூ மரங்கள் சந்தையை சுற்றி நாட்டப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சகல வசதிகளும் உள்ள சந்தையாக சாவகச்சேரி சந்தை அமையவுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கான சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த சந்தை அமைக்கப்படவுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சந்தைக்கான வேலைத்திட்டமானது இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும் என குணதிலக மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .