2025 மே 08, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டமும் பணிப்பகிஷ்கரிப்பும்

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெங்கு நுளம்பு பரிசோதனைக்காகச் சென்ற உத்தியோகஸ்தர்களை ஏசித்துரத்திய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநகர சபை முன்றலில் இன்று (21) காலை ஆர்ப்பாட்டமொன்றையும் பணிப்பகிஷ்கரிப்பும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கு பற்றினர். அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பொது சுகாதார பரிசோதகர்களும் உடன் இருந்தனர்.

நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவைச் சேர்ந்த ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (20) பெரியமுல்லை, சோனகத் தெருவில் இடம்பெற்றுள்ளது. டெங்கு நுளம்பு பரிசோதனைக்காகச் சென்ற உத்தியோகஸ்தர்களை பிரதேசவாசிகள் ஏசித்துரத்திய சம்பவம் வெள்ளிக்கிழமை (20) மங்குளிய தேவலயம் அருகில்  இடம்பெற்றுள்ளது.

இந்த 2 சம்பவத்துக்கும் எதிராக இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

இது தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

'பெரியமுல்லை பிரதேசத்தில் வைத்து கழிவகற்றும் பிரிவைச் சேர்ந்த ஊழியரான ஜயதிலக்க பெர்னாந்து (40 வயது)

என்பவர் தாக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மாநகர சபை பிரிவில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் போது, எமக்கு நீதிமன்றத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பிளாஸ்திக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் என வகைப்படுத்தி ஒதுக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறோம்.

நேற்று பெரியமுல்லை, சோனகத் தெருவில் குப்பைகளை அகற்றச் சென்ற ஊழியர்கள் இது தொடர்பாக குப்பையை அகற்ற வந்த ஒருவருக்கு கூறிய போதே, அந்த ஊழியர் பிரதேசவாசிகள் சிலரால் குப்பையினாலும்; கைகளினாலும் தாக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று மங்குளிய பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரிசோதனைக்காகச் சென்ற உத்தியோகஸ்தர்களை ஏசித்துரத்திய சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இந் 2 சம்பவம் தொடர்பாகவும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு நீர்கொழும்பு மாநகர மேயர் அன்டனி ஜயவீர, பிரதி மேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லா, நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  பியசிறி பெர்ணாந்து ஆகியோர் வருகைத் தந்தனர். இதன்போது, பெரியமுல்லை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னொருவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  பியசிறி பெர்னாந்து தெரிவித்தார்.

இதனையடுத்து 11 முற்பகல்  மணியளவில் தமது வேலை நிறுத்தத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நிறைவுக்கு கொண்டு வருவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X