Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
அனுதினன் சுதந்திரநாதன் / 2020 மே 11 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக, மேல்மாகாணத்தின் பெரும்பான்மையான பிரதேசங்கள், சுமார் இரண்டு மாதங்களாக முடக்கநிலைக்குள்ளேயே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 46 சதவீத பங்களிப்பை வழங்குகின்ற இந்த மாகாணத்தின் முடக்கநிலை, பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால்தான், கொரோனா வைரஸின் அபாயமிருக்கின்ற போதிலும், மேல்மாகாணத்தை அதிகுறைந்த அளவில், செயற்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில், அரசாங்கம் ஈடுபட்டு இருக்கிறது. அரசாங்கத்தின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால், ⅔ பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளுவதற்காக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென்கிற அரசியலும் கலந்துள்ளது. இருந்தபோதிலும், நீண்டகால அடிப்படையில், மேல்மாகாணத்தை முடக்கநிலையில் வைத்திருப்பது, இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அப்படியாயின், இந்த ஊடரங்குத் தளர்வின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையின் பொருளாதாரத்தில் எத்தகைய விளைவுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்பதையும் தனிநபர் ரீதியாக, இலங்கையின் எந்தவொரு பாகத்தில் வாழ்ந்தாலும், எதிர்வரும் நாள்களில் எத்தகைய நிலைமைகளுக்கு எம்மைத் தயார்படுத்திக்கொண்டு, முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதும் அவசியமாகிறது.
ஒட்டுமொத்த இலங்கையுமே, விவசாயத்துறை சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, கைத்தொழில், சேவைத்துறை சார்ந்த பொருளாதாரமாக மாற்றமடையத் தொடங்கி, நீண்டகாலமாகி விட்டது. இதனாலேயே, இலங்கையின் பொருளாதாரத்தில், கொழும்பை அண்டிய மேல்மாகாணப்பகுதி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றமடைந்து இருக்கிறது.
இலங்கை, விவசாயத்துறை சார்ந்த பொருளாதாரமாக இருந்த நிலையிலும் பார்க்க, சேவை, கைத்தொழில் சார்ந்த பொருளாதாரமாக மாற்றமடைகின்றபோது, அதனால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையானது அதிகமானதாக இருக்கிறது. காரணம், இந்தத் துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன் கணக்கானோர் தொடர்புபட்டவர்களாக இருக்கிறார்கள்.
உதாரணமாக, சேவைத்துறைக்குப் பங்களிப்புச் செய்கின்ற ஐந்து நட்சத்திர விடுதியொன்று, கொழும்பில் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அங்கே வேலை செய்யக்கூடிய கடைநிலை ஊழியர் கருணாகரன், மட்டக்களப்பைச் சேர்ந்தவராக இருப்பார். கிளிநொச்சியில் மரக்கறித் தோட்டம் செய்கின்ற மாதவன் ஐயா, கொழும்பிலுள்ள குறித்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு மரக்கறியை விநியோகம் செய்பவராக இருப்பார்; மயூரன், திருகோணமலையில் இருந்து ஆற்று நண்டையும் புதிய மீன்களையும் வழங்குபவராக இருப்பார். ஜயசேன, ஹம்பாந்தோட்டையிலிருந்து தயிர் கொண்டுவருபவராக இருப்பார். எனவே, கொரோனா வைரஸ் பரவுகை காரணமாக, குறித்த நட்சத்திர விடுதி பூட்டப்படுகின்றபோது, தங்களின் வருமானத்தை இழக்கின்ற முதல்நிலை வட்டத்துக்குள் இவர்கள் சிக்கிக்கொள்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை, நாளாந்தம், மாதாந்தம் ஆகியவற்றுக்கா செலவுகளைக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கே, சேமிப்பைக் கொண்டிருப்பார்கள். மிகுதியைத் தமது தொழிலில் முதலீடு செய்திருப்பார்கள்.
எனவே, இவர்களைப் போன்றவர்களுக்கு இந்த ஊடரங்குக் காலப்பகுதியும், அதற்குப் பின்னரான காலப்பகுதியும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கப்போகிறது. அப்படியாயின், இவர்களின் நிலை என்ன? எதிர்வரும் காலப்பகுதியில், இந்தச் சேவைத்துறை, கைத்தொழிற்றுறை ஆகியன முழுமையாக இயங்கும்வரை, இவர்களது வருமானம், வாழ்க்கைநிலை போன்றவற்றுக்கு, யார் பொறுப்பாக இருக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது.
இலங்கை தன்னகத்தில், கிட்டதட்ட எட்டு மில்லியன் தொழிலாளர் படையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதில், பாதிக்கும் மேலானவர்கள் ஓர் உறுதியான ஒப்பந்தத்தைக் கொண்டிராத தொழிலார்களாக இருக்கிறார்கள். அதாவது, நாட்டின் நாளாந்த செயற்பாடுகளுக்கு மிக முக்கியமான ஆனால், காலங்காலமாக யாராலும் கவனிக்கப்படாமல், கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கக்கூடியவர்களாகக் காணப்படுகிறார்கள்.
இந்தத் தொழிற்படையில், மலையகத் தொழிலாளர் முதல், கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் உட்பட, வெள்ளைக்காற்சட்டை உத்தியோகம் என்று சொல்லத்தக்க வகையில் வேலைசெய்யும் பலரும் ஒப்பந்தமொன்று இல்லாமல் வேலை செய்யும் பிரிவுக்குள்ளேயே அடங்குவார்கள்.
ஒரு பொருளாதாரத் தாக்கம் வருகின்றபோது, முதலில் பாதிக்கப்படும் தனிநபர்களாக இவர்கள்தான் இருப்பார்கள். காரணம், இவர்களுக்கும் இவர்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் இடையில் எந்தவொரு சட்ட ரீதியான ஒப்பந்தத்தையும் காணமுடியாது. எனவே, நிறுவனம், தனது செலவுகளைக் குறைக்கும் முயற்சியின்போது, மிக இலகுவாகக் கைவைக்கக் கூடிய, சட்ட ரீதியான பாதுகாப்பு அற்றவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
அண்மையில், இலங்கையின் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள், மூன்று மாதச் சம்பளமின்றி வீட்டிலிருப்பது பற்றி அறிந்திருப்பீர்கள். இவர்களை கூட, இதற்குள் சேர்த்துக்கொள்ள முடியும். அப்படியாயின், கொரோனா வைரஸ் வரவுகைக்குப் பிறகு, இவர்களின் நிலை எவ்வாறானதாக இருக்கப்போகிறது?
இவர்களுக்கு அடுத்ததாக, இந்தக் கொரோனா வைரஸ் பரவுகையின் தாக்கத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்ட, அடுத்தகட்ட நிலையில் இந்த நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த, மாதாந்த வருமானத்தை எதிர்பார்த்துத் தொழிலை நடத்துகின்ற அல்லது, தொழில் புரிகின்றவர்கள் இருக்கப்போகிறார்கள்.
இலங்கைலுள்ள தொழிலாளர் சட்டத்தால் இவர்கள் பாதுகாக்கப்பட்டவர்களாக இருக்கின்றபோதிலும், இவர்கள் கடமையாற்றிய நிறுவனத்தால் தொடர்ந்தும் இயங்க முடியாதநிலையொன்று வருகின்றபோது, இவர்களால் மாதாந்த வருமானத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். சட்ட அடிப்படையில் கொடுப்பனவுகளையும் இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள நீண்டகாலம் செல்லக்கூடிய நிலையில், குறிப்பிட்ட காலத்தில் அவர்களது நிலை என்ன, என்கிற கேள்வி வராமலும் இல்லை. எனவே, இவர்களின் அடுத்தகட்ட வாழ்வியல், எவ்வாறான தளத்தில் இருக்கப் போகிறது என்பதும் முக்கியமானதாக அமைகிறது.
இன்றைய நிலையில், பல சர்வதேச நாடுகளில் வேலையிழந்தோர் நிதிக்காக, பல மில்லியன் தொழிலாளர்கள் விண்ணப்பித்துக் கொண்டிருப்பதைச் செய்திகளின் ஊடாகப் பார்க்கின்றோம். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், அப்படியான பொறிமுறையோ, அத்தனை பேருக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்கக்கூடிய நிதிநிலைமையோ இல்லை என்பதே, உண்மையாக இருக்கிறது.
இதற்கும் மேலாக, அரசாங்கத்தில் பதவிவகிக்கும் ஊழல் மற்றும் மனிதாபிமானமற்ற அரச ஊழியர்களால், இப்படியான திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் போய் சேருமா, என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, தற்போது வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவான 5,000ஃ- ரூபாவைச் சொல்ல முடியும். இந்தக் கொடுப்பனவு, உண்மையில் பாதிக்கப்பட்ட எத்தனை மக்களைச் சரியாகச் சென்றடைந்தது என்கிற கேள்விக்கு, நிறைய முறைப்பாடுகளே பதிலாக இருக்கிறது.
இலங்கை முழுவதும், சுமார் 14,000க்கும் மேற்பட்ட கிராமஅலுவலர் பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முறையோ, இவர்களை முறையாக நெறிப்படுத்திக் கண்காணிக்கும் பொறிமுறையோ, இலங்கை அரசாங்கத்திடம் இதுவரை இல்லை. இதனால், இவர்கள் ஊடாக, மக்களுக்கு வழங்கப்படும் நிதி திட்டங்கள், உரியவர்களைப் போய்ச் சேருகின்றதா, எனத் தெரியாத நிலையொன்றில் அரசாங்கமும் சரி, மக்களும் சரி இருக்கின்றார்கள். எனவே, எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், அது உரியவர்களைப் போய்ச் சேருகின்ற வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு, இலங்கை அரசுக்கு இருக்கிறது.
இதைத் தவிர்த்து, இலங்கை அரசாங்கமானது, நிதியியல் ரீதியான சலுகைகளை மக்களுக்கு வழங்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டதாகும். தற்போது, வங்குரோத்து நிலையிலுள்ள அரசாங்கம், வங்கிகளின் மூலமாக, ஓரளவுக்குத் திறம்பட செயற்படுத்துகிறது என நம்பலாம். உதாரணமாக, தனிநபர் கடன் மீள்செலுத்துதலை, வங்கிகள் தற்காலிகமாக நீடித்து இருக்கின்றன. நீண்டகாலத்தில், அதிக வட்டியைச் செலுத்தி, கடனை மீள்செலுத்த வேண்டிய நிலை இருக்கின்றபோதிலும், தற்போதைய நிதியியல் பிரச்சினைகளில், அடிமட்ட மக்களுக்கு இதுவொரு தீர்வாக இருக்கும்.
அதுபோல, சிறிய, நடுத்தர வணிகங்களுக்கு மேலதிக நிதி கடன்களையும் தற்போதுள்ள கடன்களை மீள்ஒழுங்கு செய்வதற்கான வழிமுறைகளையும் இலங்கை மத்திய வங்கி மூலமாக, அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அத்துடன், கடனுக்கான வட்டி வீதக் குறைப்புகளையும் மேற்கொண்டுள்ளது.ஆனால், இலங்கையின் வணிக வங்கிகள், அதைச் சரிவர நடைமுறைப்படுத்தாத நிலை காணப்படுவதாக, இலங்கை மத்திய வங்கியே விமர்சிக்கின்ற நிலையில், இந்தத் திட்டங்கள் அமைந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
குறிப்பாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இலாபம் பார்க்கும் வணிக வங்கிகள் இல்லாமல் இல்லை. தற்போதைய நிலையில், வங்கிச் செயற்பாடுகளை இணையத்தில் மேற்கொள்ளுவதே பொருத்தமானதாக இருக்கும். ஆனால், அதற்கான எவ்வித கட்டண விட்டுக்கொடுப்பையும் எந்த வணிக வங்கியும் செய்யத் தயாராகவில்லை. இது, எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை இலாபமென வணிக வங்கிகள் காலகாலமாகச் செயற்படுகின்ற மனநிலையைக் காட்டி நிற்கின்றது. இவற்றையும் நெறிப்படுத்த வேண்டிய, மக்களின் நலன் கருதிச் செயலாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது.
ஒரு முறையான அரசாங்கம் இல்லாதநிலையில், இவை எல்லாவற்றையும் ஜனாதிபதியும் பிரதமருமே செய்யமுடியுமா என்கிற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆனால், ஒரு முறையான அரசை அமைக்கின்ற சட்ட அடிப்படைகள் இருக்கின்றபோதிலும், அவற்றைச் செய்யாது, தங்கள் அரசியல் நலனைப் பெறத் துடிக்கும் இவர்கள் இருவரும், இதைச் செய்தேதான் ஆகவேண்டும். இதற்கென, யாரையும் குறை சொல்ல முடியாது.
தற்போதை நிலையில், உயர், நடுத்தர வருமானத்தைப் பெறுகின்ற நாடாக, சர்வதே நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றால் இலங்கை வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த நிதியியல் நிறுவனங்களிடமிருந்து, அரசுக்கான நிதிகளைப் பெறுவது இலகுவான காரியமல்ல. இதனால்தான், வெளிநாட்டு உதவிகளைப் பெற முடியாதநிலையில், சுமார் 300 பில்லியன் புதிய நாணயங்களை, அரசாங்கம் அச்சிட வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. அத்துடன், இலங்கையின் வரவு-செலவுத் திட்டத்தில், திட்டமிட்ட கடன் பெறும் நிலையையும் அரசாங்கம் எட்டிவிட்டது.
இதனால்தான், அரச நிதியியல் சுமையைக் குறைக்க, அரச ஊழியர்களின் வேதனத்தை விட்டுத்தருமாறு கேட்கின்ற வங்குரோத்து நிலைக்கு, இலங்கை அரசு வந்திருக்கிறது. சில சமயங்களில், ஒருசில நாள்களுக்கான மேமாதக் கொடுப்பனவை, அரச ஊழியர்கள் விட்டுக்கொடுக்கின்ற நிலை வரலாம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்ற சந்தர்ப்பத்தில், இதைச் செய்வது தங்கள் அரசியல் இலாபத்தில் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்துமென ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தாலும், இவர்களுக்கு வேறு வழிவகையொன்று இல்லை என்பதையே, அண்மைக்கால செயற்பாடுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
அப்படியாயின், அரச உதவிகள் கூட, தற்போதைய அரச நிதிநிலைமைகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிநபர்களாகக் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது எம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்பதைக் கவனத்தில் கொள்ளுவது அவசியமாகிறது.
நாளாந்த வருமானத்தையும் மாதாந்த வருமானத்தையும் எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் குடும்பங்களும் எவ்வகையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை, அடுத்த வாரம் பிரசுரமாகும் இந்தப் பத்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
43 minute ago
1 hours ago