2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு DFCC வங்கி வழங்கும் நிதியியல் சலுகைகள்

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையான சேவைகளையும் வழங்கி வருகின்ற ஒரு வர்த்தக வங்கியான DFCC வங்கி, தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உலகரீதியாக பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் மூலமாக இலங்கை அரசு முன்மொழிந்துள்ள நிவாரண வழிகாட்டுதல்களுக்கு இணங்க, நிதியியல் ரீதியான சலுகைகளை வழங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுமிக்க தீர்மானத்தை எடுத்துள்ளது.

தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடியின் விளைவாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரஜைகளுக்கு உதவுவதற்கான வழிகாட்டல் அறிவுறுத்தல்களை இலங்கை மத்திய வங்கியானது இலங்கையிலுள்ள வணிக வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. உலகளாவில் பரவிவருகின்ற மேற்குறிப்பிட்ட தொற்று இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,  இதனை மேலும் பரவ விடாது, அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு போன்ற பல நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமானது முன்னெடுத்துள்ளது. இருப்பினும், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, சமூக அந்தஸ்து வேறுபாடுகளுக்கு அப்பால் பெரும்பாலான குடிமக்களின் அன்றாட வருமானம் பாதிக்கும் நிலை எழுந்துள்ளது.

இதன் விளைவாக, தற்போது எழுந்துள்ள நிதியியில் ரீதியான சுமைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் நிதிச் சலுகைகளை DFCC வங்கி வழங்கவுள்ளது. தற்காலிக மேலதிகப்பற்று வசதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கடன்கள், பிற குறுகிய கால கடன் வசதிகள் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், மார்ச் 25 இல் காலாவதியாகவிருந்த நிரந்தர மேலதிகப்பற்று வசதிகள் செப்டெம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் திரும்பிய காசோலை மற்றும் காசோலையை நிறுத்தம் செய்வதற்கான கட்டண அறவீடுகள் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை விதிக்கப்படமாட்டாது. சிறு, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், சுற்றுலாத்துறை, ஏற்றுமதி தொடர்பான நேரடி, மறைமுக வணிகங்கள், தகவல் தொழில்நுட்பம், பெருந்தோட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிகங்களுக்கு நிவாரணமாக 6 மாத நீட்டிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. வணிகத் துறைகளுக்கு ஆண்டுக்கு 4மூ என்ற குறைந்த வட்டி வீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன் வசதிகள் வழங்கப்படும். கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணமானது, மே மாதம் 11 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், தாமதக் கொடுப்பனவுகளுக்கான அறவீடானது செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை விலக்களிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச கடனட்டைக் கொடுப்பனவுத் தொகையானது 5% இலிருந்து 2.5%  ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், வாடகை வண்டிகளுக்கான குத்தகை வசதிகளின் மீள்கொடுப்பனவுக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டிய காலம் செப்டெம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூபாயு் 1 மில்லியன் வரையான தொகை கொண்ட குத்தகை வசதிகளுக்கான சலுகைக் காலமானது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், மார்ச் 31ஆம் திகதி வரை மீட்கப்படாத அடகுப் பொருள்களை மீட்கும் காலம் மேலும் 6 மாதத்துக்க நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு DFCC வங்கி வாடிக்கையாளர்கள் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வங்கிக்கு முறையான கோரிக்கை கடிதங்களை முன்வைக்க வேண்டும். இந்த நிலைமை குறித்து DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், 'பெறுமதிமிக்க எங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த கடினமான காலகட்டத்தில் மேற்குறிப்பிட்ட சலுகைகள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் மிகுந்த பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X