Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 17 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு மாதங்களுக்கு மேலாக, நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர வியாபாரங்கள் மூடப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளதாக, இலங்கை தொழில் திணைக்களம் மேற்கொண்டிருந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில், அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் ஊடாக, மூடப்படும் நிலையை எதிர்நோக்கியிருந்த வியாபாரங்களுக்குத் தமது செயற்பாடுகளை மீளக்கட்டமைத்துக் கொள்ள ஏதுவாக இருந்ததுடன், குறித்த வியாபாரங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வழிகோலி இருந்ததாகத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளித்த இந்த ஆய்வறிக்கையை, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் மீளாய்வு செய்து, மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களை மீட்பதற்காக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் மத்தியில், தொழில் திணைக்களம் இணையத்தின் ஊடாக ஆய்வை மேற்கொண்டு இருந்ததுடன், 2,000க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்று, அவசியமான தரவுகளைப் பதிவு செய்திருந்தன.
மொத்தமாக 2,764 தனியார் துறை நிறுவனங்கள், இந்த ஆய்வுக்குப் பதிலளித்து இருந்ததுடன், இதில் 58.59 சதவீதமானவை கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
சகல பொருளாதார செயற்பாடுகளையும் சேர்ந்த, சர்வதேச தர தொழிற்றுறை தரப்படுத்தலுக்கு அமைவான சகல 21 வகையான தொழிற்றுறைகளும் இந்த ஆய்வில் உள்வாங்கப்பட்டு இருந்ததுடன், உற்பத்தித்துறை முன்னிலை வகித்திருந்தது. இந்த ஆய்வில், பதிலளித்த மொத்தக் குழுவில் 28.65 சதவீதமானவர்கள் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்களாக அமைந்திருந்தனர்.
இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 53 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள், தமது வியாபார செயற்பாடுகளை மூடியிருந்தன. முழுமையாக இயங்கும் நிலையில் மூன்று சதவீதமான நிறுவனங்கள் மாத்திரமே காணப்பட்டன.
ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில், பெப்ரவரி மாதத்தில் மொத்தமாகப் பணியாற்றியிருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 596,022ஆக காணப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்திய காலப்பகுதியில் இதில் 64.26 சதவீதமான ஊழியர்களுக்குப் பணி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
1,084 நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்குச் சம்பளத்தை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தன.
ஆய்வின் கண்டறிதல்களின் பிரகாரம், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்பட்ட மூலதனக் கடனைப் பெற்றுக் கொள்வதில் இரண்டு சதவீதமான நிறுவனங்களுக்கு மாத்திரமே முடிந்திருந்தது. 48.11 சதவீதமான நிறுவனங்கள், தமது விண்ணப்பங்களுக்கான பதில்களை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆய்வு பெறுபேறுகளினூடாக, துறைசார் இடையீடுகளினூடாகத் தொழில்நிலை, வியாபார நிலைபேறாண்மையைப் பாதுகாக்கும் வகையில், வியாபாரங்களை மீட்சிக்கு உட்படுத்துவதற்கான தேவை உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினூடாகத் திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு, வினைதிறன் வாய்ந்த, இலக்கு வைக்கப்பட்ட, முறையாக வடிவமைக்கப்பட்ட பதில்களை, அரசாங்கத்தால் வழங்குவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும் என்பதுடன், பாதிக்கப்பட்ட தனியார் துறை நிறுவனங்களுக்குக் குறுங்கால அடிப்படையில் நிதிசார் உதவிகளையும் இதர உதவிகளையும் பெற்றுக் கொடுக்கவும் ஏதுவாக அமைந்திருக்கும் எனத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறுங்கால அடிப்படையில், தொழில் எதிலும் ஈடுபட முடியாத நிலையில், சம்பளக் குறைப்புடன் தமது வீடுகளில் தங்கியிருக்கச் செய்து, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் பேணுவதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வியாபாரங்களுக்கு இழப்பு, சமூகத் தூரப்படுத்தல் தேவைப்பாடுகள் காரணமாக, ஊழியர் ஒருவருக்குக் குறைந்தளவு மணித்தியாலங்கள் மாத்திரம் பணியாற்ற வேண்டியிருந்தால், ஒவ்வோர் ஊழியரும் பணியாற்றிய நேரங்களின் பிரகாரம், கணக்கிடப்பட்ட கொடுப்பனவை மேற்கொள்வதற்கும் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வியாபாரங்களுக்கு தொழிற்படு மூலதனத்தை பேணுவதற்கு குறைந்த வட்டி வீதங்களை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, ‘வேலையில்லாத மணித்தியாலங்களுக்காகச் செலுத்தப்பட்ட கொடுப்பனவு’ தொகையிலிருந்து ஒரு பகுதியை மீள அறவிடுவது தொடர்பிலும் தொழில் வழங்குநர்களுக்கு அனுமதியளிப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்றுறையில் ஊழியர் சந்தையில் ஏற்படக்கூடிய எதிர்மறைத் தாக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு, சமூகக் கலந்துரையாடல் பொறிமுறையை வியாபார, துறைசார் மட்டத்தில் பேணுவது தொடர்பான பரிந்துரையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாயம் (மீன்பிடித்தொழில் அடங்கலாக), ஆடைத் தொழிற்றுறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றை நவீன மயப்படுத்துவது தொடர்பான மூலோபாயங்களைப் பின்பற்றுவது தொடர்பான பிறிதொரு பரிந்துரையும் இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
59 minute ago
1 hours ago