2025 மே 08, வியாழக்கிழமை

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்காக ‘atingi’ eAcademy அறிமுகம்

S.Sekar   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் கற்றல் தளமான ‘atingi’ eAcademy, பயனர்களுக்கு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தமது அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த e-learning தளமானது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை சார்ந்த விடயங்களில் வரிசைநிலை ஊழியர்கள், முகாமைத்துவ வல்லுநர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட தமது அறிவை மேம்படுத்த ஆர்வமுள்ள எவருக்கும் உதவுகிறது. ‘atingi’ வழங்கும் கல்வி உள்ளடக்கமானது, எதிர்கால தொழில்களுக்காக இலங்கையர்களின் தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் விடயங்களின் அடிப்படையில், ‘atingi’ eAcademy ஆனது 40 க்கும் மேற்பட்ட இடைத்தொடர்பாடல் கொண்ட கற்கைநெறிகளை இலவசமாக வழங்குகின்றது. ஒவ்வொரு ஆழமான பாடநெறியும், தொழில்துறை சார் வல்லுநர்கள் மற்றும் இத்தொழில்துறையில் காலெடியெடுத்து வைப்பதற்கு கற்றுக்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு பொருத்தமான புதிய திறன்களையும் அறிவையும் வழங்குகிறது. கற்கின்றவர்கள் தமது தனிப்பட்ட தேவை மற்றும் ஏற்கனவே கொண்டுள்ள இத்துறை சார் அறிவுக்கு ஏற்ப கற்கைநெறியில் இணைந்து கொள்ள முடியும்.

இந்த கற்கைத்தளம் நெகிழ்வுத்தன்மை கொண்டதுடன், கற்றல் செயல்முறைக்கு தாம் விரும்பும் எந்த டிஜிட்டல் சாதனத்தையும் பயன்படுத்த கற்பவர்களுக்கு இடமளிக்கிறது. இக்கற்றல் தளத்தை 24 மணி நேரமும் அணுகக்கூடியதாக உள்ளமையால், பயனர்கள் தாங்களாகவோ அல்லது தமது சக நண்பர்களின், போதனாசிரியர்களின் வழிகாட்டுதலுடனோ தாம் விரும்பும் வேகத்தில் கற்றுக்கொள்ள இடமளிக்கிறது. ஒவ்வொரு பாட அலகும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டவுடன், பயனர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி உட்பட கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சவால்களை இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையானது எதிர்கொண்டுள்ளது. இதன் விளைவாக, 2018 ஆம் ஆண்டிலிருந்து சுற்றுலாப்பயணிகளாக வருவோரின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இத்துறையில் வருமானம் மற்றும் தொழில் இழப்பு ஏற்பட்டது. நெருக்கடிகளுக்கு முன்னர், இலங்கையில் (2014 மற்றும் 2019 க்கு இடையில்) வெளிநாட்டு நாணய வருமானத்தை ஈட்டித்தருவதில் மூன்றாவது இடத்தில் சுற்றுலாத்துறை இருந்தது (ஆதாரம்: மத்திய வங்கி). இந்த காலகட்டத்தில் மொத்த வெளிநாட்டு நாணய வருமானத்தில் 14 சதவீத பங்களிப்பை இத்துறை வழங்கியது. நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், வருங்கால தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் இத்தொழில்துறை ஆற்றலுடன் இருப்பதால், ‘atingi’ eAcademy ஆனது தொழில்துறை ஊழியர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்து வலுப்படுத்தும் ஆற்றலை வழங்குகிறது.

GIZ Sri Lanka வின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித் துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தால் ‘atingi’ eAcademy அமுலாக்கல் முயற்சிக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் சர்வதேச மட்டத்திலான போட்டித்தன்மை, மேம்படுத்தப்பட்ட உள்ளடங்கலான தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேற்றியலை அடைவதற்கு ஏற்ற வகையில் வணிக அபிவிருத்திச் சேவைகளுக்கு இடமளிப்பதில் இந்த நிகழ்ச்சித் திட்டம் கவனம் செலுத்தியுள்ளது. ‘atingi’ eAcademy இலங்கையில் சுற்றுலாத் துறையில் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கு ஆதரவளிப்பதையும், மூலோபாய திறன் மேம்பாட்டின் மூலம் அவர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும், மாற்று மற்றும் நிலைபேற்றியல் கொண்ட சுற்றுலாத்துறைக்கான நிலைமைகளை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X