2025 ஜூலை 30, புதன்கிழமை

போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வுகள்

Gavitha   / 2016 நவம்பர் 22 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிஹான் பிலபிட்டிய  

தினசரி கொழும்பு நகரினுள் 15,000 பஸ்கள், 10,000 ட்ரக்கள் மற்றும் 225,000 தனியார் வாகனங்கள் அடங்கலாக சராசரியாக 250,000 வாகனங்கள் பிரவேசிக்கின்றன. இதன் காரணமாக பெருமளவு வாகன நெருக்கடியை கொழும்பு நகர் பகுதிகளில் அவதானிக்க முடிகின்றது.  

மொத்தமாக வாகனப் பதிவுத் திணைக்களத்தில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், வீதியில் சுமார் 2.7 மில்லியன் வாகனங்கள் காணப்படுகின்றன.  

காலை வேளையில் பணிக்கு செல்லும்போதும், பணி நிறைவடைந்து வீடுகளுக்கு திரும்பும் போதும், பெருமளவான நேரத்தை வீதியில் செலவிட வேண்டியுள்ளமை என்பது பெருமளவு மனவுளைச்சலுக்கு ஆளாக்கும் விடயமாக அமைந்துள்ளதுடன், மனிதனே இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளது. தேசிய அளவில் விரயத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாகவும் போக்குவரத்து நெரிசல் அமைந்துள்ளது.  

வீதிக் கட்டமைப்புகளை விஸ்தரிப்பது தொடர்பில் ஏதும் முறையானத் திட்டங்களின்றி, வாகனங்களின் எண்ணிக்கையில் மட்டும் அவதானிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. தற்போது காணப்படும் வீதி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முன்னைய அரசாங்கத்தினாலும், தற்போதைய அரசாங்கத்தினாலும் வெவ்வேறு திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டப் போதிலும், ஒரு சில திட்டங்கள்  மாத்திரமே அமுல்படுத்தப்பட்டுள்ளன.  

தற்போது காணப்படும் புள்ளி விவரங்களின் பிரகாரம், 1,000 மக்களுக்கு 130 வாகனங்கள் எனும் அளவில் காணப்படுகின்றன. இதில் 66 சதவீதமானவை மோட்டார் சைக்கிள்கள் என்பதுடன், முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறியளவிலான நான்கு சக்கர வாகனங்கள் 1,000 மக்களுக்கு 45 எனும் அளவில் காணப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் காணப்பட்டதை போன்று முறையான வீதித் திட்டமிடல் பேணப்படாவிடின், இட வசதி தொடர்பில் பெருமளவுப் பிரசினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

அதிகளவான மக்களைக் கொண்டு செல்லக்கூடிய குறைந்தளவு வாகனங்கள் இலங்கை போன்ற நாடுகளின் தேவையாக அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்தால் வளர்ச்சிக் காணுமாயின், வாகனங்களின் எண்ணிக்கையும் 5 மில்லியனாக அதிகரிக்கும். அதாவது 1,000 பேருக்கு 250 வாகனங்கள் எனும் அளவில் காணப்படும். இவை நகரங்களில் பெருமளவில் காணப்படும்.  

இலங்கையில் வெவ்வேறு வகையான வாகனக் கட்டுப்படுத்தல் முறைகளைப் பிரயோகிக்கலாம். வாகனத்தைத் தரித்துவிட்டு சைக்கிளில் பயணிப்பது, பஸ் ஒழுங்கைகள், சைக்கிள் ஒழுங்கைகள், மேம்படுத்தப்பட்ட மாற்றீட்டுப் பகுதிகள் போன்றன ஏனைய நாடுகளில் வெற்றிகரமாகப் பின்பற்றப்படுகின்றன. இந்த வாகன நெரிசல் என்பது அதிகளவு மனஉளைச்சலை ஏற்படுத்துவதுடன், பல பில்லியன் ரூபாயை இழக்கச் செய்கிறது.  

நாளாந்தம் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதன் காரணமாக, வீதிகளில் காத்திருக்க வேண்டிய நேரம் அதிகரித்த வண்ணமுள்ளது. இதனைக்கட்டுப்படுத்த எத்தரப்பினரும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதபோதிலும், போக்குவரத்துப் பொலிஸார் மட்டும் இந்த நெரிசலான நிலையை சமாளிக்க முழுமூச்சுடன் ஈடுபட வேண்டியுள்ளது.  

தற்போது காணப்படும் இந்தச் சூழலில் வாகன போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தல் என்பது கொள்கை வகுப்போர், பொலிஸார், பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் என அனைவரினதும் பொறுப்பாக அமைந்துள்ளது.  

இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக வீதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான விசேட குழு ஒன்றை நியமித்து அந்தக் குழுவினூடாக விசேட செயற்றிட்டங்களை முன்னெடுக்கலாம்.  

அதிகளவு வாகன நெரிசல் காணப்படும் பாதைகளை இனங்கண்டு, அவற்றை ஒரு வழிப்பாதைகளாகப் பிரகடனம் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக, மணித்தியாலத்துக்கு 10 கிலோமீற்றர் எனும் வேகத்திலேனும் வாகனங்களைப் பயணிக்கச் செய்ய முடியும்.  

புதிய வீதி விதிமுறைகள் மற்றும் வீதி சமிக்ஞைகள் தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெருமளவான சந்திகளில் சாரதிகள் தன்னலத்துடன் மற்றும் ஆக்ரோஷத்துடன் செயற்படுகின்றமையால் வாகன நெரிசல்கள் அதிகளவு ஏற்படுகின்றன.  

பாதசாரதிகளின் பயணத்துக்காக மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை நிர்மாணித்தல் குறிப்பாக கொழும்பு - மருதானை சந்தியை எடுத்துக்கொண்டால், பொலிஸ் நிலையத்தை அண்மித்து காணப்படும் சமிக்ஞை விளக்குகள் பகுதியில் இது போன்றதொரு மேம்பால அல்லது சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்படுவது பொருத்தமானதாக அமைந்திருக்கும்.  

கொழும்பு நகரினுள் வாகன நெரிசல் அதிகளவில் காணப்படும் வேளைகளில் கொள்கலன்கள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.  

தன்னியக்கமாகப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் கட்டமைப்பு முறையொன்றை நிறுவலாம்.  

நகர் மத்தியில் காணப்படும் பயன்படுத்தப்படாத நிலங்களில் வாகன தரிப்பிடங்கள் நிறுவி, குறைந்த செலவில் வாகனங்களைத் தரித்துவிட்டு, பஸ்களில் அல்லது இதர பொதுபோக்குவரத்து சேவைகளில் தமது பகுதிகளுக்குப் பயணிக்க வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது.  

இவ்வாறானப் பரிந்துரைகளில் சில நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், தொழில்புரியும் மக்களின் வினைத்திறனை 10-20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படும்.  

இந்த ஆக்கத்தை எழுதியவர், இலங்கை மோட்டார் வாகன வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன், யுனைட்டட் மோட்டர்ஸ் லங்காவின் பொது முகாமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .