2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மக்கள் தொடர்பாடல் நிறுவனங்களின் கவனத்துக்கு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.சேகர்

வியாபாரத்துக்கு அழகு சேர்ப்பது விளம்பரம் எனும் தாரக மந்திரத்தின் பிரகாரம், பெருமளவான வியாபாரங்கள் தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக விளம்பர பிரச்சாரங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளன.

இதில் ஊடகங்களுக்கு கொடுப்பனவு மேற்கொண்டு செய்யப்படும் பிரசார நடவடிக்கைகள், கொடுப்பனவுகள் ஏதுமின்றி இலவசமாக மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள் போன்றன அடங்கியுள்ளன.

பத்திரிகைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி எனும் பாரம்பரிய ஊடகங்களை எடுத்துக்கொண்டால், இவற்றில் விளம்பரம் ஒன்றை மேற்கொள்வது என்பது வெளிப்படையான, பலரும் அறிந்த விடயமாகும்.
ஆனாலும், கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் ஊடகத்துறையை பயன்படுத்தி வருமானமீட்டி வரும் ஒரு துறையாக விளம்பர பொது உறவுகள் துறையைக் குறிப்பிட முடியும்.

சர்வதேச நிறுவனங்களின் உள்நாட்டு அலுவலகங்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, தம்வசம் ஊடகங்களில் புத்தாக்கமான விடயங்களை அறிமுகஞ் செய்யக்கூடிய திறன்கள் மற்றும் நுட்பங்கள் காணப்படுவதாக வியாபாரங்களுக்கு தெரிவித்து, அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதற்காக அந்நிறுவனங்கள் தொடர்பான செய்திகளை வௌ;வேறு வழிமுறைகளில் தயாரித்து ஒரு 'செய்தி அறிக்கையாக' ஊடகங்களுக்கு வழங்கும் செயற்பாட்டை இந்த நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் பணியை இலகுபடுத்தும் வகையில் இந்நிறுவனங்களினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்நிறுவனங்களால் வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் குறித்த தரங்கள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
இந்த துறைக்கென ஒழுக்க நெறிமுறை ஒன்றில்லை. விளம்பரத்துறையை எடுத்துக்கொண்டால் அதன் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கெனத் தனியான அமைப்பொன்று உள்ளது. ஆனாலும், இந்த விளம்பர பொது உறவுகள் துறைக்கு அவ்வாறானதொரு கட்டமைப்பில்லை.

இந்த துறை ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது, ஏனெனில், இந்த துறையில் தற்போது பெருமளவான சிறு சிறு 'காளான்கள்' என அழைக்கப்படும் வியாபாரங்கள் முளைவிட்டுள்ளன. ஒழுக்கமான முறையில் ஊடக பிரசுரங்களைத் தயாரித்து அவற்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் இயங்கும் அதே தறுவாயில், ஒழுக்கமற்ற வகையில் ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு சலுகைகளை பெற்றுக்கொடுத்து, அதனூடாக தமது செயற்பாடுகளை சாதித்துக்கொள்ள எதிர்பார்க்கும் பல நிறுவனங்களும் காணப்படத்தான் செய்கின்றன.

உண்மையில் விளம்பர பொது உறவுகள் துறை என்பது வெறுமனே வியாபாரங்கள் மற்றும் ஊடகங்களுக்கிடையே இணைப்பை மேற்கொள்ளும் முகவர் நிறுவனங்கள் மட்டுமின்றி, அதற்கு அப்பால் சென்று, தமது வாடிக்கையாளர்களின் பிரசார செயற்பாடுகளை அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் தவிர்ந்த ஏனைய வௌ;வேறு வழிமுறைகளில் முன்னெடுக்கும் திறன் படைத்தனவாகத் திகழ வேண்டும்.

அத்துடன் வியாபாரங்களின் தேவைகளை ஆய்வுகளின் மூலம் கண்டறிந்து அந்த ஆய்வுப் பெறுபேறுகளின் அடிப்படையில் வினைமுறைத்திறன் ஒன்றை வகுத்து, அதை செயற்படுத்த வேண்டும். வௌ;வேறு வியாபாரங்களைப் பொறுத்து அவற்றின் தொடர்பாடல் தேவைகள் வேறுபடும். வியாபாரங்களின் உள்ளக தொடர்பாடல்களின் ஒர் அங்கமும் இந்த விளம்பர பொது உறவுகள் துறையில் அங்கம் வகிக்கின்றது.
ஒரு வியாபாரத்தின் செயற்பாட்டால் ஏதேனும் அவப்பெயர் அந்நிறுவனத்துக்கு அல்லது அதன் உற்பத்திக்கு ஏற்பட்டுவிட்டால், அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்த விளம்பர பொது உறவுகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்.

ஆனாலும், இன்றைய கால கட்டத்தில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல், இந்த துறை ஊடகங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்துறையில் காணப்படும் முன்னோடிகள் ஒன்றிணைந்து இந்த துறையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றுகூடுவார்களா என்பது இந்த துறையின் ஆரோக்கியமான பயணத்துக்கு இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X