2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மாணவர்களின் கணித ஆற்றல் செயல் திட்டம்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக கணிதப் பாடத்துக்கான ஆற்றலை மேம்படுத்தும் உன்னத திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Optimized IT என்ற நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இணைய வழி மூலமாக பல்தெரிவு விடைக்கான (MCQ) வினா பத்திரங்களை வழங்குவதில் தேர்ச்சி பெற்ற ஒரு நிறுவனமாகும்.

இந்த முன்னோடித் திட்டத்துக்காக பத்து பாடசாலைகளை வங்கி தெரிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி Optimized IT நிறுவனம் அதன் இணைய மேடையான www.mcqpal.com மூலம் ஒவ்வொரு வாரமும் 20 கேள்விகள் கொண்ட வினாப் பத்திரத்தை தரவேற்றம் செய்யும். குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மாணவர்கள் இணைய வழியாக இதற்கு பதிலளிக்க வேண்டும். கொமர்ஷல் வங்கி மூலம் தத்தமது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கணனி நிலையங்களை பயன்படுத்தி மாணவர்கள் இந்த வினாப்பத்திரத்துக்கு பதில் அளிக்கலாம்.

இந்த பிரயோக செயற்பாட்டை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் கணித ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் Optimized IT நிறுவனம் வழங்கும். இணைய வழியாக நேரடியாக எவ்வாறு பதில் அளிப்பது என்பது பற்றி மாணவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் பலவீனமாகவுள்ள பகுதிகள் பற்றிய ஒரு மதிப்பீடு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

'க.பொ.த சாதாரன தரத்துக்கு தோற்றும் மாணவர்களைப் பொறுத்தமட்டில் கணிதம் மிக முக்கியமான ஒரு பாடமாகும். காரணம் உயர் தரம் பயில இந்தப் பாடத்தில் சித்தி அடைய வேண்டியது அவசியமாகும்' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரியும் CSR ஒருங்கிணைப்பாளருமான திருமதி. பிரியன்தி பெரேரா. 'நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப மையங்களை வழங்குவதன் மூலம் கொமர்ஷல் வங்கி ஏற்கனவே கல்வித் துறையில் மிக ஆழமான ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. அத்தோடு இந்த நிலையங்கள் ஊடாக இணைய வழி கல்வி முறைக்கும் இது தீவிர ஆதரவு வழங்கி வருகின்றது. இந்த அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள தற்போதைய திட்டமானது கணித பாடத்தில் தேசிய மட்டத்தில் சித்தி அடைய வேண்டிய விகிதாசாரத்தின் தேவையை வலியுறுத்தி நிற்கின்றது' என்று அவர் மேலும் கூறினார்.

2002 முதல் சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டிய போதும் 2009 இல் 51 வீதமாக மட்டுமே அமைந்துள்ளது. அந்த ஆண்டில் ஆகக் கூடிய சித்தி அடைதல் வீதமாக மேல் மாகாணத்தில் 61 வீதம் பதிவாகியுள்ளது. ஆகக் குறைந்தது ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் 42 வீதமாக உள்ளது. கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒப்பீட்டளவில் முறையே 45 மற்றும் 44 வீதம் என குறைந்த அளவையே காட்டுகின்றது.

கொமர்ஷல் வங்கியும் Optimized IT யும் இணைந்து அமுல் செய்யும் புதிய திட்டத்தில் மீவனபாலன மகா வித்தியாலயம் - ஹொரணை, கதலுவ மத்திய கல்லூரி – கதலுவ, அஹங்கம அனுர கல்லூரி – மாத்தறை, ஸ்ரீ பராக்கிரம மத்திய வித்தியாலயம் - அருக்கொடை, தீனகம மகா வித்தியாலயம் - ஹக்மன,பெலிஅத்த, நாகலகந்த நவோதய மகா வித்தியாலயம் -மின்னேரியா, யாழ்ப்பாண கல்லூரி – யாழ்ப்பாணம், றம்புக மகா வித்தியாலயம் - கலவான, தக்ஷிலா மத்திய கல்லூரி – ஹொரணை, புனித அன்ட்ரூஸ் கல்லூரி –நாவலப்பிட்டி ஆகிய பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன.

பரீட்சை முறைகளில் உரிய தரம், சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதில் முன்னேற்றம், ஏனைய பாடசாலை மாணவர்களின் பெறுபேறோடு தமது மாணவர்களின் பெறுபேறுகளை ஒப்பீடு செய்யும் வாய்ப்பு, கேள்விகளுக்கு விடை அளிப்பதை மாணவர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாக ஆக்குதல், பரீட்சை தேவைகளுக்காக கடதாசிகளை பாவிப்பதை குறைத்தல் என்பன இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ள மேலதிக பலன்களாகும்.

கொமர்ஷல் வங்கி CSR நிதியத்தின் ஆதரவோடு மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தேசிய மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவு மட்டத்தை மேம்படுத்துவது முக்கிய இடம் பிடித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக வங்கி இன்று வரை நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு 170 கணனி நிலையங்களை அன்பளிப்புச் செய்துள்ளது.

இந்த கணனி மையங்களைப் பயன்படுத்தி இணைய வழி ஊடாக கல்வி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாண்டு முற்பகுதியில் கொமர்ஷல் வங்கி 'சிப்னென' என்ற புதிய கல்வி இணையத் தளத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

வருடாந்தம் பட்டதாரி மாணவர்களுக்கு மடிக் கணனிகளை வழங்குதல், கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில கல்வி அறிவை மேம்படுத்தல்,  வங்கியின் இணைய கல்வி முறை மூலம் விரிவான தகவல் தொழில்நுட்ப அறிவை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கும் வகையிலான சிஸ்கோ வலையமைப்புடன் கூடிய பங்குடைமை திட்டம் என்பன வங்கியின் CSR மூலம் மேற்கொள்ளப்படும் ஏனைய சில திட்டங்களாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X