2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

லேடி றிட்ஜ்வே வைத்தியசாலைக்கு கொமர்ஷல் வங்கி உதவி

Gavitha   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் தேசிய கண் வைத்தியசாலை என்பனவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, கொமர்ஷல் வங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளது. இவ்விரண்டு வைத்தியசாலைகளினதும் மேம்படுத்தலுக்கு தேவையான உதவிகளை, வங்கி வழங்கியுள்ளது. 

சிறுவர் வைத்தியசாலையில், அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இருதய சத்திர சிகிச்சை பிரிவுக்குத் தேவையான மயக்கநிலை நிலையம் மற்றும் சுவாசக் கருவி என்பனவற்றை கொமர்ஷல் வங்கி அன்பளிப்புச் செய்துள்ளது. தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருபவர்களுக்கான சிற்றூண்டிச் சாலை ஒன்றை நிறுவத் தேவையான நிதி உதவிகளையும் வங்கி வழங்கியுள்ளது. 

சிறுவர் வைத்தியசாலை புதிய இருதய சத்திர சிகிச்சை பிரிவுக்கு HOPE என்று பெயரிடப்பட்டுள்ளது. (Heart Operations Performed Early) முன்கூட்டி செய்யப்படும் இருதய சத்திரசிகிச்சைகள்) என்பது இதன் பொருளாகும். வருடாந்தம் சுமார் 500 சிறுவர்களுக்கு இங்கு மேலதிகமாக இருதய சத்திரசிகிச்சைகள் செய்யப்படவுள்ளன. தற்போது இந்த வைத்தியசாலையில் உள்ள இரண்டு இருதய சத்திர சிகிச்சைக் கூடங்கள் மூலமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்கும் சிறுவர்களுக்கான சிகிச்சைகளே இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன. 

“கொழும்பில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் அமைந்துள்ள இருதய சத்திர சிகிச்சை நிலையமே, இலங்கையில் அர்ப்பணிப்போடு செயற்படும் சிறுவர்களுக்கான ஒரேயொரு நிலையமாகும். நாடு முழுவதும் பிறப்பிலேயே இருதயக் கோளாறை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு இங்கு சத்திர சிகிச்சை அளிக்கப்படுகின்றது” என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம் கூறினார். “இந்த சிறுவர் இருதய சத்திர சிகிச்சை நிலையத்துக்கான எமது உதவி, இங்கு சத்திரசிகிச்சைகளை விரைவுபடுத்தி, பல இளம் உயிர்களைக் காப்பாற்ற பங்களிப்பு வழங்கும் என்று நம்புகின்றோம்” என அவர் மேலும் கூறினார். 

இலங்கையில் வருடாந்தம் சுமார் 3,000 குழந்தைகள் இருதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இவர்களுள் 2,000 முதல் 2,500 குழந்தைகளுக்கு பிறந்த ஒரு சில தினங்களில் அல்லது முதலாவது ஆண்டிலேயே சத்திர சிகிச்சை அவசியமாகின்றது. லேடி றிட்ஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரியில் உள்ள இரண்டு சத்திர சிகிச்சை நிலையங்களிலும் வருடாந்தம் சுமார் ஆயிரம் சத்திரசிகிச்சைகளையே செய்யக் கூடியதாக உள்ளது. 

தேசிய கண் வைத்தியசாலையில் அதன் நலன்புரி மேம்பாட்டுத் திட்டத்துக்கும் வங்கி உதவியளித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X