2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஹமீடியா நிறுவனத்தின் ஹுசைன் சாதிக்

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமீடியா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளரும் குழுமத்தின் தொழிற்பாடுகளுக்கு தலைமைதாங்கிச் செயற்பட்டவருமான ஹுசைன் சாதிக், பிரதான வியாபார துறைக்கு அப்பால் மூலோபாய வணிக பாத்திரம் ஒன்றில் செயற்படும் பொருட்டு, குழுமத்தின் முகாமைத்துவத்தில் இருந்து நீங்கவுள்ளார்.  

ஹமீடியா நிறுவனத்தை தலைமையேற்று வழிநடாத்தும் மூன்று சகோதரர்களில் மிக இளையவரான சாதிக், பாடசாலைக் கல்வியை முடித்தவுடன் குடும்ப வணிகத்தில் இணைந்து கொண்டார். அதன்பின்னர் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளராக முன்னேறிய அவர் இவ்வருடம் முப்பது வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்கின்றார். 

ஹமீடியா குழுமத்தின் முகாமைத்துவ குழுவில் இருந்து வெளியேறி, குழுமத்தின் பிரதான வணிக துறைக்கு வெளியிலான புதிய செயற்றிட்டங்கள் மற்றும் வர்த்தக முயற்சிகளுக்கு தலைமை தாங்கி செயற்படுவதற்கும் அதேவேளை, தனது அனுபவத்தை பயன்படுத்தி ஒரு மூலோபாய தொழில்நிலையில் செயற்படுவதற்கும் அவர் தீர்மானித்துள்ளார். 

'ஹமீடியா நிறுவனம் இத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு மத்தியிலும் அவற்றுக்கு ஏற்றால்போல் தன்னை மாற்றியமைத்துக் கொண்டு பலமாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. அத்துடன் வணிக ஒப்பீட்டுதரமிடல் மற்றும் இத்துறையில் முதன்முதலான முன்னெடுப்புகளை மேற்கொள்ளல் ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கின்ற அதேநேரத்தில் தன்னுடைய காலடித்தடங்களை விஸ்தரித்துள்ளது. இந்நிறுவனம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி இருக்கின்றது, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஊழியர்களுடன் பணியாற்றியிருப்பதுடன், மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த விநியோகஸ்தர்களுடன் பங்காளியாக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளது. நிறுவனத்தை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும், அதேபோல் உலகளாவிய வர்த்தக குறியீடாக முன்னேறுவதற்காக, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த தலைமைத்துவத்தை நிறுவனத்திற்குள் வரவேற்பதற்கு இப்போது ஹமீடியா தயாராக உள்ளது' என்று சாதிக் தெரிவித்தார். 

டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான ஹுசைன் சாதிக், அக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். தனது இள வயதில் குடும்ப வணிகத்தில் இணைந்து கொண்ட சாதிக், இத்துறையிலான அனுபவத்தை தன் கைவசம் வைத்திருந்தார். அத்துடன் இத்துறையில் ஹமீடியா நிறுவனம் முன்னணி ஸ்தானத்திற்கு வருவதற்கு அதனை வழிநடாத்துவதற்காக தனது திறமையை பயன்படுத்தினார். ஆண்களுக்கான உயர்தரமான பிரத்தியேக தையற்கலை மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றுடன் இரண்டறக்கலந்த ஒரு பெயரான ஹமீடியாவின் பின்னால் உள்ள மூன்று சகோதரர்களும் கடந்த பல வருடங்களாக இலங்கையின் ஆடவர் ஆடையின் தரத்தை மேம்படுத்தியுள்ளதுடன், உறுதியான தனியிடத்தை உருவாக்கியுள்ளனர். 

தனது வியாபார மரபுரிமை மற்றும் துறைசார் நிபுணத்துவம் என்பவற்றை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள ஹமீடியா நிறுவனமானது, மிக வேகமாக முன்னேறிவருகின்ற வியாபார உலகின் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டும், அத்துடன் தனது வாடிக்கையாளர் தளத்திற்கு மேலும் சிறப்பாக சேவையாற்றுவதற்காகவும் கம்பனியை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்ல தயார்நிலையில் உள்ளது. நிறுவனமானது அதனது உயர்மட்ட கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. 

தனது வர்த்தக குறியீடு, உற்பத்தி மூலோபாயங்கள், அளவுக்கேற்ற பிரத்தியேகமான (Bespoke) தையற்கலை தீர்வுகள், வியாபார பங்காளித்துவங்கள் மற்றும் நெகிழ்ச்சித்திறன் கொண்ட குழு வேலை ஆகியவற்றில் பலம் குறையாத கவனக்குவிப்பை செலுத்தி வருவதனூடாக, இதுவரை ஹமீடியா நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. 1949ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஹமீடியா நிறுவனமானது இப்போது இலங்கையில் வீடுகள்தோறும் பிரபலமான ஒரு வர்த்தக குறியீடாக திகழ்வதுடன், ஆடவர் ஆடைத்துறையில் சந்தையில் தலைமை அந்தஸ்தையும் வகிக்கின்றது. கம்பனியின் வியாபார பெறுமதிகள் மற்றும் அதனது தலைமைத்துவம் ஆகிய சொத்துக்களுடன் ஒழுங்குபடுத்தப்;படும் ஹமீடியா நிறுவனம்,  தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தியிருப்பது மட்டுமன்றி பலமிக்க வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. ஹமீடியா நிறுவனத்தில் உள்ள தலைமைத்துவ அணிக்கு - பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்,  குழுமத்தின் முகாமைத்துவ குழு, குழுமத்தின் தொழிற்பாட்டு முகாமைத்துவ குழு மற்றும் குழுமத்தின் நிறைவேற்று முகாமைத்துவ அணி ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து முகாமைத்துவ பணிப்பாளர் தலைமை தாங்குகின்றார். இவர்கள் அனைவரும் 1100 உறுப்பினர்களைக் கொண்ட ஹமீடியா நிறுவனத்தின் உறுதிமிக்க ஆளணியினரில் ஒரு அங்கமாக அமைகின்றனர்.

ஹுசைன் சாதிக், இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் ஒரு ஆயுட்கால உறுப்பினராகவும், அலிப் சர்வதேச பாடசாலை மற்றும் நோர்த்வூட் கல்லூரி ஆகியவற்றின் ஸ்தாப பணிப்பாளராகவும், இலங்கை முதன்மை தையற்கலைஞர்கள் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், முன்னாள் உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் ஒன்றியத்தின் (தற்போதைய இலங்கை தைக்கப்பட்ட ஆடை வர்த்தக குறியீட்டு ஒன்றியம்) ஸ்தாபக உறுப்பினராகவும், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) ஒரு இணை உறுப்பினராகவும், அளுத்கம அபிவிருத்தி மன்றத்தின் ஸ்தாபக தலைவராகவும் திகழ்கின்றார். சமூக சேவை ஆதரவு செயற்பாட்டாளரான இவர், குழுமத்தின் ஊழியர்களை சமூகநல பணிகளில் ஈடுபடுத்தியிருக்கின்றார். எந்தவொரு உள்ளக மற்றும் தேசிய அவசர நிலைமைகளின் போதும் தயார்நிலையில் இருக்கும் ஹமீடியா தன்னார்வ அணிகளை உருவாக்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ஹமீடியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் ஒரு குழுவாகச் சேர்ந்து ஆகக் குறைந்தது எட்டு மணித்தியாலங்களேனும் தன்னார்வ பணிகளை மேற்கொள்ளுமாறு ஒவ்வொரு ஊழியரும் வேண்டப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X