2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் இலாபம் ரூபா 1 பில்லியனாக அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 நவம்பர் 19 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி நிதிக் கம்பனிகளுள் ஒன்றாக திகழ்கின்ற கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. ஆனது, 2014-15 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களிலும் வரிக்குப் முன்னரான இலாபத்தில் 191% அதிகரிப்பை பதிவு செய்ததன் மூலம் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் சிறப்பான இலாபத்தை பெற்றுக் கொண்டுள்ளது. முதல் ஆறு மாத காலப்பகுதியில் நிறுவனத்தின் இலாபம் ரூபா 345 மில்லியனில் இருந்து ரூபா 1 பில்லியனாக அதிகரித்திருக்கின்றது. 
 
ஒரு வருடத்திற்கு முன்னர் ரூபா 172 மில்லியனாக காணப்பட்ட கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் வரிக்குப் பின்னரான இலாபம் (PAT), செப்டெம்பர் 2014 இல் முடிவடைந்த மூன்று மாதங்களில் பாராட்டத்தக்களவுக்கு ரூபா 514 மில்லியனாக அதிகரித்துள்ளது. இக் காலாண்டில் தேறிய வட்டி வருமானம் ரூபா 1.6 பில்லியனாக உயர்வடைந்ததன் மூலம் நிதிப் பெறுபேறுகள் 87% அதிகரிப்பை பிரதிபலித்தது. நிறுவனமானது இக் காலாண்டில் பெற்றுக் கொண்ட நிதிப் பெறுபேறுகள், ஆறுமாத காலப் பகுதிக்கான பெறுபேறுகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, தேறிய வட்டி வருமானம் ரூபா 3.2 பில்லியனாக 87% இனால் அதிகரித்துள்ள அதேநேரம் வரிக்குப் பின்னரான இலாபம் 191% இனால் அதிகரித்து ரூபா 1 பில்லியன் என்ற மட்டத்தை தாண்டிச் சென்றுள்ளது.
 
2014 மார்ச் 31ஆம் திகதியன்று ரூபா 32 பில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த கம்பனியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 2014 செப்டெம்பர் 30ஆம் திகதி ரூபா 41 பில்லியனாக உயர்வடைந்தது. மார்ச் 31ஆம் திகதி காணப்பட்டதை விடவும், கடன்கள் மற்றும் முற்பணங்களின் தொழிற்பாடானது மிக ஆரோக்கியமான விதத்தில் 7.4% முன்னேற்றமடைந்து செப்டெம்பர் 30ஆம் திகதி காலாண்டு முடிவில் ரூபா 18.4 பில்லியனாக வளர்ச்சியடைந்தமையின் விளைவாகவே சொத்துக்களின் பெறுமதியில் மேற்படி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. வருமதியாகவுள்ள குத்தகை வாடகைகள் மற்றும் Stock out on Hire இன் பெறுமதியானது ஆறு மாதங்களுக்கு முன்பு காணப்பட்ட ரூபா 8.7 பில்லியனில் இருந்து ரூபா 11.4 பில்லியனாக மிகவும் திடமானதொரு 31% வளர்ச்சியை வெளிக்காட்டியுள்ளது. 
 
தற்போதைய தொழிற்பாட்டு போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கும் அதேவேளை, கடந்த நிதியாண்டின் தொடர்புபட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அடுத்துவரும் ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்களவுக்கு முன்னேற்றமடைந்த வருமான உழைப்பை பதிவு செய்வதற்கும் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில், திருப்திகரமான மட்டத்திலான திரவத்தன்மையின் வலுவூட்டலை துணையாகக் கொண்டு முதலீடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு கம்பனி எதிர்பார்த்துள்ளது.
 
இக் காலாண்டில் - கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் பி.எல்.சி. (TFI) நிறுவனத்தின் 55,037,157 சாதாரண வாக்குரிமையுள்ள (96.89% இனை பிரதிநிதித்துவம் செய்யும்) பங்குகளை 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதி ஒவ்வொரு பங்கும் தலா ரூபா 28.00 என்ற விலையில் மொத்தமாக ரூபா 1.5 பில்லியன் பெறுமதிக்கு கையகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள பங்குகளை கொள்வனவு செய்வதற்கான 'கட்டாயமாக்கப்பட்ட வழங்கல்' (Mandatory Offer) மேற்கொள்ளப்பட்டதுடன், அந்நடவடிக்கை 2014 ஒக்டோபர் 14ஆம் திகதி நிறைவடைந்தது. அதன்படி 'கட்டாயமாக்கப்பட்ட வழங்கல்' முடிவுக்கு வந்த பின்னர் TFI நிறுவனத்தின் 98.34% பங்குகளை கொமர்ஷல் கிரெடிட் தம்வசம் வைத்திருக்கின்றது. கம்பனிச் சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மீதமாகவுள்ள 1.65% பங்குகளை கையகப்படுத்துவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X