2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனம் ரூ1.68 பில்லியனை பெறுகின்றது

A.P.Mathan   / 2014 மார்ச் 06 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னோடி சந்தைகளில் தனியார் பங்குகள் மீதான முதலீடுகளை மேற்கொள்வதில் முன்னணியில் உள்ள கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கெப்பிட்டல் மெனேஜ்மன்ற் எல்.எல்.சி. ('Creation') நிறுவனமானது தனக்கு முற்றுமுழுதாக சொந்தமான துணை நிறுவனமான கிரியேஷன்; இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஸ்ரீலங்கா எல்.எல்.சி. ('Creation Lanka') ஊடாக,  இலங்கையின் முன்னணி நிதிக் கம்பனிகளில் ஒன்றாக திகழ்கின்ற கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. (CCF) நிறுவனத்தில் ரூபா 1.68 பில்லியனை (12.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு சமமான தொகையை) முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது.  

ரூபா 1.68 பில்லியன் அல்லது CCF நிறுவனத்தின் சுமார் 25.15% பங்குகள் என்ற அடிப்படையை கவனத்திற் கொண்டு புதிதாக 80 மில்லியன் பங்குகளை வழங்குவதை இந்தக் கொடுக்கல் வாங்கல் உள்ளடக்கியுள்ளது. இக் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்கு அவசியமாகவுள்ள இலங்கை மத்திய வங்கி, பிணையங்கள் பரிமாற்றல் ஆணைக்குழு (SEC) மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) ஆகியவற்றின் ஒப்புதல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியவுடன் இப் பரிவர்த்தனை நிறைவு செய்யப்படும்.

பகிரங்கமாக பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் உரிமம் பெற்ற நிதிக் கம்பனி ஒன்றில் சர்வதேச தனியார் பங்கு நிதியம் ஒன்றினால் மேற்கொள்ளப்படுகின்ற மிகப் பெரிய முதலீடாக இது அமைகின்றது. அதுமட்டுமன்றி  கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனம் அடைந்துள்ள வெற்றி பற்றிய திடமான உறுதிப்படுத்தலாகவும் இது உள்ளது. CCF இன் தலைமைத்துவத்தின் பலம் மற்றும் இலங்கையிலுள்ள பின்தங்கிய மக்களுக்கு சேவையாற்றும் தூரநோக்கில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்பு போன்றவற்றில்பால் கிரியேஷன் நிறுவனமானது ஈர்க்கப்பட்டுள்ளது. வியாபார விலைப் பெறுமதி மீது வழங்கப்பட்ட உயர்வான விலை வழங்கல்கள் மற்றும் NAV ஆகியவை கம்பனியின் உறுதியான எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுகின்றன. இப்புதிய நிதியானது CCF நிறுவனத்தினால் தனது எதிர்கால முதலீட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். அவற்றுள் - சேவை வலையமைப்பை மேலும் விஸ்தரித்தல், சொத்து மற்றும் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தல் அத்துடன் கம்பனியின் எதிர்கால மூலதன போதுமானதன்மை குறித்த தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளும் உள்ளடங்கும்.

வளர்ச்சி கண்டு வருகின்ற சந்தைகள் பலவற்றிலுள்ள பல்வேறு வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளில் கிரியேஷன் நிறுவனம் முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றது. கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தில் அது மேற்கொள்கின்ற முதலீடானது, அந் நிறுவனத்திற்கு வழிகாட்டல் மற்றும் ஆதரவை வழங்குவதற்கு உதவியாக அமைகின்ற அதேவேளை கிரியேஷன் நிறுவனத்தின் ஏனைய சர்வதேச முதலீட்டு தொடர்களிலிருந்தான சிறப்பான நடைமுறைகளையும் ஊக்குவிக்கும். புதிய பங்கு முதலீடானது CCF நிறுவனத்தின் மூலதனமாக்கல் செயன்முறையை பலப்படுத்துவதுடன், சர்வதேச கடன் மூலதனத்தை கவர்ச்சிரமான வட்டி வீதத்தில் அது பெற்றுக் கொள்ளவும் வழியேற்படுத்திக் கொடுக்கும்.

இக் கொடுக்கல் வாங்கலுக்கான ஏக நிதியியல் ஆலோசகராக யோர்க் ஸ்ரீற் பார்ட்னர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் செயற்பட்டுள்ளது. வார்னர்ஸ் நிறுவனம்,  கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ள அதேநேரம், கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக FJ &G De Saram தொழிற்பட்டுள்ளது.

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரொஷான் எகொடகே இந்த பரிவர்த்தனை தொடர்பாக கருத்து கூறுகையில்,  'பல்வகைப்பட்ட நுண்-நிதியியல் மற்றும் சிறிய நடுத்தர தொழில்முயற்சிசார் உற்பத்திகள் உள்ளடங்கலாக பரந்தளவிலான நிதியியல் உற்பத்திகளை, எமது அடிப்படை விழுமியங்களுக்கிணங்க உயர்தரமான சேவையுடன் ஒன்றிணைத்து இலங்கை நுகர்வோர்களுக்கு வழங்குதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். கிரியேஷன் நிறுவனத்துடனான எமது பங்காளித்துவமானது இப்பயணத்தை நாம் தொடர்வதற்கும் அதேபோல் இலங்கையின் முன்னணி உரிமம்பெற்ற நிதிக் கம்பனியாக வளர்ச்சி காண்பதற்கும் எமக்கு வழிவகுப்பதாக அமையும்' என்றார்.

கிரியேஷன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெற்ரிக் பிஸ்ஸர் (Patrick Fisher) கூறுகையில், 'இது இலங்கையில் நாம் மேற்கொள்கின்ற முதலாவது முதலீடாகும். அதுமாத்திரமன்றி எமது 'கிரியேஷன் முதலீடுகள் சமூக தொழில்முயற்சி' நிதியத்தில் இன்று வரைக்கும் நாம் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய முதலீடாகவும் இது திகழ்கின்றது. உலகளாவிய ரீதியில் உள்ள அதிகமான வளர்ச்சியடைந்து வரும் மற்றும் முன்னோடி சந்தைகளில் தரமிக்க முதலீட்டு வாய்ப்புக்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் சந்தையில் தலைமைத்துவ நிலை, அபூர்வமான முகாமைத்துவம் மற்றும் எமது தூரநோக்கு, பணியிலக்கு மற்றும் விழுமியங்களோடு ஒத்துப்போகும் தன்மை என – தொலைநோக்கு முதலீடுகள் தொடர்பில் நாம் எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கு முன்னுதாரணமாக கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் காணப்படுகின்றது. இலங்கையின் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் (LFC) துறையில் CCF நிறுவனம் முன்னணியில் திகழ்கின்ற அதேவேளை கடந்த சில வருடங்களில் அத்துறையில் பிரமாண்டமான வளர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. CCF இன் எதிர்கால திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் CCF அணியினருடன் பங்காளியாக கைகோர்ப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்' என்று தெரிவித்தார்.

'இது மிகவும் சிக்கலானதொரு கொடுக்கல் வாங்கலாக உள்ளது. பல்வேறு கட்டமைக்கப்பட்ட தெரிவுகள் அதேபோன்று ஒழுங்குபடுத்தல் சார்பான ஒப்புதல்கள் என்பவற்றின் ஊடாக மிக கவனமான பேரம்பேசல்களை இது வேண்டி நிற்கின்றது' என்று யோர்க் ஸ்ரீற் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான சுஜேந்திர மதர் மேற்படி கொடுக்கல் வாங்கல் தொடர்பான அபிப்பிராயத்தை தெரிவித்தார். 'இந்த கொடுக்கல் வாங்கலின் வெற்றிகரமான பலாபலனை காணும்போது நாம் மகிழ்ச்சியடைகின்றோம். உண்மையிலேயே CCF மற்றும் கிரியேஷன் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பரஸ்பரம் வெற்றி தரக்கூடிய ஒரு முயற்சியாக இது அமைகின்றது. இலங்கையின் நிதியியல் சேவைகள் துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நல்லதொரு தருணத்தில் இது மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .