
2013-14 நிதியாண்டின் முதல் காலாண்டு பருவத்தில் வரிக்குப்பின்னரான நிகர இலாபமாக 369 மில்லியன் ரூபாiவை எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி பதிவு செய்துள்ளது. வரிக்கு முந்திய நிகர இலாபப் பெறுமதியாக 469 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. 2013-14 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு பகுதியில் குழுமத்தின் மொத்த வருமானம் 13.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு பகுதியுடன் ஒப்பிடுகையில் 33 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் காலாண்டு பகுதியில் பதிவான வரிக்கு பின்னரான நிகர இலாபப் பெறுமதி 369 மில்லியன் ரூபா, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7 வீத அதிகரிப்பை காண்பித்துள்ளது. பங்காளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிகர இலாபத்தொகை 17 வீதத்தால் அதிகரித்து 323 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த பெறுமதி 276 மில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீஃவ் யூசுஃவ் கருத்து தெரிவிக்கையில், 'முதல் காலாண்டு பகுதியில் பதிவாகியிருந்த நிதி பெறுபேறுகளில், பிராந்திய சந்தைகளில் காணப்பட்ட மந்தமான நிலைகள் செல்வாக்கு செலுத்தியிருந்தன. நாம் முன்னெடுக்கும் வர்த்தகங்களில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பான எமது கொள்கைகள் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். தொடர்ச்சியான நட்டங்களை பதிவு செய்து வரும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விடுபடுவது தொடர்பாக நாம் கூர்மையாக ஆராய்ந்து வருவதுடன், இதன் மூலம் பங்குதாரர்களின் பெறுமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
பிரதான துறையான சரக்கு போக்குவரத்து மற்றும் கையாள்கை கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 40 வீத வருமான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த துறையின் மூலம் பதிவாகியிருந்த நிகர இலாபம் 24 வீத வளர்ச்சியை காண்பித்திருந்தது. இந்த வளர்ச்சிக்கு ஹொங் கொங், சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த புதிய தொழில் உடன்படிக்கைகளின் காரணமாக பதிவாகியிருந்த அதிகளவான வியாபார நடவடிக்கைகள் பங்களிப்பு செலுத்தியிருந்தன. இவை இந்தியாவின் சரிவான வர்த்தகங்களை ஈடு செய்வதாக அமைந்திருந்தன. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வர்த்தக குறியீட்டு நாம மீள அறிமுக நடவடிக்கையானது, 'efl' எனும் புதிய வர்த்தக நாமத்தின் கீழ் புதிய வர்த்தகங்களை கைக்கொள்வதற்கு நேர்த்தியான பெறுபேறுகளை வழங்கியிருந்தது. இந்த துறையில் காணப்படும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இந்த துறையின் மீது தொடர்ச்சியான கவனம் வழங்கப்படும். இந்த ஆண்டின் நோக்கமாக, எல்லை வருமானங்களை அதிகரிப்பதுடன், உறுதியான வளர்ச்சி பெறுமதிகளை பேணுவது அமைந்துள்ளது.
பயண மற்றும் ஓய்வு நேர துறையானது 5 வீத வருமான வளர்ச்சியை முதல் காலாண்டில் பதிவு செய்திருந்தது. எமது நடைமுறையிலுள்ள வர்த்தகங்கள் தொடர்ச்சியான வருமான அளவுகளை அதிகரிப்பை வெளிப்படுத்தியிருந்தன. 715 மில்லியன் ரூபாவிலிருந்து 747 மில்லியன் ரூபாவாக வருமானம் அதிகரித்திருந்தது. ஆயினும், இந்த துறையின் இலாபம் 43 மில்லியன் ரூபாவிலிருந்து 21 மில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடையக் காரணமாக இந்தியாவுடன் தொடர்புடைய சந்தையில் நிலவிய சரிவு அமைந்திருந்தது. மேல்நிலைகளுக்கான செலவீன அதிகரிப்புகளும் இந்த இலாபத்தின் சரிவில் பங்களிப்பு செலுத்தியிருந்தன.
சர்வதேச வியாபாரம் மற்றும் உற்பத்தி துறை வருமானம் 31 வீதத்தால் அதிகரித்திருந்தது. இந்த பெறுமதி 2.94 பில்லியன் ரூபாவிலிருந்து 3.85 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. தேயிலை ஏற்றுமதி, விரைவில் பழுதடையும் பொருட்கள் மற்றும் பண்டக பொருட்கள் போன்றவற்றில் ஏற்பட்டிருந்த ஏற்றுமதி அதிகரிப்பு இந்த துறையின் வருமான அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியிருந்தது.
பண்டக பொருட்களின் விலைகளில் தளம்பல்கள் நிலவியமை காரணமாக இந்த துறையில் வருமானம் 13 வீதத்திலிருந்து 7 வீதமாக சரிவடைந்திருந்தது. இந்த காலப்பகுதிக்கான துறையின் இலாபம் 57 மில்லியன் ரூபாவிலிருந்து 21 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. அதிகரித்த வருமான தளம் காரணமாக நிதிச் செலவுகளில் அதிகரிப்பும் இந்த இலாப சரிவில் பங்களிப்பை செலுத்தியிருந்ததுடன், பணப்பறிமாற்று வருமானம் 22 மில்லியன் ரூபாவால் அதிகரித்து பங்களிப்பை வழங்கியிருந்தது.
முதலீடுகள் மற்றும் சேவைகள் துறையில் கடந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியுடன் ஒப்பிடுகையில் 3 வீத அதிகரிப்பு பதிவாகியிருந்தது. ஆனாலும், கடந்த ஆண்டில் பதிவான 3 மில்லியன் ரூபா நட்டத்திலிருந்து மீண்டு, 18 மில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்திருந்தது. மூன்றாம் நிலை கல்வி பிரிவு முதல் காலாண்டில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீஃவ் யூசுஃவ் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'முழு குழுமத்தின் அடிப்படையில் நாம் தொடர்ச்சியாக சரியான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், தெளிவான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி எமது பிரதான வர்த்தக நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்த்து வருகிறோம். குழுமத்தில் சிறப்பாக பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் பிரிவுகளுக்கு நாம் அதிகளவு கவனத்தை செலுத்த தீர்மானித்துள்ளோம். மத்திய கால அடிப்படையில் வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் செயற்திட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகிறோம். சர்வதேச வர்த்தக செயற்பாடுகள் குறுங்கால அடிப்படையில் எமது குழுமத்தின் பெறுபேறுகளில் பாதகமான விளைவுகளை காண்பிக்கக்கூடும். ஆனாலும் புதிதாக தோற்றம் பெற்று வரும் வளர்ச்சிகரமான செயற்பாடுகளின் மூலம் நாமும் எதிர்காலத்தில் தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக நாம் நம்புகிறோம்' என்றார்.