
செலான் வங்கியானது, 2013 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 2,269 மில்லியனை பதிவு செய்துள்ளது. இக் காலப்பகுதியில் வரிக்கு பின்னரான இலாபமாக ரூபா 1,536 மில்லியன் பெறப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் இதனோடு தொடர்புபட்ட காலப்பகுதியான 9 மாதங்களிலும் வங்கி பதிவுசெய்த ரூபா 1,598 மில்லியன்; வரிக்குப் பின்னரான இலாபத்துடன் ஒப்பிடுகையில் இது 3.9மூ சிறியதொரு வீழ்ச்சியாக காணப்படுகின்றது. இதேவேளை, 2013ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டில் செலான் வங்கி ரூபா 534 மில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவு செய்திருக்கின்றது. கடந்த வருடத்தின் இதே காலாண்டில் இது ரூபா 638 மில்லியனாக காணப்பட்டது. LKAS / SLFRS ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக இடைக்கால நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மெதுவடைந்த கடன் வளர்ச்சிப் போக்கு மற்றும் வட்டி வீதத்திலான துறைவாரியான அழுத்தம் என்பவற்றுக்கு மத்தியிலும், 2013 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த 9 மாதங்களில் செலான் வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூபா 6,800 மில்லியனில் இருந்து ரூபா 6,847 மில்லியனாக அதிகரித்துள்ளது. கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் ரூபா 1,243 மில்லியனில் இருந்து ரூபா 1,542 மில்லியனாக 24% இனால் அதிகரித்துள்ளது. கடந்த பல வருடங்களில் மைய வங்கியியல் (Core Banking) செயற்பாடுகளில் செலான் வங்கி அடைந்து கொண்டுள்ள திடமான வளர்ச்சியை இது எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மேற்படி 9 மாத காலப்பகுதியிலும் செலவுக் கட்டுப்பாட்டு விடயத்தில் வங்கியானது குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்திச் செயற்பட்டது. செலவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிறன்மிக்க நடவடிக்கைகளின் பெறுபேறாக, 2013 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த 9 மாதங்களில் மொத்த ஊழியர் மற்றும் மேந்தலைச் செலவுகள் மிகக் குறுகியளவான 5.6% அதிகரிப்போடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
2013 பெப்ரவரி மாதத்தில் செலான் வங்கியின் மைய வங்கியியல் முறைமையில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான தரமேம்படுத்தலின் பிரதிபலனாக, வருடத்தின் ஆரம்பத்தில் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பொதுவான சம்பள மறுசீரமைப்புக்கு மத்தியிலும் ஊழியர் செலவுகள் உள்ளடங்கலாக மேந்தலைச் செலவுகள் அனைத்தும் வெறும் 5.6% அதிகரிப்புடன் மட்டுப்படுத்தப்பட்டு பேணப்பட்டுள்ளன.
மேலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் - சொத்துத் தரமானது சீர்கெட்டுப் போகின்ற ஒருவித போக்கு துறைவாரியாக அவதானிக்கப்பட்ட சூழ்நிலையிலும் கூட செலான் வங்கி நடைமுறைப்படுத்திய செயலாற்றலுள்ள மீள்-அறவீட்டு மற்றும் புனருத்தாரன முயற்சிகளின் ஊடாக வங்கி தனது சொத்து தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்தமையாகும். இம் முயற்சிகளின் பெறுபேறாக, 2012 டிசம்பர் மாதத்தில் 12.99% ஆக பதிவு செய்யப்பட்ட மொத்த செயற்படா சொத்துக்களின் (IIS இன் தேறிய) பெறுமதி 2013 செப்டெம்பர் இறுதியில் 11.31% ஆக குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவடைந்துள்ளது.
'பிட்ச் ரேட்டிங்' ஆனது 2013 செப்டெம்பர் மாதத்தில் செலான் வங்கி மீதான தரப்படுத்தலை ஒரு நிலைபேறான கண்ணோட்டத்தின் அடிப்படையில் 'A-lka' என உறுதி செய்துள்ளது. அதேநேரம் 2016ஆம் ஆண்டுக்கான தனது உபாய திட்டத்தை பரிசீலனை செய்தல், தரமேம்படுத்தல் மற்றும் விஸ்தரித்தல் போன்ற பணிகளிலும் வங்கி தற்போது ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் கவனம் செலுத்தப்படுகின்ற பிரிவுகளுள் முற்பண/ வைப்பு வளர்ச்சி, கிளை விஸ்தரிப்பு, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, ஊழியர் அபிவிருத்தி, செயற்படா சொத்து பெறுமதியை குறைத்தல், செலவுக் கட்டுப்பாடு, புதிய உற்பத்தி சேவைகளை உருவாக்குதல், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, பங்குதாரர்களின் பெறுமதி போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
செலான் வங்கி 2013ஆம் ஆண்டில் 3 புதிய கிளைகளை திறந்துள்ளதுடன், 11 கிளைகளை முழுமையாக மறுசீரமைத்துள்ள அதேநேரம் மேலும் 05 கிளைகளை வாடிக்கையாளர்களுக்கு வசதியான வேறு இடங்களுக்கு இடம் மாற்றியிருக்கின்றது. 2013 செப்டெம்பர் 30ஆம் திகதி இருந்தவாறு செலான் வங்கி வலையமைப்பானது 150 கிளைகள், 157 ATM நிலையங்கள் மற்றும் 79 மாணவர் சேமிப்பு மையங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
வழங்கல் ஆரம்பித்த முதல் நாளிலேயே (2013 பெப்ரவரியில்) மிகையாக கோரப்பட்ட ரூபா 2 பில்லியன் பெறுமதியான தொகுதிக்கடன் பத்திர வழங்கலைத் தொடர்ந்து, 2013 இன் 3ஆம் காலாண்டின் இறுதியில் வங்கியின் 'மூலதன போதுமான தன்மை வீதம்' 15.12% ஆக முன்னேற்றம் கண்டது. உள்நாட்டு வங்கியியல் துறையில் காணப்படும் மிகவுயர்ந்த வீதங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது.
செலான் வங்கி 2013 இன் 3ஆம் காலாண்டில் ஸ்திரமான நிதிப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டதன் பயனாக, பங்கொன்றிற்கான உழைப்பு ரூபா 4.48 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, (வரிக்கு முன்னரான இலாபத்தில்) சொத்துக்கள் மீதான வருமானம் மற்றும் பங்குகள் மீதான வருமானம் ஆகியவை முறையே 1.53% ஆகவும் 10.46% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.