
நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு மொத்தமாக 540 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20 வீத அதிகரிப்பாகும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதில் அதிகளவு பங்களிப்பை கொழும்பு இன்டர்நஷனல் கொன்டெய்னர் டேர்மினல் வழங்கியிருந்தது. சீனா மற்றும் ஹொங் கொங் 116.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை மேற்கொண்டிருந்தன. இதனை தொடர்ந்து, கெய்ன் லங்கா பிரைவேற் லிமிடெட் 29.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
MAS ஃபெப்ரிக் பிரைவேற் லிமிடெட் 25.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹொங் கொங் இலிருந்து முதலீடு செய்திருந்ததுடன், இந்தியாவிலிருந்து கிரிஷ் ட்ரான்ஸ்வேர்க்ஸ் கொழும்பு பிரைவேற் லிமிடெட் 20.01 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தது.
203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகள் உட்கட்டமைப்பு செயற்பாடுகளிலும், 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உற்பத்தி செயற்பாடுகளிலும் 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேவைகள் துறையிலும் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விவசாய நடவடிக்கைகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.