.jpg)
- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
(ச.சேகர்)
இலங்கையின் குறுங்கால அடிப்படையில் இலாபத்தை வழங்கக்கூடிய திறைசேரி முறிகள் மீது முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றமையால் பங்குச்சந்தை மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைவடைந்து காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான உறுதியான காரணம் எதுவென தம்மால் உறுதியாக குறிப்பிட முடியாதெனவும், அதிகளவு பெறுமதிக்கு டொலரை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,121.01 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3431.74 ஆகவும் அமைந்திருந்தன.
ஜூன் 24ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,501,432,990 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 20,874 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 19,746 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,128 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்தவார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பரகன், சிஐஎஃவ்எல், சிலோன் லெதர், செலிங்கோ இன்ஸ். மற்றும் சிலோ ஃபினான்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
ஈ.செனலிங், ஹோட்டல் சேர்விசஸ், பி.சி.பார்மா, மிரமர் மற்றும் ஆசியா சியாகா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 41,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 37,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. சந்தை வட்டாரங்களின் மூலம் எதிர்வு கூறப்பட்டிருந்ததை போன்று, கடந்த வாரத்துக்கு முன்னைய வாரம் தங்க இறக்குமதி மீதான 10% வரி விதிப்பானது தங்கத்தின் விலையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.08 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 202.04 ஆக காணப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் டொலருக்கு நிகராக பதிவான ஆகக்குறைந்த பெறுமதி கடந்தவார நாணய மாற்றுக் கொடுக்கல் வாங்கல்களின் போது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.