
உள்நாட்டு பயண முகவர்கள் மற்றும் அரசாங்கத்துடன் சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனத்துக்கு நீண்டகாலமாக காணப்பட்டு வரும் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாததை தொடர்ந்து, இலங்கையில் தான் முன்னெடுக்கும் சேவைகளை இடைநிறுத்த சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பயண முகவர் சம்மேளனம் (TAASL) அறிவித்துள்ளது.
விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்குரிய கொடுப்பனவுகளை முகவர் நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான கால எல்லையை 10 நாட்களாக நீடிக்குமாறு கோரி சிவில் விமான போக்குவரத்து சேவைகளின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி எழுத்து மூலம் அறிவித்திருந்ததை தொடர்ந்து, இந்த முறுகல் நிலை மேலும் அதிகரித்துள்ளதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கொடுப்பனவை மேற்கொள்வதற்கான கால எல்லையை 7 நாட்களாக சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனம் குறித்துள்ளது. ஆயினும் இந்த 7 நாட்களில் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் உள்ளடங்குவதால் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பயண முகவர் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.