
மலைநாட்டு பெருந்தோட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மோசமான மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையின் காரணமாக இலங்கை தேயிலை உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. கடந்த இரு மாத காலப்பகுதியில் பெருந்தோட்டங்களின் மொத்த தேயிலை உற்பத்தியில் சுமார் 40 வீதத்தை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலை தொடருமாயின், பெருந்தோட்ட கம்பனிகள் எதிர்வரும் காலப்பகுதியில் பெருமளவு சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த 47 ஆண்டுகளில் பெறப்பட்டிருந்த அதிகூடிய மழைவீழ்ச்சியை பதிவு செய்துள்ள பெருந்தோட்ட பகுதிகள், இந்த மோசமான நிலையின் காரணமாக, தேயிலை உற்பத்தி செலவை சாதாரண பெறுமதியை விட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இந்த பெறுமதி தற்போது 700ரூபாவுக்கும் அதிகமாக நுவரெலியா பிராந்தியத்தைச் சேர்ந்த சில பெருந்தோட்டங்களில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விசேடமாக நாட்டின் சிறந்த தேயிலை உற்பத்தி செய்யப்படும் பகுதிகளாக கருதப்படும் நுவரெலியா, ஹட்டன், டிக்கோயா, அகரபத்தன மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, மொத்த தேயிலை கொழுந்து பறிக்கும் அளவு 40 முதல் 45 வீதமாக அமைந்துள்ளது. இது உற்பத்தியாளர்களுக்கு மிகவும் நெருக்கடியான நிலையை தோற்றுவித்துள்ளது.
எல்பிட்டிய பிளான்டேஷன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பொது முகாமையாளரான செனரத் பஹாத்கும்புர கருத்து தெரிவிக்கையில், 'தற்போது நிலவும் பாதகமான சூழநிலை குறித்து கொள்வனவாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். தற்போது தேயிலை உற்பத்தி செலவு மோசமான காலநிலை காரணமாக கிலோகிராம் ஒன்றுக்கு 700 – 730 ரூபாவாக காணப்படுகிறது. சராசரி விற்பனை பெறுமதி 325 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக விற்பனையாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டுள்ளது' என்றார்.
இந்த கடினமான நிலையை கருத்தில் கொண்டு கொள்வனவாளர்கள் சாதாரண விலையை செலுத்தி தேயிலையை கொள்வனவு செய்ய முன்வர வேண்டும் என குறிப்பிட்ட செனரத் பஹாத்கும்புர, 'குறைந்த விளைச்சல் மூலம் உற்பத்தி திறன் வீழ்ச்சியடையும் அது போல உற்பத்தி செலவும் அதிகளவு அதிகரிக்கும். உற்பத்தி திறனுடன் நேரடியாக தொடர்புடையதாக விளைச்சலும் அமைந்துள்ளது' என்றார்.
விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளமையானது, தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி துறைகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு துறைகளும் அண்மையில் வழங்கப்பட்டிருந்த சம்பள அதிகரிப்பின் காரணமாக பெருமளவான இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றன. இலங்கையின் தேயிலை உற்பத்தி செலவானது உலக தேயிலை உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதில் 65 – 75 வீதமானவை ஊழியர்களின் சம்பளத்தை கொண்டதாக அமைந்துள்ளது.
'பெருந்தோட்டங்களை பொறுத்தமட்டில் எமது பிரதான சொத்தாக ஊழியர்கள் அமைந்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் நாம் வழங்கியிருந்த சம்பள அதிகரிப்பின் மூலம் ஏற்பட்டிருந்த உற்பத்தி செலவு அதிகரிப்பை, ஊழியர்களுடனான புரிந்துணர்வு அடிப்படையில் ஓரளவு சமாளித்திருந்தோம். ஆயினும் தற்போது இந்த மோசமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நிலையானது எமக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது' என பஹாத்கும்புர மேலும் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ தரவுகளுக்கமைய, சில பெருந்தோட்டக் கம்பனிகள் கடந்த மாதம் சுமார் 100 மில்லியன் ரூபா வரையிலான நட்டத்தை எதிர்நோக்கியிருந்தன. இந்த நிலை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.
.
எல்பிட்டிய பிளான்டேஷன் கம்பனி நாளாந்தம் கணிப்பிடும் வகையில் அமைந்த உற்பத்தி கணிப்பீடுகளை கைக்கொண்டு வருகிறது. இந்த கணிப்பீட்டு முறைகள் விளைச்சல்கள் மற்றும் வருமானத்தை ஒப்பீட்டளவில் கணிப்பிடும் வகையில் அமைந்துள்ளன. இதன் காரணமாக ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் மற்றும் வெகுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கொடுப்பனவுகள் ஊழியர்களுக்கு அனுகூலங்களை வழங்கி வருகின்றன.
அதிகளவு விளைச்சல் காணப்படின் உற்பத்தி செலவு குறைவாகவே காணப்படும். ஏனெனில் உற்பத்தி செயற்பாட்டில் விளைச்சல் தீர்மானிக்கும் பொருளாக அமைந்துள்ளது என பஹாத்கும்புர தெளிவுபடுத்தியிருந்தார். சிறந்த விவசாய கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் சிறந்த விளைச்சல்களை பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் ஊழியர்களுக்கும் கம்பனிகளுக்கும் வெற்றகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.