
இலங்கையின் முன்னணி காகிதாதிகள் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான அட்லஸ் அண்மையில் இலங்கையின் பழமையானதும், அதிகளவு மதிப்பையும் பெற்ற பஸ்டெல் தயாரிப்பான 'ஹோம்ரன்' வர்த்தக நாமத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இலங்கையின் முதற்தர பஸ்டெல் வர்த்தக நாமம் எனும் வகையில், ஹோம்ரன் வர்த்தக நாமத்தை கொள்வனவு செய்தமையானது, அட்லஸின் காகிதாதிகள் உற்பத்திப்பரம்பலுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கலர் புரொடக்ட்ஸ் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தினால் முன்னர் நிர்வகிக்கப்பட்ட ஹோம்ரன் வர்த்தக நாமமானது சிறுவர்கள், வயது வந்தவர்கள் மத்தியில் அதி விருப்பத்திற்குரியதும் நினைவில் பதிந்ததொன்றாகவும் காணப்படுகிறது. 1959ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனமானது ஹோம்ரன் வர்த்தக நாமத்தின் கீழ் பஸ்டல்கள், கிரேயோன்கள், வர்ண பென்சில்கள், க்ளே வகைகள் மற்றும் கவராயப் பெட்டிகள் போன்ற பலதரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து வந்துள்ளது.
அட்லஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிர்மல் மதநாயக்க இந்த உரிமைமாற்றல் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'பல தசாப்த காலமாக இலங்கையின் இல்லங்களில் புகழ்பெற்றதொன்றாக ஹோம்ரன் வர்த்தக நாமம் திகழ்கிறது. இலங்கையின் காகிதாதிகள் சந்தையில் முன்னோடிகளான நாம், அனைவராலும் நேசிக்கப்படும் ஹோம்ரன் வர்த்தக நாமத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்வதோடு அதினுள் அட்லஸின் சாதகங்களையும் சேர்ப்பதில் மிகுந்த பெருமையடைகிறோம்' என்றார்.
கலர் புரொடக்ட்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அமல் கருணாதிலக மற்றும் அட்;லஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிர்மல் மதநாயக்க ஆகியோர் இந்த உரிமைமாற்றல் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.
அட்லஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிர்மல் மதநாயக்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'காகிதாதிகள் சந்தையில் முன்னோடிகள் எனும் வகையிலும், புதுமை மற்றும் தரம் ஆகியவற்றுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எனும் வகையிலும் நாடு முழுவதுமுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தரம் வாய்ந்த பரந்துபட்ட பொருட்களை வழங்குவதற்கு அட்லஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. எனவே இந்த உரிமைமாறல் காரணமாக உயர்தரம் வாய்ந்த ஹோம்ரன் தயாரிப்புக்களை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவதுடன், படைப்புத்திறனையும் கற்பனைவளத்தையும் ஊக்குவிக்கும் எமது இலக்கை மேலும் சிறப்பாக முன்னெடுக்க இயலும்' என்றார்.