
-ச.சேகர்
இலங்கையை பொறுத்தமட்டில் க்ளவுட் கட்டமைப்பை பின்பற்றும் தன்மை மிகவும் உயாந்தளவில் காணப்படுவதாகவும், அபிவிருத்தியடைந்த நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் இலங்கையர்கள் அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர் என ஒராக்கள் நிறுவனத்தின் ஆசியான் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் கலீம் சௌத்திரி தெரிவித்தார்.
டேடாபேஸ் சேவைகளை வழங்கி வரும் ஒராக்கள், தனது புதிய அறிமுகமாக ஒராக்கள் டேடாபேஸ் 12C இனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. சுமார் ஒன்றரை மாத காலத்துக்கு முன்னர் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த புதிய டேடாபேஸ், பல்வேறு ஏனைய டேடாபேஸ்களை உள்ளடக்கக்கூடிய வசதியை (multitenant) கொண்டுள்ளது.
இந்த டேடாபேஸ் தீர்வானது, வேகமாக இயங்கக்கூடியதுடன், நிலையாண்மை, அளவை கொண்டதாக அமைந்துள்ளது. இந்த டேடாபேஸ் கட்டமைப்பை தமது வர்த்தக நிறுவனங்களில் உபயோகிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், நிறுவனத்தின் செயற்பாட்டு செலவை பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒராக்கள் நிறுவனத்தின் ஆசியான் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் கலீம் சௌத்திரி தெரிவித்தார்.
அனைத்து விதமான டேடாபேஸ்களினதும் காப்பு பிரதிகளை இந்த 12C டேடாபேஸ் கட்டமைப்பில் சேமித்து வைக்கககூடிய வசதி காணப்படுகிறது. இந்த புதிய டேடாபேஸ் 500 மேலதிக உள்ளம்சங்களையும், 2500 நபர்கள் வருடமொன்றில் செயலாற்றும் கால நேரத்துக்கு நிகரான பரீட்சார்த்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1.2 மில்லியன் மணித்தியால பரிசோதனையின் பின்னர் இந்த புதிய டேடாபேஸ் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
வங்கிகளின் செயற்பாடுகளை எடுத்துக் கொண்டால், ஆசிய நாடுகளை பொறுத்தமட்டில் 15 – 20 வீதமானவர்களே வங்கிக் கண்க்கொன்றை வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் பின்தங்கிய பிரதேசங்களில் அதிகளவு செலவீனத்தில் கிளை ஒன்றை தாபிப்பது என்பது மிகவும் சவாலான விடயமாக அமைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வங்கிகள் தொழில்நுட்பத்தில் அதிகளவு கவனம் செலுத்துகின்றன. க்ளவுட் கட்டமைப்பை உபயோப்பதில் ஆர்வம் செலுத்துகின்றன. இது விசேடமாக செலவீனத்தை குறைப்பதற்காகும். இந்த சந்தர்ப்பங்களில் இந்த புதிய 12C டேடாபேஸ் கட்டமைப்பு மிகவும் பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளது.
கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர்களை பொறுத்தமட்டில் இந்த 12C டேடாபேஸ் மிகவும் அனுகூலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இலங்கையில் இந்த டேடாபேஸ் தற்போது எமது முன்னணி வாடிக்கையாளர்கள் மத்தியில் பரீட்சார்த்த நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எந்தவொரு வர்த்தகத்தை எடுத்துக் கொண்டாலும், தொழில்நுட்பம் என்பது முதுகெலும்பாக அமைந்துள்ளது. அத்துடன் இன்றைய கால கட்டத்தில் வியாபாரத்துறைகள் மிகவும் போட்டிகரத்தன்மை வாய்ந்தனவாக அமைந்துள்ளன. காலம் கடந்த அறிமுகங்களும், சேவைகளும் பயனற்றதாக அமைந்துவிடுகின்றன.
இந்த வகையான சகல தொழில்நுட்பசார் விடயங்களுக்கும் சிறந்த தீர்வாக ஒராக்கள் 12C டேடாபேஸ் அமைந்துள்ளது.