2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா, மாலைத்தீவு நாடுகளின் வதிவிட முகாமையாளராக இம்ரான் வில்கசிம் நியமனம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா, மாலைத்தீவு ஆகிய நாடுகளின் புதிய விதிவிட முகாமையாளராக இம்ரான் வில்கசிம் நியமிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
ஸ்ரீலங்காவினதும், மாலைத்தீவினதும் விதிவிட முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள இம்ரான் வில்கசிமிடம் நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்கான ஆற்றல்கள் காணப்படுகின்றதுடன் இருநாட்டினதும் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் நுகர்வோர் தயாரிப்புக்கள், சேவை வழங்குதல், பங்குச் சந்தை, நிதி செயற்றிரன்,  வாடிக்கையாளர் மற்றும் பங்காளர் அனுபவங்கள், ஊழியர் முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு அவர் நேரடிப் பொறுப்பை ஏற்று செயற்படுவார். 
 
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பொதுமுகாமையாளர் ஜேமி ஹார்பர் புதிய நியமனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'இம்ரான் எமது வியாபார நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டதுடன் நாட்டிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார். அத்துடன் இவர் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் மூலம் நாட்டுக்கு பெறுமதி சேர்க்கவும், வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் சமூகத்துக்கு ஒத்துழைப்பை வழங்கவும் பணியாற்றுவார்' என தெரிவித்தார்.
 
தமது இலக்கு தொடர்பாக இம்ரான் வில்கசிம் கருத்து தெரிவிக்கையில், 'மைக்ரோசொப்ட் நிறுவனம் மூலம் நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை வளமாக்க முடியும் என நம்புகிறேன். மென்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றதுடன் கணினி, டெப்லட், கையடக்க சாதனங்கள் உள்ளிட்டவை மூலம் பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம். மைக்ரோசொப்ட் வலையமைப்பின் 100 இற்கும் மேற்பட்ட பங்காளர்கள் மூலம் இச்சேவை வழங்கப்படுகின்றது' என தெரிவித்தார்
 
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் 'இந்த நேரம் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்துக்கும் முழு நாட்டுக்கும் முக்கியமானதொரு காலமாக அமைந்துள்ளது. நாட்டின்  நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் பயன்படுத்தி மக்களுக்கு சர்வதேச ரீதியிலான நன்மைகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் சிறந்த எதிர்காலத்துக்கு தகவல் தொழில்நுட்ப துறைசார் முன்னோடி, என்ற வகையில் எமது நிறுவனம் செயற்படும். நாட்டு மக்கள் தொடர்பாகவும் பொருளாதாரம் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. அத்துடன் அரசாங்கம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நவீனமயப்படுத்தல் ஆகியவற்றை முக்கிய இலக்காக  கொண்டு செயற்படுகின்றது. மஹிந்த சிந்தனைக்கு அமைய மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நாட்டுக்கு பெறுமதி சேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது' என்றார். 
 
இம்ரான் வில்கசிம் வதிவிட முகாமையாளராக பதவியேற்க முன்பு மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் 'வர்த்தக வியாபாரத்துக்கான' பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். அவர் கடமையாற்றிய மூன்று ஆண்டுகளும் வர்த்தக நடவடிக்கைகள் 50 வீதமாக அதிகரித்துடன் மைக்ரோசொப்ட் க்ளவுட் சார்ந்த சேவைகளுக்கு அவர் முக்கிய பங்காற்றியிருந்தார். மதிப்புமிக்க மைக்ரோசொப்ட் 'கோல் க்ளப்' விருதை இரண்டு தடவைகள் ஆசிய பசுபிக் தலைவரிடமிருந்து பெற்ற இம்ரான் வில்கசிம் வர்த்தக முகாமைத்துவத்துக்கான முதுகலை பட்டத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையில் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .