.jpg)
முதியோர்கள் தினம் 2013 ஐ முன்னிட்டு எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சமூக கூட்டாண்மை பொறுப்பு பிரிவின் மூலமாக அரநாயக்க, தெமட்டகொட, பாணந்துறை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளில் சுகாதார பராமரிப்பு முகாம்களை ஏற்பாடு செய்திருந்தது.
ஹெல்ப்ஏஜ் உடன் இணைந்து எக்ஸ்போலங்கா குறைந்த வருமானம் பெறும் நபர்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் வகையில் இந்த இலவச முகாம்களை ஏற்பாடு செய்திருந்தது. சுகாதார முகாம்களின் ஊடாக நோயாளர்களுக்கு முழுமையான சுகாதார சேவைகளை வழங்கும் வகையிலும், உடல் பருமன் சுட்டெண் கணிப்பீடு, பார்வை பராமரிப்பு மற்றும் உணவு முறை ஆலொசனை போன்றன வழங்கப்பட்டிருந்தன. குறித்த மருத்துவ முகாம்களில் பங்குபற்றியிருந்த ஆலோசகர்களின் மூலம் நோயாளர்களுக்கு மருந்துச்சிட்டையின் அடிப்படையில் இலவச மருந்து வகைகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறித்து எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், கூட்டாண்மை தொடர்பாடல்கள் பிரிவு மற்றும் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் பிரிவின் தலைமை அதிகாரி பெடி வீரசேகர கருத்து தெரிவி;க்கையில்,'வயது முதிர்வடைந்து செல்லும் சமூகம் எனும் வகையில் முதியவர்களை பராமரிப்பது தொடர்பாக பெருமளவான சுகாதார பராமரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. குறித்த தினத்தில் மட்டும் நாம் இதனை செய்தால் போதாது, வருடம் முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எக்ஸ்போலங்காவை சேர்ந்த நாம் எம்மால் இயலுமான வழிமுறைகளில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.
குறித்த முகாம்களில் பொதுச் சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டிருந்தமைக்கு மேலதிகமாக வயது முதிர்ந்தவர்களுக்கு பார்வை பராமரிப்பு நடவடிக்கைகளினூடாக இலவச மூக்குக்கண்ணாடிகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த முகாம்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் முதியவர்களின் நலனில் அக்கறை கொண்டியங்கி வரும் அரசசார்பற்ற நிறுவனமான ஹெல்ப்ஏஜ் இன் உதவியை எக்ஸ்போலங்கா சமூகபொறுப்பு நடவடிக்கைகளுக்கான பிரிவு பெற்றிருந்தது.
முதியவர்கள் தினம் என்பது இலங்கையின் வயது முதிர்வடைந்தவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 'உங்கள் வாழ் நாள் முழுவதும் முதமைக்காக தயாராவது' எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான முதியோர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த முதியவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைப் போன்று இருமடங்காக அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு எதிர்வுகூறியுள்ளது. தற்போது முதியவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 10 வீதமாக அமைந்துள்ளது.
எக்ஸ்போலங்காவின் சமூக பொறுப்புத்திட்டத்துக்கு மேலதிகமாக, எக்ஸ்போ மெடிக்ஸ் மூலமாகவும் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக் மேலதிகமாக புலமைப்பரிசில் திட்டங்கள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, உணவு திட்டங்கள் மற்றும் சர்வதேச நீர் தினம், புவி மணித்தியாலம் மற்றும் சூழல் தினம் போன்ற சூழல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து சமூக பொறுப்புத்திட்டங்களும் ஐந்து பிரிவுகளை மையமாக கொண்டு அமைந்துள்ளன. சுகாதாரம், கல்வி, சூழல், சமூக அபிவிருத்தி மற்றும் அனர்த்த நிவாரணம் போன்றன அவையாகும். சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை திகழச்செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.