2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொழில் நிறுவனங்களுடன் தொழில் வழங்குநர் சம்மேளனம் கைகோர்ப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தேடும் ஆளுமையை விருத்தி செய்யும் வகையில் நவம்பர் மாதத்தில் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம், முன்னணி தொழில் வழங்கும் அங்கத்தவர்களுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளை கையாளும் சமூகநல அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தேட உதவும் அமைப்புகளுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தது.

கடந்த மாதம் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம், அதன் முன்னணி தொழில் வழங்கும் அங்கத்துவ நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தேடும் ஆளுமையை விருத்தி செய்வதற்கான தொழிற்பயிற்சி பட்டறையை முன்னெடுத்திருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகள் தொடர்பாக காணப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான விளக்கங்களையும், செயன்முறை பயிற்சிகளை வழங்கும் வகையிலும் இந்த பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாது என் தவறான வழியில் வழிநடத்தப்பட்டிருந்தனர், அதை சீர் செய்யும் வகையில் இந்த பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது. மேலும், இந்த பயிற்சிப்பட்டறை சர்வதேச தொழிலாளர் ஒன்றியத்தின் லீட்ஸ் திட்டத்துக்கு அமைவாக வடக்கிலும், ஹான்டிகெப் இன்டர்நஷனல் உதவியுடன் கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தொழில் வழங்குநர் சம்மேளனத்தின் மாற்றுத்திறனாளிகள் வலையமைப்பு என்பது கடந்த 13 ஆண்டு காலமாக செயற்பாட்டில் உள்ளது. உலகளாவிய ரீதியில் மிகவும் நீண்ட காலம் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வலையமைப்பாக இது திகழ்கிறது. இதுவரையில் இந்த வலையமைப்பினூடாக சுமார் 500 மாற்றுத்திறனாளிகள் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், 900க்கும் அதிகமானோருக்கு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான தகவல் தொழில்நுட்பம் ஆளுமை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வலையமைப்பில் 38 அங்கத்துவ நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க தம்மை அர்ப்பணித்துள்ளன.

பல்வேறு சமூகநல அமைப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்ட சமூகங்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததன் மூலம் தொழில் வழங்குநர்கள் சம்மேளனம், பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் அவர்களின் மாற்றுத்திறன் காரணமாக தமக்கு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்ள முடியாது என கருதுகின்றார்கள் என்பதையும், அவர்களின் மாற்றுத்திறன் காரணமாக தொழில் வெற்றிடமொன்றுக்கு விண்ணப்பிப்பது கூட இல்லை என்பதை கண்டறிந்துள்ளது.

இந்த தவறான கருத்துரையானது, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களை சூழவுள்ளவர்களின் மூலம் ஊக்குவிப்படுவதாகவும், சில சமயங்களில் மாற்றுத்திறனாளிகளை மேற்பார்வை செய்யும் அமைப்புகள் கூட செல்வாக்கு செலுத்துவது கண்டறியப்பட்டிருந்தது. பலர் எண்ணியிருந்தது, பொருத்தமான தொழில்கள், 'மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்' என குறிப்பிடப்பட்டு விளம்பரப்படுத்தப்படும் என பலர் எண்ணியிருந்தனர். சமமான வாய்ப்புகளை வழங்கும் தொழில்வழங்குநர்களின் செயற்பாடுகள் குறித்து எவரும் அறிந்திருக்கவில்லை. தமது மாற்றுத்திறனையும் மீறி, குறித்த தொழில் நிலையில் காணப்படும் பொறுப்புகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவது குறித்து தெளிவுபடுத்தியதும், பலருக்கு அது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருந்தது.

இந்த அனைத்து பங்காளர்களினதும், மனநிலை என்பது, 'குறை' என்பதில் அதிகளவு கவனத்தை செலுத்தியிருந்ததே தவிர, 'இயலுமை' என்பதில் கவனம் செலுத்த தவறியிருந்தது. இதுவே தொழில் வழங்குநர் சம்மேளனத்தின் மாற்றுத்திறனாளிகளின் வலையமைப்புக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது. இந்த மனநிலையை எவ்வாறு மாற்றுவது?

சர்வதேச தொழிலாளர் ஒன்றியனத்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வலையமைப்பின் உதவியுடன், இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம், தொழில் தேடுவோருக்குhன பயிற்சிப்பட்டறையை வடிவமைப்பு செய்திருந்தது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கலாசார மற்றும் சமூக நம்பிக்கைகளுக்கு அமைவாக இந்த பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வலையமைப்பு, தமது பயிற்சிப்பட்டறைக்கு, சமூக நல அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொருத்தமான நிறுவனங்களையும் ஒன்றிணைத்திருந்ததுடன், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் ஒரு பயிற்றுவிப்பாளர் மற்றும் ஒரு மாற்றுத்திறன் வாய்ந்த தொழில் தேடுநரையும் அழைத்திருந்தது. 

இந்த பயிற்சிப்பட்டறையை முன்னெடுக்க இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம், கார்கில்ஸ் ஃபுட் சிட்டி, MAS, ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் சினமன் மற்றும் சாயா றிசோர்ட்ஸ் ஆகியோரின் பங்களிப்பையும் பெற்றிருந்தது. இந்த பயிற்சிப்பட்டறைகளின் போது சுயவிபரக் கோவை வடிவமைப்பது, நேர்முகத்தேர்வுக்கு முகங்கொடுப்பது எவ்வாறு, தொழில் வெற்றிடங்களை எவ்வாறு அறிந்து கொள்வது, அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பது போன்ற விடயங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஜோன் கீல்ஸ் சினமன் மற்றும் சாயா றிசோர்ட்ஸ் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அதிகாரி ஷிஹாம் கௌஸ் கருத்து தெரிவிக்கையில், 'உடல் ரீதியாக குறையை கொண்டிருப்பது என்பது எந்த வகையிலும் சமூகத்தில் அங்கத்துவத்தை பெறுவதற்கு ஒரு குறையாக அமையாது. நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு பிரிவுக்கும் இணைப்பை கொண்டிருக்க வேண்டும். அனைவரும் சமமான முறையில் பராமரிக்கப்பட வேண்டியதை உறுதி செய்வது எமது பொறுப்பாகும்' என்றார்.
 
கார்கில்ஸ் குழுமத்தின் வட பிராந்தியத்துக்கான வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் நேசகுமார் கருத்து தெரிவிக்கையில், 'இது போன்ற பயிற்சிப்பட்டறைகள் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர்களின் எதிர்மறையான மனநிலையிலிருந்து முன்னேற்றம் காண்பதற்கு உதவியாக இவை அமைந்திருக்கும். இவர்களை போன்றவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க முன்வரும் நிறுவனங்களின் நோக்கமும் பாராட்டுதலுக்குரியது' என்றார்.

இந்த பயிற்சிப்பட்டறைகளின் வினைத்திறன் குறித்து MAS நிறுவனத்தின் மனித வளப்பிரிவின் அதிகாரி கயானி ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், 'தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கமர்த்துவதற்கு நேரடியாக நிறுவனங்களுடனும், மாற்றுத்திறன் வாய்ந்த நபர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்த இந்த பயிற்சிப்பட்டறைகள் பயனளிப்பதாக அமைந்துள்ளன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .