
சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் மஞ்சி வர்த்தகநாமம் அண்மையில் இந்தோனேஷியா பாலி நகரில் நடைபெற்ற உலகளாவிய செயற்திறன் சிறப்பு விருதுகள் விழாவில் (GPEA) மிகப்பெரிய உற்பத்தி பிரிவின் கீழ் 'Quest for Excellence' விருதினை வென்றுள்ளது. சர்வதேச நிறுவனங்களுக்கு இணையான தேவைகளை கொண்டிருக்கும் நிறுவனங்களை கௌரவப்படுத்தி Quest for Excellence விருது வழங்கப்படுகிறது.
'சிறப்பாக செயற்படும் நிறுவனங்களை அடையாளப்படுத்தி வழங்கப்படும் இச் சர்வதேச விருதினை வென்றுள்ளமை குறித்து நாம் பெருமையடைகிறோம். CBL ஆகிய நாம், தொடர்ச்சியாக எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்கண்டு வருவதுடன், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் நடைபெறும் உணவு மற்றும் குடிபானங்கள் கண்காட்சிகளில் பங்குபற்றி வாடிக்கையாளர்களின் சுவைகள் மற்றும் நவீன போக்குகள் குறித்து அறிந்து வைத்துள்ளோம். இந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் தரம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருவதன் காரணமாக CBL இற்கு இவ் அங்கீகாரம் கிடைத்துள்ளது' என சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்டின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவின் பொது முகாமையாளர் அனுர செனரத்ன தெரிவித்தார்.
ஆசிய பசுபிக் தர அமைப்பின் (APQO) மூலம் முன்னெடுக்கப்படும் சிறந்த வணிக செயற்பாடுகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் நிகழ்வாக GPEA விளங்குகிறது. இவ் விருதானது வேகமாக மாறிவரும் உலகச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிறுவனங்களின் செயற்திறன் மற்றும் உபாயங்களை மேம்படுத்துகின்றது. இந் நிகழ்வு போட்டிகரமான உலக வர்த்தகத்தை வெற்றி கொள்ளவும், நிலையாக பேணவும் மற்றும் செயற்திறனை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புக்களையும் வழங்குகிறது.
'2000ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பிரிவுகளின் கீழ் 127 நிறுவனங்கள் இவ் விருதுகளை வென்றுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவைகள் உள்ளடங்கிய நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் மீதும் கவனம் செலுத்தும் வகையில் ஆசிய பசுபிக் தர விருதானது உலகளாவிய சிறப்பு விருதுகள் என மாற்றம் செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் பயிற்சிபெற்ற மல்கம் பால்ரிட்ஜ் விருது தேர்வாளர்கள் மூலம்; தலைமைத்துவம், மூலோபாய திட்டமிடல், வாடிக்கையாளர் ஈர்ப்பு, அளவீட்டு பகுப்பாய்வு மற்றும் அறிவு மேலாண்மை, தொழிலாளர் ஈர்ப்பு, செயற்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வேட்பாளர்களை மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் மல்கம் பால்ரிட்ஜ் தேசிய தர கூட்டமைப்பு (MBNQA) மூலம் இம் மதிப்பீட்டு செயல்முறையின் ஓர் அங்கமாக கருத்துக்கள் அல்லது தளத்திற்கு விஜயம் செய்து அறிக்கையிடும் முறைமைகள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.