2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமது தொழிற்றுறையை முன்கொண்டு செல்வதற்காக பாபர் சேவை செய்வோர் கைகோர்க்கின்றனர்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 13 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் தமது தொழிற்றுறையை முன்கொண்டு செல்லும் நோக்கில் 'இலங்கை பாபர் சேவை சங்கத்தை' உருவாக்குவதற்காக இலங்கையின் முடிதிருத்துனர்கள் ஒன்றாக கைகோர்த்துள்ளனர். 
 
இலங்கையில் வெல்லா, வோல், டஃப்ட் மற்றும் ஜெரிச்சோ போன்ற உற்பத்திகளுக்கான ஏக விநியோகஸ்தர்களாக திகழும் கொஸ்மோடெக் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஆதரவுடன் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு (BMICH) மண்டபத்தில் வைத்து இந்த சங்கமானது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையின் பாபர் சேவை துறையைச் சேர்ந்த அதிகளவிலான முடிதிருத்தும் கலைஞர்களும் நலன்விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 
 
அதேவேளை, வோல் கிலிப்பர் கோப்பரேஷன் நிறுவனத்தின் தூரகிழக்கு நாடுகளுக்கான விற்பனை பணிப்பாளர் திரு. டொன் சீல், சிங்கப்பூர் தாய் வாஹ் டிஸ்ரிபியூட்டர் பிரைவேட் லிமிட்டெட் முகாமையாளர் திரு. ரொபர்ட் வொங்க், வோல் இந்தியா நிறுவனத்தின் புதுமையாக்க பிரிவு பணிப்பாளர் செல்வி. றினீ மெலிக் மற்றும் வோல் இந்தியா நிறுவன வர்த்தக குறியீட்டு தூதுவர் செல்வி. அமாலி கந்தசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
 
இதன்போது SLBA சங்கத்தின் தலைவராக நிரோஷ் ரணவக்காராச்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அதேவேளை, புதிய பிரதித் தலைவராக எம். பாலகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டார். இச் சங்கத்தின் புதிய செயலாளராக சந்தன விஜேசிங்கவும், பொருளாளராக செமாலி வீரசூரியவும் தெரிவு செய்யப்பட்டனர். 
 
தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பாபர் சேவைத் துறையினர்களிடையே இடைத்தொடர்பினை ஊக்குவித்தல் மற்றும் வளர்ப்பதுடன்  அவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அறிவினை பகிர்ந்து கொள்தலுமே இலங்கை பாபர் சேவை சங்கத்தின் (SLBA) அடிப்படை இலக்குகளாக உள்ளன. சர்வதேச அளவிலான காட்சிப்படுத்தல்களின் ஊடாக, உள்ள10ர் பாபர் சேவை சமூகத்தின் திறன்களை மேம்படுத்தும் விடயத்திற்கும் விஷேட முக்கியத்துவம் கொடுக்கப்படும்.  
 
பாதுகாப்பு, தூய்மை மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகள் போன்றவை தொடர்பில் உயர் தராதரங்களை பேணும் விதத்தில் இலங்கையின் பாபர் சேவை சமூகத்தை சேர்ந்தவர்களை ஊக்குவிப்பதற்கான மற்றும் பயிற்சியளிப்பதற்கான திட்டங்களும் தற்போது வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக, இத்துறையில் தொழில் புரிந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு வெகுமதி வழங்கி, அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளும் நடாத்தப்படும். 
 
இச் சங்கத்தின் இரண்டாம்நிலை நோக்கங்களுள் - இலங்கையின் தேசிய கொள்கையில் செல்வாக்கு செலுத்துதல், மாற்றங்களை ஏற்படுத்துதல் அல்லது உறுதுணை அளித்தல் ஆகிய விடயங்களில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக இந்நாட்டின் பாபர் சேவை சமூகத்தினரை பிரதிநிதித்துவம் செய்தலும் உள்ளடங்குகின்றது. இதேவேளை, உறுப்பினர்களுக்கு இக்கட்டான நேரங்களில் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய சங்கம் ஒன்றை இது அளிக்கின்றது. அதன்மூலம், இவ்வாறான ஒரு அமைப்பின் கீழ் அங்கம் வகிப்பதனால் கிடைக்கும் பாதுகாப்பை வழங்குகின்றது. தாம் ஓய்வுபெற்ற பின்னரான காலத்தில் சங்க உறுப்பினர்களின் நலன்புரி மற்றும் நல்வாழ்வு என்பவற்றை உறுதிப்படுத்தும் விதத்திலமைந்த திட்டங்களையும் இச் சங்கமானது ஏற்பாடு செய்து முன்னெடுக்கும். 
 
இவ்வாறான ஒரு சங்கம் உருவாவதற்கு முன்னின்று உழைத்த கொஸ்மோடெக் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன தலைவரான திரு. சிரந்த பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கை முழுவதும் பரந்துபட்டதாக சுமார் 50,000 பாபர் சேவைத் துறையினர் தற்சமயம் தொழில்புரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுள் சுமார் 15,000 பேர் மேல் மாகாணத்தில் மிகவும் செறிவாக பணியாற்றுகின்றனர். இலங்கையிலுள்ள பாபர் சேவை புரிபவர்கள் இந்நாட்டு பொது மக்களுக்கு  பல தசாப்தங்களாக போற்றுதலுக்குரிய ஒரு பணியை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றனர். மெய் சிலிர்க்கின்ற பொருளாதார நடவடிக்கைகள் நம்மைச் சுற்றி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், பிராந்தியத்தின் ஒரு கேந்திர முக்கியத்துவமிக்க மையமாக இலங்கை படிப்படியாக முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், இவ்வகையான ஒரு சங்கத்தை உருவாக்குவதற்கான காலம் கனிந்து வந்துள்ளதாக நாம் உணர்ந்தோம். பாபர் சேவை புரியும் அனைவரையும் பொதுவான ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கும், அதனூடாக அவர்களது தொழிற்றுறைக்கு மிகவுன்னத வலிமையை அளிக்கவும் இச் சங்கம் எதிர்பார்க்கின்றது' என்றார். 
 
இலங்கை பாபர் சேவைத் துறையினர் சங்கத்தின் புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான திரு. நிரோஷ் ரணவக்காராச்சி இவ்வாறான அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான முயற்சி குறித்து விபரிக்கையில், 'இது மிக நீண்டகாலமாக தாமதமாகி வந்த ஒரு முயற்சியாகும். இப்போது நாம் அனைவரும் கைகோர்க்க முடிந்ததையிட்டும் அதேபோல் இத் தொழிற்றுறையை உன்னத மட்டங்களுக்கு கொண்டு செல்வதையிட்டும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஆம், எமது பாபர் சேவை புரிபவர்களை பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகம் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டிய தேவை நமக்குள்ளது. அதன் வாயிலாக, அவர்கள் தமது திறன்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிவதுடன், அதனால் அதிகமாக உழைத்துக் கொள்ளவும் வழி பிறக்கும்' என்றார். SLBA சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளரான திரு. சந்தன விஜேசிங்க, 'சரியான திசையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் புத்திசாலித்தனமான ஒரு முன்னெடுப்பு' என்று இதனை சிலாகித்துக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் 'இலங்கையின் ஒட்டுமொத்த பாபர் சேவை தொழில் துறையையும் இது அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்லும்' என்று தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .