
தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பொறியியல் துறைகளில் பட்டதாரி கற்கைகளை வழங்கிவரும் SLIIT கல்வியகம், தமது புதிய மாணவர் குழுவை கல்வியகத்துக்கு வரவேற்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இவ்வருடம் 1,100 மாணவர்கள் இணைந்து கொண்டு இலங்கையின் மிகச்சிறந்த உயர் கல்வியகத்தில் தமது கற்கையை தொடர்வதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
1999ஆம் ஆண்டு வெறும் 400 மாணவர்களுடன் SLIIT கல்வியகம் BOC டவரில் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், இன்று 6,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஓர் பல்கலைக்கழகமாக செயற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் SLIIT கல்வியகம், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தமது கல்வி திட்டங்களை விஸ்தரித்திருந்ததுடன், தற்போது புகழ்பெற்ற LMD இதழ் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இலங்கையின் உயர்கல்வி நிலையங்களுள் முதலிடத்தில் SLIIT உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
'இதற்கு மேலதிகமாக எமது மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் Codefest, Robofest, மென்பொருள் போட்டிகள், சிம்போசியம் மற்றும் திறன்காண் போட்டிகள், விளையாட்டு தினங்கள் மற்றும் சமூக திட்டங்கள் போன்ற பிற கல்விசார் திட்டங்களையும் ஏற்பாடு செய்து வருகின்றோம். எமது மாணவர்களில் பலர் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று எமது கல்வியகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்' என SLIIT இன் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லலித் கமகே தெரிவித்தார்.
இவ்வருடம் SLIIT கல்வியகம் B.Sc. பட்டதாரி கற்கைகளை வழங்கவுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் B.Sc.(Hons) பட்டதாரி கற்கை, வணிக முகாமைத்துவத்தில் விசேட கௌரவ BBA பட்டம், B.Sc சிவில், இலத்திரனியல் மற்றும் எலக்ரோனிக் என்ஜினியரிங், materials என்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் போன்ற கற்கைநெறிகளை வழங்கவுள்ளது. இந்த கற்கைகளுக்கு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (இலங்கை/இலண்டன்) மூன்று பாடங்களில் சித்தி அல்லது SLIIT இனால் நடத்தப்படும் உளச்சார்பு தேர்வில் சித்தியடைந்தோர் தகுயுடைவர்களாக கருதப்படுவர்.
SLIIT இன் நீண்டநாள் கல்விப் பங்காளரான அவுஸ்திரேலியாவின் கர்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மென்பொருள் பொறியியலில் B.Sc. பட்டம், BEng in Mechanical Engineering, சிவில் மற்றும் கட்டுமான பொறியியல், Electrical and Power Engineering, கணினி முறைமை பொறியியல், தகவல் தொழில்நுட்பத்தில் B.Sc. பட்டம், கணினி முறைமைகள் போன்ற பட்டதாரி நெறிகளை வழங்குவதுடன், இரண்டாவது ஆண்டினை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்கள்(டிப்ளோமா நிலை) தமது மிகுதி கற்கையை கர்டன் பல்கலைக்கழகத்தில் தொடர்வதற்கான வாய்ப்பை பெறுவர்.
SLIIT நிலையத்தின் பேராசிரியர் கமகே கருத்து வெளியிடுகையில், 'பிராந்தியத்தின் சிறந்த 10 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக எமது கல்வியகத்தை நிலைப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்கால திட்டமாகும். அடுத்துவரும் எட்டு ஆண்டுகளுள் மாணவர் தொகையினை 12,000 ஆக உயர்த்தும் வகையில் எமது கல்வி திட்டங்களை விஸ்தரிக்க எண்ணியுள்ளோம். தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து மேலும் மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்கும் நிகழ்வில் SLIIT நிலையத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் PhD பட்டம் பெற்ற விரிவுரையாளர்கள் பலர் எம்முடன் பணியாற்றுவதனால், அடுத்த தலைமுறையினருக்கு அறிவாற்றல் நிறைந்த கற்கையினை வழங்க முடிந்துள்ளது என குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்' என்றார்.
