
ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரெல் கோப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான சி.எப்.எல் மீள்சுழற்சி கட்டமைப்புக்கு சர்வதேச ஐ.எஸ்.ஓ (ISO) தரச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆசியாவின் முதலாவது சி.எப்.எல் (CFL) மின்குமிழ் மீள்சுழற்சி கட்டமைப்பு இதுவாகும். சி.எப்.எல் மின்குமிழ்களில் அடங்கியுள்ள பாதரசம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படாவிடின் அதன்மூலம் சூழலுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனடிப்படையில் ஒரெல் கோப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஏஷியா ரீசைக்கிளிங் ஊடாகவே இம்மீள்சுழற்சி கட்டமைப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் வருடத்துக்கு 30 மில்லியன் மின்குமிழ்களை மீள்சுழற்சி செய்யக் கூடிய வசதிகளை கொண்டுள்ளது.
'சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் எமது நிறுவனம் சுவீடனைச் சேர்ந்த நோர்டிக் ரீசைக்கிளிங் ஏ.பி நிறுவனத்துடன் இணைந்து கொண்டது. இத்திட்டத்திற்காக ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. வருடந்தோறும் எமது நிறுவனத்தால் 30 மில்லியன் மின்குமிழ்களை மீள்சுழற்சி செய்ய முடியும். இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள சி.எப்.எல் மின்குமிழ்களை விட இது மும்மடங்காகும். பாவனை செய்யப்படும் மின்குமிழ்களில் 10 வீதமானவையே மீள்சுழற்சிக்கு வருகின்றன. எனவே வலயத்தில் ஏற்பட்டுள்ள பாதரச பிரச்சினையிலிருந்து மீள் எழுவதற்கு நாம் உதவத் தயார்' என ஒரெல் கோப்பரேஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு தெரிவித்தார்.
சர்வதேச தரச் சான்று நிறுவனத்தை சேர்ந்த டீ.என்.ஏ நிறுவனமே சி.எப்.எல் மீள்சுழற்சி கட்டமைப்புக்கான ஐ.எஸ்.ஒ (ISO) 9001 மற்றும் ஐ.எஸ்.ஓ (ISO) 14001 ஆகிய சான்றுகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.என்.வி (DNV) வர்த்தக தர தான்று நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதானி கே.வெற்றிச்செல்வம் கருத்து தெரிவிக்கையில் 'சி.எப்.எல் மீள்சுழற்சி நிறுவனமொன்றின் தரம் தொடர்பாக சான்று வழங்க எமக்கு கிடைத்தமை புதிய அனுபவமாகும். இதற்காக உலகின் முன்னிலை நாடுகள் பல பின்பற்றும் சர்வதேச தரத்தை அறிந்து அதற்கமையவே இதனை ஆராய்ந்தோம். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த சுற்றாடலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்' என தெரிவித்தார்.
மீள்சுழற்சி கட்டமைப்புக்கு கிடைக்கும் உயரிய இரண்டு தரங்கள் கிடைத்துள்ளதாகவும் தமது நிறுவனம் சுற்றாடலை பாதுகாக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பாரிய வகையில் உள்ளதாகவும், சுற்றாடலே தமது பாவனையாளர் என்பதால் அதனை பாதுகாக்க வேண்டியது தமது கடமை என ஒரெல் கோப்பரேஷன் நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் இந்திக்க வீரரத்ன தெரிவித்தார்.