
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றும் அதன் பெருந்தோட்ட நிறுவனமான வட்டவளை ப்ளான்டேஷனுக்கு இலங்கை பட்டயக் கணக்கறிஞர் கழகம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த நிதி அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
ஐந்து நிறுவனங்களையோ அல்லது அதற்கு குறைவாகவோ கொண்ட நிறுவனப் பிரிவின் கீழ் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெண்கல விருதை வென்றெடுத்ததுடன் வட்டவளை ப்ளான்டேஷனுக்கு சொந்தமான பெருந்தோட்ட துறையில் தங்க விருதை தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக வென்றெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
'வருடாந்த அறிக்கையை தயாரிக்கும்போது எமது நிறுவனம் வெளிப்படுத்திய ஒழுக்கம் மற்றும் நம்பகத்தன்மை காரணமாகவே இந்த விருது கிடைத்தது. அத்துடன் வருடாந்த அறிக்கையை தயாரிக்கும்போது நிறுவனம் பின்பற்றும் தரங்கள் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை கொண்டு அமைந்துள்ளமையே இந்த வெற்றிக்கான இன்னொரு காரணம்'என சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிதி அதிகாரி லலித் வித்தானகே தெரிவித்தார்.
நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள், சமூக செயற்றிட்டங்கள், நலன்புரி திட்டங்கள் போன்றனவும் வரி செலுத்தும்போது நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் இந்த விருதின்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த வட்டவளை நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி லலித் குரே, கடந்த ஆறு வருடங்களாக நிறுவனத்தின் நிதி அறிக்கையை சிறந்த மட்டத்தில் பேண பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அதற்கமையவே கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக விருதை வென்றெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.