2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
டிசெம்பர் மாதத்தின் இறுதி வார கொடுக்கல் - வாங்கல்களை கொழும்பு பங்குச்சந்தை உயர்ந்த பெறுமதியில் நிறைவு செய்திருந்தது. விடுமுறை காலம் என்பதால், சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதி ஒருநாளில் பெரும்பாலும் 3 மில்லியன் ரூபாவைக் கூட எட்டாத நிலையில், வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,876.66 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3240.63 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
டிசெம்பர் 23ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 1,962,115,721 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 11,031 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் - வாங்கல்கள் 10,468 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் - வாங்கல்கள் 563 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
திங்கட்கிழமை
சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் மறை பெறுமதியில் ஆரம்பமாகியிருந்தன. சிலோன் டொபாக்கோ கம்பனி, கார்சன்ஸ் கம்பர்பட்ச் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் விலைகளில் சரிவு ஏற்பட்டிருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதியும் வீழ்ச்சியடைந்து 300 மில்லியன் ரூபா பெறுமதி கூட எய்தியிருக்கவில்லை. கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது வெளிநாட்டவர் ஈடுபாடு அதிகளவு காணப்பட்டது. ஹேலீஸ், ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீதான மொத்த விற்பனை மொத்தப்புரள்வு பெறுமதியில் பங்களிப்பை வழங்கியிருந்தது. மேலும், அஸ்கொட் ஹோல்டிங்ஸ் மற்றும் ப்ளு டயமன்ட்ஸ் பங்குகள் மீது ஓரளவு ஈடுபாடு காணப்பட்டது.
 
செவ்வாய்க்கிழமை
நத்தார் தினத்துக்கு முதல் நாள் கொடுக்கல் வாங்கல்கள் கலப்பு பெறுமதியில் நிறைவடைந்ததை அவதானிக்க முடிந்தது. பரந்தளவில் இழப்புகளை அவதானிக்க முடிந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி விடுமுறை தினங்களை முன்னிட்டு, 300 மில்லியன் ரூபாவை கூட எய்தியிருக்கவில்லை. கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது வெளிநாட்டவர்களின் நாட்டம் அவதானிக்கப்பட்டது. அபான்ஸ் ஃபினான்ஸ் மற்றும் ப்ளு டயமன்ட் பங்குகள் மீதும் நாட்டம் அதிகளவில் காணப்பட்டது. திறைசேரி முறிகளின் விகிதம் 15-35 அடிப்படை புள்ளிகளால் அனைத்து முதிர்வுகளிலும் பதிவாகியிருந்தது.
 
வியாழக்கிழமை
கொழும்பு பங்குச்சந்தையில் விடுமுறை சூழல் அவதானிக்க முடிந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி ஆண்டின் மிகக்குறைந்த பெறுமதியை பதிவு செய்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி 50 மில்லியன் ரூபாவிலேயே பதிவாகியிருந்தது. ஆயினும், கொமர்ஷல் வங்கி பங்குகளின் மொத்த கைமாறல்கள் காரணமாக, இந்த பெறுமதி 100 மில்லியனை விட அதிகரித்திருந்தது. ஆயினும், சிலோன் டொபாக்கோ பங்குகள் மீது உயர்ந்த விலைகள் பதிவாகியிருந்தமையால் சுட்டிகள் கலப்பு பெறுமதியை பதிவு செய்திருந்தன.
 
வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் மறை பெறுமதியை பதிவு செய்திருந்த போதிலும், இன்றைய தின கொடுக்கல் வாங்கல்கள் 1 பில்லியன் ரூபா எனும் பெறுமதியை எய்தியிருந்தது. இதில் குறிப்பாக சிலோன் டீ சேர்விசஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் பங்களிப்பை வழங்கியிருந்தன. இரு பிரதான சுட்டிகளும் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் பங்குகளும் உயர்ந்த பெறுமதியை பதிவாகியிருந்தன. 
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ப்ளு டயமன்ட்ஸ்(சாதாரண), செரன்டிப் என்ஜி.குரூப், ரேடியன்ட் ஜெம்ஸ், சிலோன் பிரின்டர்ஸ் மற்றும் மேர்க் சிப்பிங் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
லங்கா சென்ச்சரி (உரிமை), எஸ்எம்பி லீசிங்(சாதாரண), டெஸ் அக்ரோ(சாதாரண), சிஐரி. மற்றும் டெஸ் அக்ரோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,750 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,250 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.45 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 218.33 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .