
முதன்முதலாக இடம்பெற்ற 'மக்கள் அபிவிருத்தி விருதுகள்' (Peoples Development Awards) வழங்கல் நிகழ்வில் செலான் வங்கி வெள்ளி விருதை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தினால் (SLITAD) நடாத்தப்பட்ட இவ்விருது வழங்கல் நிகழ்வு, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த விருதுக்காக போட்டியிட்ட நிறுவனங்கள் மைய தொழில்துறைசார் உபாயங்களின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டன. அதாவது - வணிகம், கற்றுக் கொள்தலும் அபிவிருத்தி செய்தலும், மனிதவள முகாமைத்துவம், தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவம், முகாமைத்துவத்தின் செயற்றிறன், அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள், ஈடுபாடு மற்றும் வலுவூட்டல், செயலாற்றல் அளவீடு மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல் போன்றவை கருத்திற் கொள்ளப்பட்டன.
மிகச் சிறந்த செயன்முறைகளை கையாள்கின்ற நிறுவனங்களுக்கு அங்கீகாரமளித்து. வெகுமதி வழங்குவதற்காகவும் மனிதவள அபிவிருத்தியில் முன்முயற்சிகளை மேற்கொண்ட மற்றும் சாதனைகளை நிகழ்த்திய நபர்களுக்கு அங்கீகாரமளிக்கும் முகமாகவும் இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகம் (SLITAD) ஆனது இவ்வாறான உயர் விருது வழங்கல் நிகழ்வு ஒன்றில் களமிறங்கியது இதுவே முதற் தடவையாகும். அதன் பிரகாரம், தனது வணிக ரீதியிலான வெற்றியில் மனிதவள அபிவிருத்தி என்பது முன்னுரிமை அளிக்கப்படும் மூலோபாயமாக இருப்பதை உறுதி செய்வதற்காக செலான் வங்கி மேற்கொண்ட கடின உழைப்புக்காகவே மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது.
'வர்த்தக குறியீடு மற்றும் வங்கி பற்றிய தோற்றப்பாடு ஆகியவற்றை கட்டியெழுப்புதல் போலவே மனிதவள அபிவிருத்தி என்பதும் மிக முக்கியமானதொரு விடயமாக காணப்படுகின்றது. துரிதமாக முன்னேறி வருகின்ற இன்றைய கூட்டாண்மை வர்த்தக உலகத்திலே இணையத்தளம் மற்றும் தன்னியக்க முறைமை என்பன முக்கியமானதும் முன்கொண்டு செல்லக்கூடியதுமான பங்கினை வகிக்கின்ற போதிலும், மனித காரணி என்பது எமது சேவை விநியோகத்தில் தொடர்ந்தும் முக்கிய அம்சமாக இடம்பிடித்திருக்கின்றது. எனவேதான் செலான் வங்கியைச் சேர்ந்தவர்களான நாம் எமது ஊழியர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகின்றோம். அதேபோன்று எமது தூரநோக்கை அடைந்து கொள்வதில் அவர்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். இந்த விருதானது எம் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக எமது மனிதவள பிரிவு அணியினருக்கு மிகவுன்னத உத்வேகத்தை அளிக்கின்ற அதேநேரம், மேலும் சிறந்த உயரங்களை நாம் தொடுவதற்கு எமக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைகின்றது என்று செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கபில அரியரத்ன தெரிவித்தார்.