2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஜோன் கீல்ஸ் பங்குகளின் பங்களிப்புடன் பங்குச்சந்தை உயர்வு

A.P.Mathan   / 2014 ஜூன் 25 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக நான்கு தினங்கள் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்த கொழும்பு பங்குச்சந்தை, நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்களின் போது, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான அதிகளவு ஈடுபாட்டின் காரணமாக உயர்வான பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. சந்தையின் புரள்வு பெறுமதி 800 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவன சார் ஈடுபாடுகள் ஹற்றன் நஷனல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்மி பிரின்டிங் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தன. மேலும், சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பீசி ஹவுஸ் மற்றும் பீசி பார்மா ஆகிய பங்குகள் மீது அதிகளவில் காணப்பட்டது. எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர், இது மொத்தப்புரள்வு பெறுமதியில் 48 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது.
 
பன்முகத்துறை என்பது சந்தைப் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.59 வீத உயர்வை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 1.60 ரூபாவால் (0.73%) அதிகரித்து 221.60 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 874,545 பங்குகளால் குறைந்திருந்தது.
 
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித்துறை என்பது சந்தைப்புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஹற்றன் நஷனல் வங்கி பங்குகளின் பங்களிப்புடன்) துறையின் சுட்டெண் 0.20 வீத உயர்வை பதிவு செய்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி பங்கொன்றின் விலை 0.50 ரூபாவால் (0.32%) குறைந்து 155.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 245,000 பங்குகளால் அதிகரித்திருந்தது.
 
டிஸ்டிலரீஸ், அக்மி பிரின்டிங் மற்றும் பக்கேஜிங் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியனவும் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. டிஸ்டிலரீஸ் பங்கொன்றின் விலை 0.90 ரூபாவால் (0.44%) அதிகரித்து 206.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. அக்மி பிரின்டிங் அன்ட் பக்கேஜிங் பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் குறைந்து (1.14%) 17.40 ரூபாவாக பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனியின் பங்கொன்றின் விலை 0.30 ரூபாவால் (0.30%) குறைந்து 992.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
 
இதேவேளை, ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் தனது இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.20 ரூபா வீதம் அறிவித்திருந்தது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X