2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையில் மேற்கொண்ட வணிக தொழிற்பாடுகளை நொரிடேக் குழுமத்தின் தலைவர் பாராட்டு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நொரிடேக் குழுமத்தின் தலைவர் ரி.ஒகுரா, கடந்த நிதியாண்டில் இக் கம்பனி மேற்கொண்ட தொழிற்பாடுகளை பாராட்டிய அதேவேளை, அடுத்து வரும் வருடத்தில் உறுதிமிக்க மற்றும் மிகச் சிறந்த வளர்ச்சிப் பெறுபேறுகளை பெறுவதற்கான எதிர்வுகூறலையும் மேற்கொண்டார். 
 
கொழும்புக்கான இந்த குறுகியகால விஜயத்தின் போது ஒகுரா, மரியாதை நிமித்த அழைப்பொன்றை ஏற்று அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அலரி மாளிகையில் சந்தித்தார். இவருடன் இச்சந்திப்பின் போது டேபிள்டொப் பிரிவின் தலைமை அதிகாரியான திரு. மபுச்சி, நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் திரு. நிமால் பெரேரா, நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் வை. சிமாயா மற்றும் நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் பொது முகாமையாளர் திருமதி சுஜாதா எகொடகெதர ஆகியோரும் ஒன்றிணைந்திருந்தனர். 
 
இல. 77, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நொரிடேக் முதன்மை விற்பனை நிலையத்தின் முக்கியத்துவம் குறித்து இதன்போது ஒகுரா, ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு தெளிவுபடுத்தினார். 'இலங்கையில் நொரிடேக் கடந்த 42 வருடங்களாக செயற்பட்டு வருகின்றது. இந்த முதன்மை விற்பனை நிலையமானது எமது வர்த்தக குறியீட்டின் சர்வதேச அளவிலான பிரசன்னத்தை இலங்கையில் மேலும் பலப்படுத்துகின்ற அதேநேரத்தில், தென்னாசிய பிராந்தியத்தியத்தின் ஊடான எமது பயணத்தில் மிக இன்றியமையாத ஒரு காலடியாகவும் காணப்படுகின்றது. எமது பிராந்திய கேந்திர மையமாக இலங்கை திகழ்வதுடன், எமது உற்பத்திகளின் கலப்பற்ற சிறப்புத்துவத்தை இப்பிராந்தியத்திற்கு கொண்டு வருகின்றது' என்று அவர் தெரிவித்தார். 
 
தர்மபால மாவத்தை மற்றும் சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஆகியவை சந்திக்கும் இடத்தில் (அதாவது பித்தள சந்தியில்) 10,000 சதுர அடி பரப்பளவில் உபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்த முதன்மை விற்பனை நிலையம், மூன்று மாடிகளை கொண்டிருக்கின்ற அதேவேளை அவ்விடத்திலிருந்து அதனை தெளிவாக பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றது. இலங்கையானது நொரிடேக்கின் உயர்வகுப்பு சந்தையுடனும் அதேபோன்று டோக்கியோ, நகோயா, ஹொங்கொங் மற்றும் நியூஜெர்சி போன்ற நகரங்களில் அமைந்திருக்கும் இதுபோன்ற மதிப்புமிக்க ஏனைய சர்வதேச சங்கிலித்தொடர் காட்சியறைகளுடனும் இப்போது இணைந்து கொள்கின்றது. 
 
நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) தனக்குத் தேவையான 35% உள்ளீடுகளை தற்போது இலங்கையிலிருந்தே பெற்றுக் கொள்கின்றது. இந்நிறுவனத்தின் மாத்தளையில் அமைந்திருக்கும் தொழிற்சாலை உலகிலேயே மிகப் பெரிய உற்பத்தியாக்கல் வசதிகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. இத் தொழிற்சாலை நொரிடேக் வர்த்தக குறியீட்டின் கீழ் உயர்தரமான மேசைப் பாத்திரங்களை உற்பத்தி செய்கின்றது. 
 
உள்நாட்டில் பெற்றுக் கொள்ளப்படும் உள்ளீடுகளுள் - கண்டிக்கு அப்பாலுள்ள கலஹா பிரதேசத்திலிருந்து பெறப்படும் படிகக்கல், ரத்தோட்டைக்கு அருகிலுள்ள ஓவல பிரதேசத்தில் இருந்து பெறப்படும் 'பெல்ட்ஸ்பார்' மற்றும் கண்டிக்கு அருகிலுள்ள திகன பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெறும் 'கல்சைட்' போன்றவை உள்ளடங்குகின்றன. 
 
நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) தனது 80% உற்பத்திகளை தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் உள்ள முக்கியமான சந்தைகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இவற்றுள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, மெக்ஸிகோ மற்றும் கொரியா போன்றவற்றின் சந்தைகளும் உள்ளடங்கும். மீதமுள்ள 20% உற்பத்திகளும் கிருலப்பனை, வத்தளை, மாத்தளை, பன்னல மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களிலுள்ள காட்சியறைகள் ஊடாக உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படுகின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X