
ஃபொன்டெரா நிறுவனத்தின் அங்கர் பால்மா வகை தொகுதி சிலவற்றின் விற்பனை, சுகாதார அமைச்சின் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த விற்பனை தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,
குறித்த தொகுதி இலக்கத்தை கொண்ட பால்மாவை பருகிய கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதி பால்மா வகைகள் மீது பரிசோதனைகள் மேற்கொள்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில், ஃபொன்டெரா நிறுவனம் தாம் குறித்த தொகுதி மாதிரிகளின் மீது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், அவற்றில் எவ்வித பாதகமான பிரச்சினைகள் இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
குறித்த தொகுதியை சேர்ந்த பால்மா வகை நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் தமக்கு வேறெந்த பகுதியிலிருந்தும் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என ஃபொன்டெரா அறிவித்துள்ளது.