2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அடுத்த தலைமுறை பனசொனிக் Toughbook மற்றும் Toughpad

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி.யின் கீழியங்கும் முதன்மையான துணை நிறுவனமாக திகழும் சொப்ட்லொஜிக் ரிடைல் (பிரைவேட்) லிமிட்டெட் ஆனது, பனசொனிக் இந்தியா நிறுவனத்துடன் ஒன்றிணைந்து உலகின் முதலாவது விண்டோஸ் 8 நிறுவன-தரமிக்க கடின வேலைக்கான கையடக்க சாதனங்களான பனசொனிக் toughbook Laptop மற்றும் Toughpad வகைகளை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. அதிக உள்ளார்ந்த ஆற்றல்கள் காணப்படும் இலங்கை சந்தையை மையப்படுத்தியதாக, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புத்தாக்கமிக்க தொழில்நுட்ப தீர்வுகளை விருத்தி செய்வதனுடன் மடிக்கணனி  துறையில் பிரித்து வகைப்படுத்தலையும் மேற்கொள்ளும் பொருட்டு இவ்விரு கம்பனிகளும் எடுத்து வருகின்ற ஒன்றிணைந்த, தொடர்ச்சியான முன்முயற்சிகளை பின்தொடர்வதாக  இந்த அறிமுகம் அமைகின்றது. 

பனசொனிக் Toughpad FZ-G1 என்பது உலகின் முதலாவது விண்டோஸ் 8 நிறுவன-தரமிக்க கடின உழைப்பிற்குரிய டெப்லட் சாதனமாகும். கடின வேலைகள் புரியும் வெளிக்களப் பணியில் ஈடுபடுபவர்கள், இராணுவம், கட்டிட நிர்மாணம், சுகாதார பராமரிப்பு, பொதுப் பாதுகாப்பு, பயன்பாட்டு சேவைகள், சில்லறை வணிகம், பராமரிப்பு, விநியோக வழிமுறை உபகரண வழங்கல் மற்றும் காப்புறுதி போன்ற துறைகளைச் சேர்ந்த அதிகமாக நடமாடித்திரியும் ஊழியர்களை இலக்காகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. வழக்கமான டெப்லட் வகைகள் தொழிற்பட மறுக்கும் - நீர்த்துழி விழுதல் மற்றும் அளவுக்கதிமான வெப்பத்தில் வைக்கப்படுதல் போன்ற நிலைமைகளின் போதும் Toughpad FZ-G1 தொடர்தேர்ச்சியாக இயங்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. உண்மையிலேயே நீடித்த பாவனை மற்றும் பாதுகாப்பை கொண்ட இந்த தீர்வுகள் நடமாடும் பணியாளர்களுக்கு மிகப் பொருத்தமானது. மிகவும் பாதுகாப்பளிக்கப்பட்ட தரவு மற்றும் உபகரண முகாமைத்துவ வசதி ஆகிய சிறப்பம்சங்களை இது ஒருங்கே கொண்டிருக்கின்ற அதேவேளை, தங்குதடையற்ற தொடர்பிணைப்பையும் நிறுவன-தரமிக்க தொழில்நுட்பத்தையும் வழங்குகின்றது. 

'டெப்லட்கள் மற்றும் கையடக்க கணிப்பொறி சாதனங்கள் என்பன உலகளாவிய ரீதியில் நிறுவனம்சார் இயக்கப்பாட்டை முன்கொண்டு செல்லும் முக்கியமான கருவிகளாக இருக்கப் போகின்றன. எந்தவொரு இடத்தில் இருந்தவாறும் எந்நேரத்திலும் சேவைகளை அணுகக்கூடிய வசதி இப் புதிய சாதனங்களில் இருந்து கிடைக்கப் பெறுவதன் பிரதிபலனாக, செயற்றிறன் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் திறன் ஆகிய அனுகூலங்கள் தமக்கு கிடைக்குமென்று வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்க முடியும். நம்பகத்தன்மை மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் தன்மை ஆகியவை தொடர்பிலான எமது பொறியியல்சார் நற்பெயரின் துணையோடு, பனசொனிக் ஆனது சந்தையில் அதிகரித்துச் செல்லும் மேற்படி வர்த்தக தேவையை நிவர்த்தி செய்வதற்காக தன்னை சிறப்பான முறையில் நிலைநிறுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டில் கடினமான பணிக்குரிய லெப்லட் வகைகளின் துறையில் 50 வீத சந்தைப் பங்கினை அடைந்து கொள்வதை எமது நோக்காக கொண்டுள்ளோம்' என்று பனசொனிக் இந்தியா நிறுவனத்தின் பொது முகாமையாளரும் தேசிய வணிக தலைமை அதிகாரியுமான திரு. குன்ஜன் சச்டேவ் தெரிவித்தார். 

சொப்ட்லொஜிக் ஒபிஸ் ஒட்டோமேசன் பணிப்பாளரான திரு. சமிந்த டீ சில்வா புதிய உற்பத்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 'உயர் தரமிக்க கடுமையான தொழிற்பாடு, தொடர்பிணைப்பு, நீடித்த பற்றரி பாவனை மற்றும் முன்னேற்றகரமான தொழில்நுட்பம் போன்ற சிறப்பம்சங்களை இச் சாதனங்கள் தன்னகத்தே கொண்டுள்ளமையால் கடினமான வாழ்க்கைச் சூழலில் இயங்குகின்ற அனைத்து வர்த்தக தொழில் வாண்மையாளர்களுக்கும் மிகப் பொருத்தமான உடனுழைக்கும் சாதனங்களாக இவை காணப்படும். எமது உற்பத்திகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை வழங்குவதில் நீடித்து நிலைத்திருக்கும் அர்ப்பணிப்பை நாம் கொண்டுள்ள நிலையில், உற்பத்தி வகைகள் தோறும் புதிதாக ஒப்பீட்டுக்குறியிடலை (Benchmark) நாம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில், இத்துறை முழுவதிலும் உள்ள தமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை பனசொனிக் தொடர்ந்தும் நிவர்த்தி செய்யும்' என்றார்.

தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கான வலய விற்பனைகள் முகாமையாளர் திரு. புல்கிற் நந்தா கூறுகையில், 'எமது கடினமான பணிக்குரிய கணிப்பொறிசார் தீர்வுகள் இந்திய வணிக சூழலில் வெற்றியை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், நடமாடும் ஆளணியினரின் செயற்றிறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட உற்பத்திகளை சாதக தன்மைகள் நிறைந்த இலங்கை போன்ற சந்தைகளுக்கும் கொண்டு வருவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்' என்று தெரிவித்தார். 

பனசொனிக் கோப்பரேஷன் ஆனது – வீடுகளிலுள்ள, வீடுகளுக்கு வெளியிலுள்ள மற்றும் நடமாடித்திரியும் வாடிக்கையாளர்களுக்காக இலத்திரனியல் தொழில்நுட்பங்கள் மற்றும்  தீர்வுகளையும் அதேபோல் தனிப்பட்ட பிரயோக மென்பொருட்களையும் அபிவிருத்தி செய்தல் மற்றும் பொறியியல் ரீதியில் உருவாக்குவதில் உலகளவில் முன்னணி வகிக்கும் ஒரு நிறுவனமாக திகழ்கின்றது. 1918ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு இக் கம்பனி சர்வதேச அளவில் தனது வர்த்தகத்தை விஸ்தரித்துள்ளது. தற்போது உலகெங்கும் 500 இற்கும் மேற்பட்ட கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளை செயற்படுத்தி வருகின்றது. அதன்படி 2014 மார்ச் 31ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டில் 7.74 திரில்லியன் யென் ஒன்றுதிரண்ட விற்பனை வருமானத்தை பதிவுசெய்துள்ளது. உற்பத்தி பிரிவுகள் வாரியாக புத்தாக்கங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய பெறுமதியை கடைப்பிடிப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் இக் கம்பனியானது, தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையையும் சிறந்ததொரு உலகத்தையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றது. பனசொனிக் தொடர்பாக மேலும் தகவல்களை பெற்றுக் கொள்ள தயவுசெய்து கம்பனியின் http://panasonic.net/ என்ற இணையத்தளத்தை பார்வையிடுங்கள். 

சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இற்கு முழுவதும் சொந்தமான ஒரு துணை நிறுவனமான சொப்ட்லொஜிக் ஒபிஸ் ஒட்டோமேசன் ஆனது – குறிப்பாக பனசொனிக், Xerox மற்றும் NEC உள்ளடங்கலாக பல்வேறு வர்த்தக குறியீடுகளிலான உற்பத்திகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக உள்ளது. இன்றைய கூட்டாண்மை நிறுவனங்களுக்காக தொலைநகல், புகைப்பட பிரதி இயந்திரங்கள், PBX, கம்பியற்ற தொலைபேசிகள், வாயு சீராக்கிகள், CCTV மற்றும் பல்லூடக படக் காட்சிப்படுத்தும் கருவி (Projector) உள்ளடங்கலாக பரந்துபட்ட வகைககளிலான அலுவலக உற்பத்திகள் பலவற்றை வழங்கும் பிரபலமான அலுவலக தன்னியக்கமாக்கல் தீர்வுகள் வழங்குனராக  இக்கம்பனி திகழ்கின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X