Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெனராகலை மாவட்டத்தில் உள்ளூர் பொருளாதார அபிவிருத்திக்காக வினைத்திறன் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் (UNDP) ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்த்துள்ளது. 2015 ஜுன் மாதம் ஆரம்பமாகியிருந்த இச்செயற்றிட்டம், அரிசி ஆலை ஒன்றை மெருகேற்றம் செய்வது மற்றும் மொத்த வியாபாரச் சந்தை ஒன்றை நிர்மாணிப்பது மற்றும் சிறு பொருளாதார நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி (EU-SDDP) மூலமாக இந்த இடையீட்டுப்பிரிவுக்கான நிதி உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்காக 60 மில்லியன் யூரோக்கள் (8.8 பில்லியன் ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களின் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் அமைந்துள்ளது.
வறுமையால் பாதிக்கப்பட்ட மொனராகலை மாவட்டத்தின் 450,000 குடும்பங்களின் பிரதான வருமானமீட்டும் மூலமாக விவசாயம் அமைந்துள்ளது. தற்போது, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பிரதான மற்றும் இரண்டாம் நிலை உற்பத்தியாளர்கள் உட்கட்டமைப்பு மற்றும் உதவிச் சேவைகள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை இவை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், பேரம் பேசும் ஆற்றல் மற்றும் வருமானமீட்டும் திறன் ஆகியவற்றையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. குறைந்த வாய்ப்புகள், குறைந்த கேள்வி மற்றும் இடைத்தரகர்களின் தீவினைக்கஞ்சாத அணுகுமுறைகள் போன்றவற்றினால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் பொருளாதார மேம்பாடுகளுக்கு எவ்வித வாய்ப்புகளுமின்றிக் காணப்படுகின்றனர்.
EU-SDDP நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உட்கட்டமைப்பு அலகுகளை பெற்றுக் கொடுப்பது குறித்து UNDP கவனம் செலுத்துகிறது. உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அவர்களுக்கு ஈடுபாட்டை வழங்கக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன. மேலும், உற்பத்தியாளர் குழுக்களுக்கான தொழில்முயற்சியாளர் ஆளுமைகள் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களை நிலையாக பேணுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன.
இந்த செயற்றிட்டம் தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி லிபுஸி சௌகுபோவா கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையின் பொருளாதாரம் விவசாயத்தில் பெருமளவு தங்கியுள்ளது. ஆனாலும், அறுவடைக்கு பின்னரான இழப்பு மற்றும் உற்பத்திக்கான உயர் செலவீனம் ஆகியன காரணமாக விவசாய உற்பத்திகளுக்கு சந்தையில் அதிகளவு விலைகளை தோற்றுவிக்கின்றன. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்முயற்சியாண்மைக்கான பயிற்சிகள் போன்றவற்றின் மூலமாக விவசாயிகளின் சந்தைப்படுத்தும் திறனை மேம்படுத்தி, அவர்களின் வருமானத்தை மேம்படுத்திக் கொள்ள உதவிகளை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்' என்றார்.
ஊவா வெல்லஸ்ஸ அரிசி ஆலையை மெருகேற்றம் செய்வதற்கு இந்த செயற்றிட்டத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, நவீன அரிசி ஆலை ஸ்தாபிப்பு, பெறுமதி சேர்க்கப்பட்ட சாதனங்களின் விநியோகம் மற்றும் மின்சார விநியோகம் போன்றன ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதன் மூலமாக நாளொன்றுக்கு 10,000 கிலோகிராம் நெல் பதப்படுத்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நெல் களஞ்சியப்படுத்தல் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக, விவசாயிகளிடமிருந்து போட்டிகரமான உயர் விலையில் நெல்லை கொள்வனவு செய்து, நீண்ட காலப்பகுதிக்கு களஞ்சியப்படுத்தி வைத்திருக்க உதவியாக அமையும். இதன் மூலம் ஆலையை வருடம் முழுவதும் கையிருப்பிலுள்ள நெல்லைப் பயன்படுத்தி சுயாதீனமாக இயங்கச் செய்யக்கூடியதாக இருக்கும். அத்துடன், கடுக்கார பல-நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக திறனை கட்டியெழுப்புவதற்கான மேலதிக உதவிகளும் வழங்கப்படவுள்ளது. இந்த அரிசி ஆலையின் செயற்பாடுகளுக்கு இந்த சங்கம் பொறுப்பாக இயங்கும். மொத்தமாக 7.8 மில்லியன் ரூபாய் இந்த செயற்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தினூடாக 10,000 நெல் விவசாயிகளுக்கும் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கப்படும்.
நெல் களஞ்சியப்படுத்தும் களஞ்சியசாலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் மாவட்ட செயலாளர் திருமதி. டி.எஸ். பத்மகுலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த பிரதேசத்தின் விவசாயத்துறையை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செயற்பாடுகள் மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளன. இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதன் மூலமாக, விவசாயிகளுக்கு பெருமளவு அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்' என்றார்.
மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள மொத்த வியாபார சந்தையில் ஏல விற்பனை நிலையமொன்றும் அமையப்பெறும். அத்துடன் பிரத்தியேக கடைகளை அமைப்பதற்கான இடவசதிகளும் ஏற்படுத்தப்படும். கழிவறைவசதிகள், மின்சாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை இந்த சந்தை கொண்டிருக்கும். மரக்கறிகள் 'கைமாறும் மையம்' (Exchange Hub) ஆக இந்த பகுதி இயங்கும். நாடு முழுவதையும் சேர்ந்த விவசாயப் பொருட்கள் உற்பத்தி பிராந்தியங்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் பகுதியாக அமைந்திருக்கும். 14.7 மில்லியன் ரூபாய் செலவில் இந்த தொகுதி நிர்மாணிக்கப்படும், இதன் மூலமாக 800 வியாபாரிகள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் மக்கள் பயன்பெறுவார்கள்.
மடுல்லயில் மினி பொருளாதார நிலையமொன்றை நிறுவுவதன் மூலமாக, முல்லேகம, கல்கழுவ மற்றும் நெல்லியத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாய உற்பத்தியாளர்களுக்கு போதியளவு களஞ்சிய வசதி, விற்பனை, ஏல விற்பனை மற்றும் பொருட்கள் பதப்படுத்தல் வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். மொனராகலை மொத்த சந்தையுடன் தொடர்பை ஏற்படுத்துவதுடன் மினி பொருளாதார நிலையம் 200 வியாபாரிகளுக்கு மடுல்ல பிரதேசவாசிகளுக்கும் மொனராகலை பிரதேசவாசிகளுக்கு அனுகூலம் வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த செயற்திட்டம் தொடர்பில் UNDP இன் நாட்டுக்கான உதவி வதிவிடப் பணிப்பாளர் ராஜேந்திரகுமார கணேசராஜா கருத்துத் தெரிவிக்கையில், 'மொனராகலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு UNDP உதவி வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக எல்லைக்கிராமங்களுக்கு EU-SDDP திட்டத்தினூடாக விசேட கவனம் செலுத்தப்படுகிறது. மாவட்ட செயலகத்துடன் UNDP இணைந்து இந்த மாவட்டத்தின் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது' என்றார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago