
கல்கிசை புனித அந்தோனியார் பாடசாலை, தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தெஹிவளை மெதடிஸ்ட் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயில்கின்ற வசதி குறைந்த 100 சிறுவர்களின் வாழ்நாளில் அது ஒரு விஷேடமான பொழுதாக அமைந்தது. அவர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்காத விதத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தனது மனைவி ஹேசானி மற்றும் பௌசுல் ஹமீட் ஆகியோருடன் இணைந்து அவர்களது பாடசாலைக்கு விஜயம் செய்ததுடன் பாடசாலைப் பைகள், சப்பாத்துக்கள், தண்ணீர் போத்தல்கள், உணவுப் பெட்டகங்கள், காகிதாதிகள் மற்றும் எதிர்வரும் கல்வியாண்டுக்கு அவசியமான அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றையும் அவர்களுக்கு வழங்கி வைத்தனர். அஞ்சலோ மெத்தியூஸ் மன்றத்தினால் இந்த அன்பளிப்புக்கள் யாவும் வழங்கப்பட்டன.
'கடந்த சில கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் நான் பெரும்பாலும் வீட்டிலிருந்து தொலைவிலேயே இருந்தேன். எனவேதான், இந்தப் பண்டிகைக் காலத்தில் அர்த்தமுள்ள ஏதாவது காரியத்தை செய்வதற்கு விரும்பினேன். இந்தச் சிறுவர்களின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட சந்தோசமிருக்கின்றதே, அது அளவிட முடியாதது. அதனை நான் மிக நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக் கொள்வேன்' என்று My Friend Project இன் நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் திகழ்கின்ற அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.
தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரான திரு. எஸ் முரளி, தன்னுடைய பாடசாலைக்கு வருகை தந்தமைக்காக அஞ்சலோவுக்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'அவரைப் போல சர்வதேச புகழ்வாய்ந்த பண்பாற்றல்மிக்க ஒரு விளையாட்டு வீரர் எமது சிறுவர்களுடன் இரண்டறக் கலந்துரையாடியமை எமக்கு கிடைத்த ஒரு கௌரவமாகும்' என்று குறிப்பிட்டார்.
தெஹிவளை மெதடிஸ்த கல்லூரியின் அதிபர் திருமதி. ஹிமாலி பிரதீபா கூறுகையில், 'எமது பாடசாலையில் அதிகளவான அனாதைச் சிறார்கள் இருக்கின்றனர். இந்த பண்டிகைக் காலத்தில் இவ்வாறான ஒரு செயற்றிட்டத்தை முன்னெடுத்தமைக்காக அஞ்சலோ மற்றும் பௌசுல் ஹமீட் ஆகியோருக்கு நாம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்' என்றார்.
புனித அந்தோனியார் பாடசாலையின் அதிபரான திரு. டி. ஜயரத்ன கருத்துத் கூறுகையில், 'அன்பளிப்புக்கள் வழங்குவதற்கான ஒரு பருவகாலமாக கிறிஸ்மஸ் திகழ்கின்ற நிலையில், பாராட்டத்தக்க இந்த முன்னெடுப்பானது, எமது பாடசாலையிலுள்ள வசதி குறைந்த பல சிறுவர்களை மிகவும் மகிழ்ச்சியடைபவர்களாக மாற்றியுள்ளது' என்றார்.
ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் My Friend Project இன் தலைவருமான பௌசுல் ஹமீட் கூறுகையில், 'எம்மைச் சூழவுள்ள சின்னஞ் சிறார்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றை கொண்டு வரும் எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எம்மைச் சுற்றி அளவுகடந்த நுகர்வும் வீண் விரயமும் அதிகளவுக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். அவற்றில் இருந்து குறைந்தபட்சம் ஒரு சிறு வீதாசாரப் பங்கையாவது அதிர்ஷ்டம் குறைந்தவர்களின் நல்வாழ்வு நோக்கி திருப்பி விடுவதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம். இம் முயற்சி கிறிஸ்மஸ் பருவகாலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக ஆண்டின் ஒவ்வொரு நாளும் அப்பணியைச் செய்ய முயற்சிக்கின்றோம்' என்று தெரிவித்தார்.
இந்த சமூக சேவை செயற்றிட்டத்திற்கு பொதுமக்களும் தமது ஆதரவை வழங்குவதுடன், அதன் முக்கிய பங்களிப்பாளராகவும் மாற முடியும். நிதி அடிப்படையிலான அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் My Friend Project – கணக்கு இலக்கம் 1110031987, கொமர்ஷல் வங்கி, கொள்ளுப்பிட்டி கிளை என்ற கணக்கில் வைப்புச் செய்வதன் ஊடாக அதனை மேற்கொள்ளலாம். பொருள் வகையாக அன்பளிப்புக்களை வழங்க விரும்பும் நபர்களும் 0777 354 570 அல்லது 0773 177 556 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் ஊடாக அதனை மேற்கொள்ள முடியும். 2014ஆம் ஆண்டில் வசதி குறைந்த 1000 சிறுவர்களுக்கு ஒத்தாசைகளை வழங்குதல் எனும் My Friend Project இன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து கொள்வதற்கு, பணம் அல்லது பொருள் அடிப்படையிலான எந்தவொரு அன்பளிப்பும் உதவியாக அமையும்.