2026 மே 02, சனிக்கிழமை

"நாட்டில் நிலவும் உரப் பற்றாக்குறை பெருந்தோட்டத் துறையை பாதிக்கிறது"

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டில் தற்போது நிலவும் உரப் பற்றாக்குறை பெருந்தோட்டத்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் பெருந்தோட்டத்துறையை ஊக்குவித்து, பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பை கொண்டுள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், தற்போது நிலவும் உரப் பற்றாக்குறை தொடர்பில் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் உடனடியாக ஒன்றிணைந்து செயலாற்றி இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்துள்ளது.

இலங்கையின் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்கு (தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை) அரசாங்கத்தின் மூலம் உர மானியம் வழங்கப்படுகிறது. உரத்தை இறக்குமதி செய்து விநியோகிக்கும் செயற்பாடுகள் வௌ;வேறு நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தின் உரக் கொள்கைத் திட்டத்தின் மூலம் இறக்குமதியாளர்கள் தாம் இறக்குமதி செய்யும் உரத்தை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதுடன், பின்னர், அரசாங்கத்திடமிருந்து மானியத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கத்திடமிருந்து இவ்வாறு மானியத் தொகையை இறக்குமதியாளர்கள் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் காலதாமதமாக இடம்பெறுவதன் காரணமாக, இறக்குமதியாளர்களை நெருக்கடிக்குள் தள்ளும் விடயமாக அமைந்துள்ளது. அத்துடன், அதிகரித்துச் செல்லும் உர மானியத்தின் காரணமாக, உர இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தினால் வரையறைகள் இடப்பட்டுள்ளமை சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.

தேயிலை செய்கை பாதிப்பு

'பற்றாக்குறை மற்றும் உரிய காலப்பகுதியில் உரம் இடப்படாமை போன்றன விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதுடன், பச்சை இலையின் தரத்தையும் பாதிப்பதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரம் குறைவடைவதுடன், பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், விளைச்சல் இன்மை காரணமாக போதியளவு வேலை நாட்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது' என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

'வருடத்தின் முதலாவது காலாண்டில் பெருந்தோட்ட கம்பனிகளின் மூலமாக 20 – 23 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. உரப்பற்றாக்குறை காரணமாக, நாம் 6 – 7 மில்லியன் கிலோகிராம் வரையிலான தேயிலை உற்பத்தியை இழக்க நேரிடலாம். இதன் காரணமாக வருமான ரீதியில் 2.7 – 3 பில்லியன் ரூபா வரையிலான இழப்பு ஏற்படக்கூடும்' என அவர் மேலும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஹெக்டெயர்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் முகாமைத்துவம் செய்யப்படும் நிலையில், இந்த பற்றாக்குறை என்பது தேசிய ரீதியில் மொத்த தேயிலை உற்பத்தியில் 30 வீத பாதிப்பை ஏற்படுத்தும்.

ராஜதுரை மேலும் விளக்கமளிக்கையில், 'ஏப்ரல் மே மாத காலப்பகுதியில் பயிர்களுக்கு இடுவதற்கு உரம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த காலப்பகுதியில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், வருடத்தின் அதிகளவு விளைச்சலை வழங்கும் காலமாக இந்த காலப்பகுதி அமைந்துள்ளது. மேலும், புதிய செய்கைகளுக்கு குறித்த காலப்பகுதியில் உரம் இடப்படவேண்டிய தேவை காணப்படுகிறது. உரத்தில் குறைப்பு ஏற்படும் பட்சத்தில். இளம் தேயிலைச் செடிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் ஆரோக்கிய நிலை தொடர்பில் சிக்கல் நிலைகளை தோற்றுவிக்கக்கூடும்' என்றார்.

இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிஹான் டி லிவேரா கருத்து தெரிவிக்கையில், '2013 இல், உர விநியோகத்தில் தடங்கல் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, அவசியமான காலப்பகுதியில் தேவையான உரம் கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு இதே நிலையில் ஆரம்பித்துள்ளது. இந்த உரப்பற்றாக்குறை என்பது எமது சம்மேளனத்தின் அங்கத்தவர்களை அதிகளவு பாதித்துள்ளது' என்றார்.

இலங்கையில் சுமார் 400,000 பதிவு செய்யப்பட்ட தேயிலை சிறுதோட்ட பயிர்ச்செய்கையாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் சுமார் 2 மில்லியன் பேர் வரை தங்கியுள்ளனர். இந்த தேயிலை தோட்ட செய்கையாளர்கள், 2 ஏக்கருக்கும் குறைவாக காணிகளை தம்மிடையே கொண்டுள்ளனர். இவர்கள் தேசிய உற்பத்தியில் 70மூ பங்களிப்பை வழங்குகின்றனர்.

'இந்த நிலை விரைவில் தீர்க்கப்படாவிடின், தேயிலைத்துறை 2014 இல் பாதகமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்' என டி லிவேரா தெரிவித்தார்.

இலங்கை தேயிலை சிறுதோட்ட அபிவிருத்தி சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் நெவில் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'சந்தையில் நிலவும் உரப்பற்றாக்குறை என்பது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பாரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. அனைத்து அரச, அரச உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை சேர்ந்த சகல பங்காளர்களும் இணைந்து இந்த பிரச்சனைக்கான தீர்வு காண முன்வரவேண்டும். விசேடமாக 45 வீதமான உரம் அரசாங்க உற்பத்தி அமைப்புகளுக்கு செல்கின்றன' என்றார்.

இறப்பர் விளைச்சல் குறைவடையும்

'இந்த உரப் பற்றாக்குறை என்பது மிகப் பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது' என வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ பிரிவின் பேராசிரியர் அசோக நுகவெல தெரிவித்தார். 'இறப்பர் பெருந்தோட்டங்களை பொறுத்தமட்டில் காணப்படும் பிரதான பிரச்சனையாக, இறப்பர் ஆராய்ச்சி கல்வியகத்தின் உரப் பாவனை தொடர்பான பரிந்துரைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும், இதன் காரணமாக உற்பத்தி திறனில் வீழ்ச்சி ஏற்படாலம்' என அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டின் மொத்த இறப்பர் உற்பத்தியில் பெருந்தோட்ட கம்பனிகள் 40 வீத பங்களிப்பை வழங்குகின்றன.

இறப்பர் ஆராய்ச்சி கல்வியகத்தின் பரிந்துரைகள் என்பது சிறு இறப்பர் மரங்களுக்கு நான்கு தடைவ உரம் இடப்பட வேண்டும் என்பதாக அமைந்துள்ளது. (உதாரணமாக, வருடாந்தம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை). தற்போது நிலவும் தட்டுப்பாட்டின் காரணமாக, சில கம்பனிகள் மூன்று தடவைகள் மாத்திரமே உரம் இடும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றன.

'2013 இல் சில கம்பனிகளுக்கு தமது முதிர்ச்சியடைந்த இறப்பர் மரங்களுக்கு உரம் இட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததை நான் அறிவேன். இந்த நிலை 2014 இலும் ஏற்படுமாயின், விளைச்சல் குறைவடையும். இதன் காரணமாக உற்பத்தி திறன் சரிவடையும். இதன் காரணமாக உற்பத்தி செலவு அதிகரிப்பதுடன், தற்போது வீழ்ச்சி கண்டுள்ள இறப்பர் விலைகளை மேலும் மோசமடையச் செய்யும். இந்த காரணிகளால் பெருந்தோட்ட கம்பனிகள் பெருமளவு சவாலான சூழலை எதிர்கொள்ள நேரிடும்' என பேராசிரியர் நுகவெல மேலும் தெரிவித்தார்.

பரிந்துரைக்கப்பட்ட உர அளவை இடாததன் காரணமாக, குறைந்தளவான விளைச்சல் மற்றும் முழு தொழிற்துறைக்கும் குறைந்தளவு வருமானம் கிடைத்தல் போன்ற ஒரு நிலை ஏற்படும் என சுட்டிக் காட்டிய பேராசிரியர் நுகவெல, இந்த விடயம் தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து துரித தீர்வொன்றை காணுவதன் மூலம் பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கலான நிலையிலிருந்து விடுபட முடியும்' என்றார்.

பங்குதாரர்களின் இடையீடு

பெருந்தோட்டத்துறை என்பது நாட்டின் சமூக பொருளாதார துறையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆத்துடன், தேசத்தின் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. விசேடமாக தேயிலைத்துறை கடந்த ஆண்டிலும் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், விலைகளும் உயர்வடைந்துள்ளன. இலாபமீட்டும் வர்த்தகத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அனைத்து பெருந்தோட்ட பயிர்களுக்கும் அடிக்கடி உரம் இடுவதன் மூலம் தொழிற்துறையில் உற்பத்தி தரம் மற்றும் மண் வளம் போன்ற உறுதி செய்யப்படுவதுடன், அதிகளவு விளைச்சலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தற்போது நிலவும் பற்றாக்குறை காரணமாக, முழு தொழிற்துறைக்கும் பெரும் சவாலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.

உர செயலகம், போதியளவு உரத்தை கையிருப்பில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், அதிகளவான கேள்வி நிலவுகின்றமையால், விநியோகத்தர்கள் பெருமளவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

தொழிற்துறையை சேர்ந்தவர்கள் எதிர்காலம் குறித்து அதிகளவு விழிப்புணர்வுடன் திகழ்வதுடன், பிரச்சனைகளை அதிகாரசபைகள் கையாளும் விதம் தொடர்பிலும் தமது கரிசனையை செலுத்தியுள்ளன. பெருந்தோட்டத்துறையை நிலையான முறையில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தற்போதைய தேவையாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .