சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்கான லங்கா பிஸ்னஸ் கோலிஷன் நிறுவனம் (LBCH) கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி சவோய் திரையரங்கில் 'Swara' திரைப்படத்தை திரையிட்டது.

இலங்கையில் எயிட்ஸ் மற்றும் எச்ஐவி நோய்த்தாக்கம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் நீட்டா பெர்னான்டோவின் நடிப்பில் உருவான முழுநீள திரைப்படத்திற்கு தமது முழு ஆதரவினை வழங்கிய ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு அனுசரணையை வழங்கியிருந்தது.
LBCH நிறுவனத்துடன் ஜோன் கீல்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ், DFCC, பிரண்டிக்ஸ், MAS, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஜெட்விங் குழுமம், ஹேலீஸ் மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி போன்ற மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளடங்கலாக சுமார் 72 இற்கும் அதிகமான நிறுவனங்கள் அங்கத்துவம் வகிக்கின்றன. தொழில்நுட்ப ஆதரவை ILO, the EFC, UNAIDS, NSACP மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன வழங்கியிருந்தன.
இந்த செயற்குழுவின் தலைமை பதவியை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனிர்வன் கொஷ் டஸ்டிடார் வகிப்பதுடன், ஸ்டுவர்ட் சப்மன், சுரேஷ் டி மெல், நதீஜா தம்பையா, ஷர்மினி மென்டிஸ், சன்ஜீவனி டி சில்வா, மிரினாளினி தல்கொடபிட்டிய, காமலின் ஜயசூரிய, என்.ஜி.குலரத்ன, டாக்டர்.இந்திரா ஹெட்டியாராச்சி, அயோமி பெர்னான்டோ மற்றும் ஷெரோன் ஜயசுந்தர ஆகியோர் செயற்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த 'Swara' திரைப்படம் சர்வதேச எயிட்ஸ் தினத்திற்கு பொருத்தமான திரைப்படமாகும். இத் திட்டத்தின் ஊடாக எச்ஐவி நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வினை பரப்ப எண்ணுகிறோம். எதிர்காலத்தில் நாம் முன்னெடுக்கவுள்ள பல திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்' என LBCH இன் தலைவர் அனிர்வன் கொஷ் டஸ்டிடார் தெரிவித்தார்.
LBCH இன் பிரதம இயக்க அதிகாரி ஷர்மினி மென்டிஸ் கருத்து தெரிவிக்கையில்;, 'LBCH இனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எமது குழு அங்கத்தவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தாமாகவே முன்வந்து தமது நேரத்தைச் செலவிட்டு பாடுபடுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையடைகிறேன். இந்த ஆபத்தான விடயம் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களையும், ஆட்கொல்லி வைரஸிடமிருந்து இலங்கையின் தொழிற்படையினை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக பல திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 90பேர் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் திட்டங்களுள் ஓர் அங்கமாக, LBCH ஆனது இலங்கையின் மிகச்சிறந்த கூட்டுறவு அங்கத்துவ நிறுவனங்களிடையே விழிப்புணர்விற்கான தலையணை எனும் திட்டத்தை முன்னெடுத்ததுடன், ஊழியர்களுக்கான பயிற்சி செயலமர்வையும் ஏற்பாடு செய்திருந்தது. இத் தலையணை அண்மையில் தலைவர் டஸ்டிடார் அவர்களினால் Ceylon Tobacco நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.