2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சாந்தபுரம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் அபிவிருத்தியிலும் கூடிய கவனமெடுப்போம்:சந்திரகுமார் எம்ப

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாந்தபுரம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பிரதேச அபிவிருத்தியிலும் நாம் கூடிய கவனமெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேச மக்களின் மீளக்குடியமர்த்தும் நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"யுத்தத்தினால் இப்பிரதேசம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.  இன்னும் சில வாரங்களில் மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளது. ஆகவே மேலும் பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆகையால்,  அதற்கு முன்னர் நாம் விரைவாக உங்களுக்குரிய தற்காலிக வீடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டும். இதற்கு மாவட்டச் செயலாளரும் பிரதேச செயலாளரும் முழுமையாக உதவுவார்கள் எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக நிரந்தர வீடுகள் கிடைப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும். காணியில்லாதோருக்கு காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல உங்களுடைய பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விரைவில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளையும் அனுமதியையும் பெற்றுத் தரப்படும்.

மக்களைக் குழப்பும் வகையில் சிலரால் பரப்பிவிடப்படும் கதைகளையும் வதந்திகளையும் நீங்கள் நம்பக்கூடாது. மேலும் மேலும் நீங்கள் துன்பங்களைச் சந்திக்க இயலாது. உங்களுடைய துன்பங்களை வைத்தே அரசியல் நடத்துகின்ற அரசியல்வாதிகளையிட்டு  நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" எனவும் சந்திரகுமார் கூறினார்.

நேற்று 281 குடும்பங்களைச் சேர்ந்த 963 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ஏற்கனவே 26 குடும்பங்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிக்கான பாடசாலையான கலைமகள் வித்தியாலயம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .