2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

இந்தியா அன்பளிப்புச் செய்த விவசாய உபகரணங்கள் மாயம்

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் விவசாயத் தேவைக்கென, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள் காணாமற்போயுள்ளன. இருப்பினும், இது தொடர்பாக, இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து, 2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் மீள்குடியேறிய மக்களின் விவசாய அபிவிருத்திக்கென, இந்திய அரசாங்கத்தினால் உழவு இயந்திரங்கள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன.

இவற்றில், கடந்த 2013ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தின் பராமரிப்பில் இருந்த உழவு இயந்திரங்களின் உதிரிப்பாகங்களே காணாமற்போயுள்ளன. குறித்த உழவு இயந்திரங்களின் இழுவைப்பெட்டிகள், சுழல்கலப்பைகள் என்பனவே இவ்வாறு காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொருட்கள் காணாமற்போனமை தொடர்பாக, பல மாதங்களின் பின்னரே கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக, கமநலசேவை திணைக்களத்தினால் விசாரணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வன்னியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கென வழங்கப்பட்ட உதவிகள், உழவு இயந்திரங்கள், தெளிகருவிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள், விவசாயிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் கமநல சேவை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாயமாகியுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்று, விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .