2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

இம்முறை சேதனப் பசளைக்கு தட்டுப்பாடு ஏற்படும்?

Niroshini   / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள நெற்செய்கை மற்றும் மேட்டு நிலச்செய்கைகளுக்கு, 19 ஆயிரத்து 570 மெட்ரிக் டொன் சேதனப் பசளை தேவையான நிலையில், 1,520 மெற்றிக் டொன்  மாத்திரமே  உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில், அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை  மேற்கொள்ளப்படும் ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது. அதாவது, வடக்கு மாகாணத்தில் 50 சதவீதமான நிலப்பரப்புகளை கொண்ட பிரதேசத்தில், நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இந்த நிலையில், தற்போது பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  இரசாயன உரப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சேதனப் பசளை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் மட்டத்தில் பல்வேறு நெருக்கடி நிலைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, சேதனப் பசளை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் அவற்றுக்கான கழிவுப்பொருள்கள் குறிப்பாக, மாட்டெரு  மற்றும் கழிவு பொருள்களை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை காணப்படுகின்றது

இந்நிலையில், இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, கிளிநொச்சி மாவட்டத்தில், இம்முறை 28,280 ஹெக்டேயர்  நிலப்பரப்பில், நெற்செய்கை பயிரிடப்படவுள்ளது என பதிலளித்தார்.

தொடர்ந்து இது குறித்து விளக்கமளித்த அவர், இதற்கென 14,390 மெற்றிக் டொன் சேதன உரம் தேவையாக இருக்கின்றது எனவும் இதைவிட, உப உணவுச் செய்கை உள்ளடங்கலாக 19 ஆயிரத்து 570 மெற்றிக் டொன்  சேதனப் பசளை தேவைப்பாடு காணப்படுவதாகவும் கூறினார்.

இருப்பினும்,  மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட சேதனப் பசளை உற்பத்தியாளர் மூலம் 1,520 மெட்ரிக் டொன் சேதன உரத்தை மாத்திரம் உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதாவது, சிறிய அளவிலான 2,144 உற்பத்தியாளர்கள் 1,020 மெற்றிக் டொன் சேதனப் பசளையையும்  நடுத்தர அளவிலான 99 உற்பத்தியாளர்கள் 180 மெற்றிக் டொன்  உரத்தையும் பெரிய அளவிலான 36 சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் 320 மெற்றிக் டொன்  சேதன உரத்தையும் என 1,554 உற்பத்தியாளர்கள் 1,520 மெற்றிக் டொன் சேதன உரம் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 
இதேவேளை, உற்பத்தி செய்யப்பட்ட சேதன உரத்தின் தரம் அல்லது மாவட்டத்தில் உள்ள வர்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்ற சேதன உரங்கள் தொடர்பிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X