2021 மே 08, சனிக்கிழமை

’உழுந்தை 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யவும்’

Niroshini   / 2021 ஜனவரி 31 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-க. அகரன்

ஒரு கிலோகிராம் உழுந்தை 500 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்து, இலாபத்தைப் பெற்றுக்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை வேண்டுமென்று, வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரசாங்கம் உழுந்து இறக்குமதியை நிறுத்தியிருந்ததாகவும் அரசாங்கத்தால் 16 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில். உழுந்துக்கான உத்தரவாத விலை 220 ரூபாயாக குறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போது சில்லறை விலையாக ஒரு கிராம் கிலோ உழுந்து சில மாபியாக்களால் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதால், உழுந்தை இறக்குமதி செய்யவேண்டும் என பலரும் கூறி வருகின்றனர் எனத் தெரிவித்த அவர், இம்முறை உழுந்து விதையை ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்கி, பயிர்ச் செய்தும் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியையே எதிர்நோக்கியுள்ளோம் எனவும் கூறினார்.

சராசரி ஒரு ஏக்கருக்கு 350 கிலோ கிராம் உழுந்து கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஆனால் மழை பாதிப்பால் 150 கிலோ கிராம் தொடக்கம் 250 கிலோகிராம் வரையிலான விளைச்சல் மட்டுமே கிடைக்கின்றதெனவும் கூறினார்.

பல இடங்களில், பாரிய அழிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், காப்புறுதியை அறிமுகப்படுத்தியும் பலர் ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறினார்.

மிக விரைவில் அநுராதபுர மாவட்டத்தின் உழுந்தும் சந்தைக்கு வரவுள்ளதாகவும் அங்கும் விளைச்சல் குறைவு என்பதுடன் பாதிப்புக்களும் உள்ளன உனவும், அவர் கூறினார்.

'இவ்வளவு இடர்களுக்கும் மத்தியில் உழுந்தை உற்பத்தி செய்தால், மாபியாக்களால் மொத்த கொள்வனவு விலையானது கிலோகிராமுக்கு 1,300 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது உற்பத்திகள் சந்தைக்கு வரும்போது வழமையாக இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படும் மாபியா வேலை ஆகும்.

'எனவே, விவசாயிகள் இயலுமானவரை தமது உற்பத்திகளை விற்பனை செய்யாது, சிறிது காலம் பாதுகாப்பாக வைத்திருந்து, விற்பனை செய்வதுடன், சில்லறை விற்பனையிலும் ஈடுபட முடியும்' எனவும், இ.விஜயகுமார் தெரிவித்தார்.

விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகவே, ஒரு கிலோகிராம் உழுந்துக்கு குறைந்தபட்சம் 460 ரூபாய் விலையை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்திருந்ததாகத் தெரிவித்த அவர், விவசாய திணைக்கத்தின் விதைகள் பிரிவும் விரைவில் விதை நோக்கத்துக்காக கொள்வனவை ஆரம்பிக்க உள்ளனர் எனவும் இதன்போது குறைந்தபட்சம் 600 ரூபாயாக நிர்ணயிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் கூறினார்.

இவ்வருடம் ஜனவரியில், வவுனியா - செட்டிகுள பிரதேச விவசாயிகள் அனைவரும் இணைந்து, குறைந்தபட்சம் ஒரு கிலோகிராம் உழுந்தை 500 ரூபாயாக விற்பதாக தீர்மானம் எடுத்துள்ளார்கள், எனவும், இ.விஜயகுமார் தெரிவித்தார்.

எனவே, இயலுமானவரை 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து இலாபத்தைப் பெற்றுக்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை வேண்டுமென்றும் முடியாத சந்தர்ப்பத்தில் மட்டும், கமநல சேவைகள் நிலையத்துக்கு 460 ரூபாய் வீதம் கையளிக்க முடியுமென்றும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X