2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; நகர சபை தவிசாளர் விளக்கம்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

“நான் நினைத்தபடியே செய்தியை அறிக்கையிடுவேன்” என தெரிவித்ததன் காரணத்தாலேயே, மன்னார் நகர சபையின் 20ஆவது அமர்வில், செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, மன்னார் நகர தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (21) நடைபெற்ற மன்னார் நகர சபையின் 20ஆவது அமர்வின் போது, ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக, செய்தி வெளியாகியது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனைத் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கடந்த மாதம் நடைபெற்ற மன்னார் நகர சபையின் 19ஆவது அமர்வுக்கு வழமை போன்று ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனரெனவும் இதன்போது, குறித்த ஊடகவியலாளர் மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிக்கையிடாது, நகர சபையின் உறுப்பினர் ஒருவர் முன்வைத்த தனிப்பட்ட கருத்துகளை மாத்திரமே செய்தியாக அறிக்கையிட்டதாகவும் தெரிவித்தார்.

குறித்த உறுப்பினரின் கருத்துக்கு சபை தவிசாளர் என்ற வகையில் தான் பதில் வழங்கியதாகத் தெரிவித்த அவர், ஆனால் தனது கருத்தைப் பதிவு செய்யாது, குறித்த உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டை மாத்திரமே அந்த ஊடகவியலாளர் செய்தியாக வெளியிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இச்செய்தி தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மன்னார் நகர சபையின் 20 அமர்வில் வைத்து, குறித்த ஊடகவியலாளரை தனிப்பட்ட முறையில் அழைத்து ​தௌவுபடுத்தியதோடு, அது தொடர்பில் வினவியதாகத் தெரிவித்த தவிசாளர், அதற்கு “நான் நினைத்த படி தான் எழுதுவேன்” என குறித்த ஊடகவியலாளர் பதில் வழங்கியதாகவும் சாடினார்.

இதன் காரணமாகவே, மன்னார் நகர சபையின் 20ஆவது அமர்வில், அவருக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதென, தவிசாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .