2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடற்படை வீரர் மீது தாக்குதல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடற்படை வீரர் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, குறித்தக் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரையும், தொடர்ந்தும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, நேற்று திங்கட்கிழமை(24) உத்தரவிட்டார்.   

முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களையும் கடந்த 21ஆம் திகதி சிலாபத்துறை பொலிஸார் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் , ஏற்கெனவே, உத்தரவிட்டிருந்தார்.   

இந்த நிலையில், குறித்த 6 சந்தேகநபர்களும் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான கடற்படை வீரர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், நேற்றைய தினம், நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.   

இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.   

இந்த நிலையில், முத்தரிப்பு துறை கிராமத்தைச் சோர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், மன்னார் நீதிமன்றத்தை நேற்று சூழ்ந்து கொண்டிருந்தனர்.   

கடந்த 18 ஆம் திகதி இரவு முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் செல்ல முற்பட்ட சந்தேகநபரை துரத்திப்பிடித்து கிராம மக்கள், தாக்கியுள்ளனர்.   

அதனையடுத்து, குறித்த நபர், கடற்படை வீரர் என தெரிய வந்த நிலையில், கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. முத்தரிப்புத்துறை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட கடற்படை வீரரைக் காப்பாற்ற சிவில் உடையில் சென்ற மற்றுமொரு கடற்படை வீரரும் தாக்கப்பட்டுள்ளார்.   

இதேவேளை, மன்னார் முத்தரிப்புத்துறையில் கடற்படை வீரரைத் தாக்கியதாக பொலிஸாரால் குறிப்பிடப்பட்ட 11 பேரில், மூன்று பேர் நேற்றைய தினம் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .