2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கரும்பு தோட்டக் காணி பொதுமக்கள் வசமானது

Niroshini   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள கரும்பு தோட்டக் காணியானது, பொதுமன்னளின் பயன்பாட்டுக்காக, நேற்று (04) கையளிக்கப்பட்டது.

குறித்த கரும்பு தோட்டக் காணியானது, அரச காணியாக பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த காணியை, 2018ஆம் ஆண்டு முதல் வடக்கில் பிரபல அரச அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதேச மக்களின் முயற்சியால் குறித்த காணியை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்குமாறு கோரிக்கைகள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் ருசாங்கன் தலைமையில், நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில், கரைச்சி பிரதேச செயலாளர், நில அளவையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அந்தக் காணியை கையளித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், 196 ஏக்கர் அரச காணி, மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்படுகின்றது என்றார்.

குறித்த காணியைப் பகிர்ந்தளிப்பதற்கென, 12 கிராம மட்ட அமைப்புக்களால்  196 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, கிராம சேவையாளரின் சிபாரிசுடன், இந்தக் காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன எனவும், அவர் தெரிவித்தார்.

'குறித்த விவரம் கமநல சேவைகள் திணைக்களத்திடம் உறுதிப்படுத்தலுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மக்களிடம் கையளிக்கப்படும். அத்துடன், குறித்த காணியில் ஏறத்தாள 150 ஏக்கர் மாத்திரமே வயற்காணியாகும். ஏனையவை மேட்டுநிலமாகும். அதற்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும்' எனவும், அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த காணியில் கரும்பு செய்கையே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அவர், அதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை குறித்த காணிகளை மக்கள் பயன்படுத்தி செய்கை மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து கருத்துரைத்த கிராமமட்ட அமைப்பின் பிரதிநிதி சாம்;, இந்தக் காணியை, 2018ஆம் ஆண்டில் ஒருசிலர் ஆக்கிரமிக்க முயன்றனர் எனவும் அதற்கு அப்போதைய முதலமைச்சரும் உடந்தையாக இருந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.

'காணியை துப்புரவு செய்து செய்கை மேற்கொள்ள நாம் முயற்சி எடுத்தபோது பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

'மேலும், கரும்பு செய்கை மேற்கொள்ளும் வரை நாம் காலபோகத்தை மேற்கொள்வோம்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X