2025 ஜூலை 24, வியாழக்கிழமை

‘காத்திருந்த விடயங்கள் மேற்கொள்ளப்படவில்லை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 “எமது மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மனிதாபிமான கரிசனைக்குரிய விடயங்கள் எவையும் மக்கள் திருப்தி அடையும் வகையில் மேற்கொள்ளப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறிதரன், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் 

அண்மைக் காலமாக, வட மாகாணத்தில் நடைபெற்று வருகின்ற அமைதியற்ற சூழலை உருவாக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அக்கடித்தில், “அண்மைக் காலமாக வட மாகாணத்தில் நடைபெற்று வருகின்ற அமைதியற்ற சூழலை உருவாக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து தங்களின் உயர்வான கவனத்துக்கு கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகின்றேன்

நல்லாட்சி அரசு மீது நாமும் எமது மக்களும் கொண்டிருந்த அதிக நம்பிக்கையின் காரணமாகவே நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிவீர்கள். 

எமது மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மனிதாபிமான கரிசனைக்குரிய விடயங்கள் எவையும் மக்கள் திருப்தி அடையும் வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அரசாங்கம் நன்கறியும். 

அரசாங்கத்தின் தொடர்ச்சியான தமிழ் மக்கள் மீதான மெத்தனப் போக்கு அதன் மீது எமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை விரைந்து பலமிழக்கச் செய்கின்றது என்பதை சமகால களநிலவரங்கள் பிரதிபலிக்கின்றது.

விசேடமாக, வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னால் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிஉறுப்பினர்கள் இருப்பதான தோற்றம் பிரமாண்டமான முறையில் வெளிக்காட்டப்படுகின்றது. 

மதிப்பிற்குரிய நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கொக்குவில் நந்தாவில் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலின் பின்னால் புலி உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவிக்கும் பொலிசார் அவர்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் யார் என்பதை இனம்காட்டத் தவறி வருகின்றனர். 

இந்நிலமை, ஏனைய முன்னாள் போராளிகளுக்கிடையே அச்சத்தை உருவாக்கி அவர்களுக்கு நிம்மதியற்ற ஒரு எதிர்காலத்தை உருவாக்கி வருகின்றது.

அதிவிசேடமாக, 2009ஆம் ஆண்டில் இறுதி யுத்தம் நிறைவு பெற்றபோது பன்னாட்டுச் சமூகங்களின் பரிந்துரையின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த அனைத்துப் போராளிகளுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். 

புனர்வாழ்வு என்பது விடுதலைப் புலிகள் அவர்கள் புரிந்ததாக அரசாங்கம் கருதிய குற்றங்களுக்கு ஒட்டுமொத்த தண்டனையாகவே வழங்கப்பட்டது என்பதைத் தாங்களும் தங்களின் அரசும் நன்கறிவீர்கள். 

ஆனால், கடந்த வாரம் வவுனியா உயர் நீதிமன்றத்தில் தனிநபரான நாகரட்ணம் ஜெயபாலன் என்பவர் முன்னாள் போராளியான திரு.கணேசசுந்தரம் கண்ணதாஸ் (கண்ணதாசன்) என்பவர் முன்னாள் விடுதலைப்புலி அமைப்பில் இருந்த போது அவர் செய்த செயல் ஒன்றிற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இது நீதித்துறைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில் பொருத்தமாக இருந்தாலும் 30 வருட கால போரை நிறைவுக்கு கொண்டு வந்து, 60 வருட கால இன முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் தத்துவங்களுக்கு பொருத்தமானது அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்று நிற்கின்ற போது அதன் தலைமைத்துவக் கட்டளைகளை நிறைவேற்றியவர்களே போராளிகள் அவ்வாறான செயல்களுக்கு அவர்களுக்கு தண்டனையும் கொடுத்து புனர்வாழ்வும் அளித்து விட்டு அதே குற்றங்களுக்காக மீண்டும் தனிநபர் வழக்குகளை ஏற்றுக்கொள்ள முனைந்தால் பாரதூரமான சமூக விளைவுகள் ஏற்படும் என்பதுடன், தொடர்ந்து முன்னாள் போராளிகள் வாழ்வில் தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற போது அவர்களுடைய சிந்தனை,செயற்பாடுகளில்விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நிலைமை நல்லாட்சி அரசுக்கும் அதன் நல்லிணக்கம் நோக்கிய பயணத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தி விடும் எனவும் அஞ்சுகின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களின் பாரதூர தன்மைகளைச் சரிவர விளங்கிக்கொண்டு முன்னாள் அரசியல்துறைப் போராளி கண்ணதாசனுக்கு அவர் ஏற்கெனவே பெற்றுக்கொண்ட தண்டனை, புனர்வாழ்வு என்பவற்றுடன் அவரது கல்வித் தகைமை மற்றும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராகக் கடமையாற்றுதல், அவரது நல்லொழுக்கம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தங்களின் கருணை மிகு பொது மன்னிப்பை அவர்களுக்கு வழங்குவதுடன், அண்மைக் கால குற்றச்செயல்களுடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தும் பின்னணிச் சக்திகள் பற்றியும் கண்டறிந்து நீண்ட காலங்களாகவே துன்பங்களைச் சந்தித்து வரும் போராளிகளின் வாழ்வு, அமைதியான எதிர்காலம் ஒன்றை நோக்கி பயணிப்பதற்கு விரைவானதும் பொருத்தமானதுமான ஓர் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .