2025 மே 21, புதன்கிழமை

சஜித்தின் வவுனியா நிகழ்வை புறக்கணித்த கூட்டமைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூதாகாரமாகியுள்ள நிலையில், வவுனியாவில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் மாதிரிக் கிராம வீட்டுதிட்ட கையளிப்பு நிகழ்வை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

'செமட்ட செமன' திட்டத்தின் கீழ் புதிய மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவால் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் முல்லைத்தீவு சென்று மாதிரிக் கிராமங்களை யைளித்திருந்தார். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், தமிழ் மக்களை மீட்கின்ற தேவனாக அவர் வர வேண்டும் என ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெரிவித்திருந்தார்.

வியாழக்கிழமை, மன்னாரில் அமைச்சர் சஜித், மாதிரிக் கிராமங்களை திறந்து வைத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன், சஜித்தை ஏழைகளின் எம்.ஜி.ஆர் ஆக புகழ்ந்தும் உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்து வருவதுடன், தற்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் எழுந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்க பின்னடித்து வரும் நிலையில், கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேடையேறி சஜித் சார்பாக பேசியிருந்தனர். ஆனால் தற்போது  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ள நிலையில் அமைச்சர் சஜித்தின் நேற்றைய  நிகழ்வுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர்.

பிரதமர் ரணிலுடனான நெருக்கம் காரணமாகவே, அமைச்சர் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என சில கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினாலும், நிகழ்வில் கூட்டமைப்பினர் கலந்து கொள்ளாது தவித்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, நிகழ்வின் பதாதையில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .