2025 மே 15, வியாழக்கிழமை

சன்னார் கிராம மக்கள் போராட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் பகுதியில் உள்ள அரச காணிகளை அரச அதிகாரிகள் சிலர்   தனியாருக்கு உரிய அனுமதிப்பத்திரம் இன்றி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாந்தை அப்பகுதி மக்களால்,  இன்று  (28) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

“சன்னார் கிராமத்தில் நாங்கள் குடியேற்றம் செய்யப்பட்டு, பல வருடங்கள் கடக்கின்ற போதும், தமது குடியேற்றத்துக்கு அரை ஏக்கர் காணி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

“ஆனால் இன்று வரை தமக்கு விவசாய காணி வழங்கப்படவில்லை. நாங்கள் குடியேற்றம் செய்யப்பட்ட போது 2 ஏக்கர் விவசாய காணி தருவதாக அதிகாரிகள் கூறிய போதும் இன்று வரை விவசாய காணி வழங்கப்படவில்லை.

“ஆனால் அரச அதிகாரிகள் வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கும் வேறு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பல ஏக்கர் காணிகளை காடு  அழித்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கி வருகின்றனர்” என, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்ட இடத்துக்கு வருகை தந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது காணி பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுனருடன் உரையாடிய விடயங்கள் தொடர்பாக மக்களிடம் தெரியப்படுத்தினர்.

குறிப்பாக அரச காணிகளை மக்களுக்கு விவசாய செய்கைக்கு பகிர்ந்து வழங்குமாறும் தனியாருக்கான காணிகள் காணப்பட்டால் உறுதி பத்திரத்தின் அடிப்படையில் தனியாருக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பிரதேசச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று மக்களுக்கு சார்ள்ஸ் எம்.பி தெரியப்படுத்தினார்.

இதையடுத்து, போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார், காணி துப்புரவு செய்யும் பணியை தற்காலிகமாக இடை நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .