2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’சர்வதேசம் கூட இன்று வரை பதில் தரவில்லை’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக நீதி கோரியும்  தமக்கான ஒரு நல்ல பதிலை, சர்வதேசம் கூட இன்று வரை தரவில்லையென்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத் தலைவி, செயலாளர் ஆகியோர், இன்று (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவ்வாறு குற்றஞ்சாட்டினர்.

இதன் போது, கருத்துரைத்த சங்கத்தின் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா, மக்களுக்கு தெரியாமல் இரகசியமான முறையில், காணாமல் போனோர் அலுவலகங்கள உருவாக்கப்படுவதன் மர்மம் என்ன என்பது  கூட விளங்காமல் இருக்கின்றது என்றார்.

'இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் எங்களுடைய உறவுகள் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, எங்களுடைய உறவினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருந்தால், அவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுங்கள்'  என்றும், அவர் தெரிவித்தார்.

அண்மையில், கொழும்பில் இருந்து புலனாய்வுப் பிரிவினர் வருகை தந்து, 'உங்களுடைய மகன் கொழும்பில் இருக்கிறார். வாருங்கள் பார்ப்போம்' என்று, தன்னிடம் கூறினார்கள் என்றும் ஆனால் அங்கு அவர் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்துவதற்கு, புகைப்படத்தைக் கொண்டு வந்து காட்டுமாறும் அல்லது தொலைபேசி ஊடாக அவரோடு கலந்துரையாடுவதற்கு ஒழுங்கு செய்து தருமாறும் கடந்த மாதம் 31ஆம் திகதி வந்தவர்களிடம் கோரியிருந்ததாகவும் ஆனால் இன்று வரை எந்தவிதமான பதிலும் இல்லை என்றும், பிரபாகரன் றஞ்சனா கூறினார்.

ஆகவே, இவ்வாறான இழுத்தடிப்பு செயற்பாடுகளை தவிர்த்து, ஐக்கிய நாடுகள் சபையின் 48ஆவது கூட்டத் தொடரிலேனும்  தங்களுடைய பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, நல்ல பதிலை, சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X